ஈழத்தமிழரின் இறைமையை உள்வாங்க சிங்களத் தலைமைகளின் யாழ்ப்பாணப் படையெடுப்பு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 291

சிறிலங்காவில் இவ்வாண்டு நடைபெற வேண்டிய நிலையில் உள்ள சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் என்பது 1978 முதல் நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல். இத் தேர்தலைத் எப்படி எதிர்கொள்வது என ஈழத்தமிழ் அரசியல்வாதிகளிடை பலத்த போட்டி. போட்டியின் வேகத்தில் ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றுப் பரிணாமத்தையே முடக்குகிற கருத்துக்கள் செயற்பாடுகள் ஈழத்தமிழரிடையே படுவேகம் பெறுகிறது. அவைகளை எல்லாம் இங்கு மீள்பதிவு செய்யாது ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றின் பரிணாம வளர்ச்சியின் முக்கிய கூறுகளை மீள்பதிவு செய்வது ஈழத்தமிழர்களுக்குக் குறிப்பாக இளையவர்களுக்கு தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் திட்டமிட உதவும் என்பது இவ்வார இலக்கின் எண்ணமாகவுள்ளது.
பிரித்தானியக் காலனித்துவ அரசினால் கைப்பற்றப்பட்டிருந்த ஈழத்தமிழர்களின் இறைமையைச் சிங்களவர்களின் இறைமையுடன் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமையுள் பகிர்வதற்கு பிரித்தானிய காலனித்துவ அரசினால் விதந்துரைக்கப்பட்ட சோல்பரி அரசியல் அமைப்பின் 29(2) விதியை மீறி தன்னிச்சையாக மரபுவழிப் பாராளுமன்றக் கட்டிடத்துக்கு வெளியே நவரங்கலாவில் சிறிலங்காவின் ஈழத்தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு உறுப்பினர்களின் பங்கேற்பு இல்லாது தன்னிச்சையாக இயற்றப்பட்ட 22.05.1972ம் திகதிய சிங்கள பௌத்த சிறிலங்கா குடியரசின் அரசியல் சட்டம் ஈழத்தமிழர்களை அரசற்ற தேசஇனமாக்கியது (Nation Without State). இந்த அரசியல் சாசனத்தை அடிமைச்சாசனமென ஏற்க மறுத்து யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள நாவலர் வளாகத்தில் கிழித்து எறிந்து தீவைத்து, காங்கேசன்துறைச் சிறிலங்காப் பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டு விலகி, அத்தேர்தலை ஈழத்தமிழர்களின் அடையாளக் குடியொப்பமாக்கி 1975இல் அதில் பெற்ற அறுதிப் பெரும்பான்மையின் அடிப்படையில் அக்கால ஈழத்தமிழர்களின் தலைவர் சா.ஜே. வே. செல்வநாயகம் சிறிலங்காப் பாராளுமன்றத்துள் தனியாட்சி உரிமைப் பிரகடனத்தை அனைத்துலகச் சட்ட முறைமைகளுக்கு ஏற்ப சனநாயக வழியில் பிரகடனப்படுத்திச் சிறிலங்காப் பாராளுமன்ற ஆட்சியில் இருந்து விலகி ஈழத்தமிழர்களின் தன்னாட்சிப் பிரகடனத்தைச் செய்தார். அந்தப் பிரகடனம் “வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகக் காலனித்துவ காலம் வரை இலங்கைத் தீவில் ஈழத்தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சமமான தனித்தனியான இறைமையுள்ள மக்களாக வாழ்ந்து வந்தனர். காலனித்துவத்தில் இருந்து சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈழத்தமிழ் மக்கள் தங்களுடைய சுதந்திரத்தை மீளப்பெறுவோம் என்ற முழுநம்பிக்கையுடனேயே முன்னணியில் நின்று போராடினர். கடந்த 25 ஆண்டுகாலத்தில் ஒன்றுபட்ட இலங்கையுள் சிங்களவர்களுக்குச் சமமானவர்கள் என்ற அடிப்படையில் எங்களுடைய அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் செய்துள்ளோம். துக்கமான உண்மை என்னவென்றால் தொடர்ந்து வந்த சிங்கள அரசாங்கங்கள் பிரித்தானிய காலனித்துவ அரசு வழங்கிய சுதந்திரத்தால் கிடைத்த அதிகாரப் பெருக்கைப் பயன்படுத்தி எங்களது அடிப்படை மனித உரிமைகளை மறுத்து எங்களை இரண்டாந்தர குடிகளாக்கி அடிமைப்படுத்தியுள்ளனர். தமிழர்களுடைய இறைமையையும் சிங்களவரின் இறைமையையும் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் இருவருக்கும் பொதுவான இறைமையாக்கியதைப் பயன்படுத்தியே சிங்களவர்களால் தமிழர்களை அடிமைப்படுத்த முடிந்தது. நான் உலகத்துக்கும் எனது மக்களுக்கும், இந்தத் தேர்தலில் தமிழீழ மக்கள் அவர்களிடம் உள்ள அவர்களது இறைமையைப் பயன்படுத்தி எனக்கு அளித்த தீர்ப்பாக தமிழ் ஈழ மக்கள் விடுதலை பெற்ற மக்களாகின்றார்கள் என்பதை அறிவிக்கின்றேன். தமிழர் கூட்டணியின் சார்பாக நாங்கள் இந்த மக்கள் ஆணையை முன்னெடுப்போம் என முழுமையாக பிரகடனப்படுத்துகின்றேன்.” என்பதாக அமைந்தது ஈழத்தமிழர் வரலாறு.
