தொல்லியல் ஊடாக சட்டரீதியாக தமிழ் மக்களின் காணிகளை சிதைக்கும் திட்டம் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

“வடக்கு – கிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என்ற பெயரில் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் தற்போதைய அரசு செய்து வருகிறது” என்று பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

”மிக முக்கியமாக தற்போதைய அரசு பல வாக்குறுதிகளை தந்திருந்தது. இருந்தபோதும் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை சம்பந்தமாக இந்த அரசு ஆட்சியை பொறுப்பேற்று ஒன்றரை வருடம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நெருக்கடியான சூழ்நிலை இருக்கிறது.

அதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஒரு பூரணப்படுத்தப்படாத தீர்வாக இருக்கின்ற விடயமாக இருந்தாலும் 13 வது திருத்தச்சட்டம் மூலம் கிடைத்த அந்த மாகாணசபை தொடராமல் அல்லது அது உறுதிப்படுத்தப்படாமல் இருக்கின்ற நிலைமை தொடர்கிறது” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தமிழ் மக்களின் வாழ்வாதார பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கான விடயங்கள் கூட பாரியளவில் முன்னெடுக்கப்படாமல் இருக்கிறது என்றும் அவர் விசனம் வெளியிட்டார்.