ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசரச் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.

இந்தச் சட்டமானது ரஷ்யாவின் வலுசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளை இலக்கு வைப்பதுடன், ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் மூத்த அதிகாரிகளையும் குறிவைக்கிறது.

மேற்கத்திய நாடுகளின் தடைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரஷ்யாவின் ‘நிழற்படைக் கப்பல்களை’ (shadow fleet) இலக்கு வைக்கும் இச்சட்டம், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெருமளவில் வாங்கும் நாடுகளுக்கு 100% வரை தீர்வை வரிகளை (Tariffs) விதிக்கும் அதிகாரத்தை ட்ரம்பிற்கு வழங்குகிறது.

இது ரஷ்யாவின் போர் வருவாயைத் துண்டிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்துவதோடு, சீனா மற்றும் இந்தியாவையும் பாதிக்கக்கூடும்.

குடியரசுத் கட்சி ஆதிக்கம் செலுத்தும் பிரதிநிதிகள் சபை புதன்கிழமை இச்சட்டமூலத்தை 262-159 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றியது.

ரஷ்ய இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நபர்களை இலக்கு வைப்பதுடன், ஈரானுடன் தொடர்புடைய பொருளாதாரத் தடைகளையும் இச்சட்டம் விரிவுபடுத்துகிறது.

இருப்பினும், வரிகளை விதிக்கும் வரம்பற்ற அதிகாரம் ட்ரம்பிற்கு வழங்கப்படுவதை எதிர்த்து சில ஜனநாயகக் கட்சியினர் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இவர்கள் உக்ரைனை ஆதரித்தாலும், வர்த்தக ரீதியான முழு அதிகாரத்தையும் ட்ரம்பிற்கு வழங்குவதை எதிர்க்கின்றனர்.

அமெரிக்க காங்கிரஸின் இந்நடவடிக்கை ஒரு நல்ல குறியீடு எனக் குறிப்பிட்ட உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி, அமெரிக்க சட்டமியற்றுபவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.