நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (4) விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார். மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மலையகத்தின் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி உட்பட பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் நாளை (04) காலை வரை மழை வீழ்ச்சி தொடரக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மலையகத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதேநேரம் மலையகத்தின் பல இடங்களில் வீதி போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



