அரசுக்கு சொந்தமான ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் (Rakna Arakshaka Lanka) தொடர்பாக கோப் என்ற பாராளுமன்றத்தின் பொதுத் தொழில்முயற்சிகள் தொடர்பான குழுவின் உபகுழு விசாரணை நடத்தியபோது பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இந்த விசாரணையின் போது, அவன்ட் கார்ட் (Avant Garde) நிறுவனத்திடமிருந்து ரக்னா லங்காவுக்கு கிடைக்க வேண்டிய 30 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக அறவிட நடவடிக்கை எடுக்குமாறு கோப் உபகுழுத் தலைவர், ரக்னா லங்கா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்தத் தொகையை அவன்ட் கார்ட் நிறுவனம் செலுத்த மறுத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரக்னா லங்கா நிறுவன அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.
அத்துடன் ரக்னா லங்கா நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் அவன்ட் கார்டுடன் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த கூட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விளக்கம் பெறுவதற்காக நிறுவன அதிகாரிகள் உபகுழுவிற்கு அழைக்கப்பட்டபோது வெளிப்படுத்தப்பட்டது.
விசாரணையில், இலங்கை கடற்படை, ரக்னா லங்கா மற்றும் அவன்ட் கார்ட் ஆகியவை கடல்சார் பாதுகாப்பு சேவைகளை வழங்க பல்வேறு காலங்களில் ஒப்பந்தங்களில் ஈடுபட்டிருந்ததாகவும், அந்த ஒப்பந்தங்களின் மூலம் கிடைத்த வருவாயில் 80 சதவீதம் அவன்ட் கார்ட் நிறுவனத்துக்கே சென்றதாகவும் ரக்னா லங்கா அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
ரக்னா லங்கா தலைவர், ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜூட் பெர்னாண்டோ, இந்த ஒப்பந்தத்தை தற்போதைய நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்றும், முன்னாள் நிர்வாகம் கையெழுத்திட்ட ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச கடல் சட்டங்களின்படி இலங்கை கடல் எல்லையை கடக்கும் கப்பல்களில் உள்ள ஆயுதங்களை கரைக்கு கொண்டு வர முடியாததால், அவை காலி துறைமுகம் அருகிலுள்ள மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களில் பாதுகாப்பாக வைக்கப்படுவதாக அவர் விளக்கியுள்ளார்.
இந்த சேவைக்காக மூன்று ஆயுதங்களை சேமிக்க சுமார் 1,800 அமெரிக்க டொலரும், பின்னர் அவற்றை மீண்டும் கப்பலுக்கு ஒப்படைக்க மேலும் 1,800 டொலரும் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
கூட்டு ஒப்பந்தத்தின் கீழ், மொத்த இலாபத்தில் 80% அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கும், 15% இலங்கை கடற்படைக்கும், 5% மட்டுமே ரக்னா லங்கா நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசின் புதிய கொள்கையின் அடிப்படையில், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்க முடியாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக மீண்டும் இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இதன்போது அறிவிக்கப்பட்டது.
முன்னதாக அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவரான நிஸ்ஸங்க சேனாதிபதி, கோட்டாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவருக்குச் சாதகமாக இந்த ஒப்பந்தம் அமைக்கப்பட்டதாகப் பாராளுமன்ற குழு மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவுகளின் விசாரணைகளில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாகத் தனிநபர் ஒருவருக்குச் சட்டவிரோதமாக மிதக்கும் ஆயுதக் கிடங்கு நடத்த அனுமதி வழங்கியதன் மூலம், அரசுக்கு 75 மில்லியன் டொலருக்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவன்ட் கார்ட் தலைவருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