இந்தத்தன்னாட்சிப் பிரகடனமே 14.05.1976 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாவது மாநாடு பண்ணாகமத்தில் நடந்த பொழுது வட்டுக்கோட்டைத் தீர்மானமாக அந்த மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய தமிழ்க்கட்சிகள் அனைத்தாலும் ஏற்கப்பட்டு ஈழத்தமிழர்களின் அரசியல் கொள்கையாக்கப்பட்டு 1977 இல் மக்கள் குடியொப்பத்தின் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் கோட்பாடாக உலகுக்குத் தெளிவாக்கப்பட்டது. அத்துடன் 1977ம் ஆண்டின் தேர்தல் கொள்கைத் திரட்டு மிகத் தெளிவாக ‘இலங்கையின் தேசிய அரச சபைக்குத் தெரிவு செய்யப்படும் தமிழ் உறுப்பினர்கள் தங்களைத் தமிழீழ தேசிய சபை உறுப்பினர்களாகக் கட்டமைத்து தமிழ் ஈழத்தின் அரசியலமைப்பை உருவாக்கி அதனை அமைதியான முறையிலோ அல்லது நேரடிச் செயற்பாடுகள் மூலமோ அல்லது போராட்டத்தாலோ தமிழ் ஈழத்தின் சுதந்திரத்தை நிறுவுவர்’ எனவும் விளக்கி அதற்கான மக்களாணையும் 1977 பொதுத்தேர்தலைக் குடியொப்பமாக மாற்றியதன் மூலம் பெறப்பட்டது. இந்த வரலாற்றுப் பரிணாமத்தில் 1978 முதல் 2009 வரை தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிளை பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ நடைமுறையரசு இலங்கைத்தீவில் இரு அரசுக்கள் என்ற அதன் வரலாற்று நிலையில் செயற்பட்டதும் அதனைச் சிறிலங்கா 2009 இல் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு படையெடுப்பு மூலம் தமிழ் ஈழத் தேசமக்களையும் தேசத்தின் உட்கட்டுமானங்களையும் செயலிழக்கச் செய்தது. இதன்வழி நடைமுறையில் மீளவும் படைபலத்தால் ஈழத்தமிழர்களின் அரசியல் பணிவைப் பெறும் ஆக்கிரமிப்பு அரசாகவே கடந்த 15 ஆண்டுகளாகச் சிறிலங்கா ஆட்சி தொடர்கிறது. இந்த ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றுப் பரிணாமத்தைத் திசை திருப்புவதற்கான சிங்களக் கட்சிகளின் தலைமைகளின் படையெடுப்பு வடக்கில் வேகமாகியுள்ளது. இந்நேரத்தில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் உண்மை வரலாற்றைப் பேசவைக்கவே இந்த ஈழத்தமிழரின் அரசியல் பரிணாமவரலாறு சுருக்கமாகப் பதியப்பட்டது. ஈழத்தமிழர்களுக்கு எனத் தனியான இறைமை இல்லையென்று ஈழத்தமிழர்களைக் கொண்டே அரசியல்படுத்தலும் ஈழத்தமிழர்கள் சிறிலங்காவின் ஆட்சிக்குள் தமக்கான தீர்வுகளைப் பெறும் விருப்புள்ளவர்கள் என்பதால் அவர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்கிறது என்பதால் எந்த அனைத்துலக நாடோ அல்லது அமைப்புக்களோ ஈழத்தமிழர்களின் வெளியகத்தன்னாட்சி உரிமையினை ஏற்க இயலாது என ஈழத்தமிழரைக் கொண்டே அவர்களைத் தேர்தலின் முக்கிய பங்காளராக்கி உலகுக்கு வெளிப்படுத்தலும் என்கின்ற இரு இலக்குகளில் சிங்கள தேசத்தின் பொருளாதார உறுதிக்கான தேர்தல்களைக் கூட ஒரு நாடு அது சிங்கள நாடு ஒரு சட்டம் அது பௌத்த சட்டம் என்கிற தன்மைக்குள் ஈழத்தமிழர்களையும் உள்வாங்கி ஈழத்தமிழரின் இறைமையை அவர்களைக் கொண்டே இழக்கவைக்கும் உத்திகளில் அனைத்து சிங்களத் தலைமைகளும் யாழ்ப்பாணத்தினை நோக்கி அரசியல் படையெடுப்பில் இறங்கியுள்ளனர். வடக்கு கிழக்கு சமுகங்களின் பிரச்சனை என்ற சொல்லாட்சி, பொருளாதாரம் சிறந்தால் எல்லாம் சரியாகும் என்று நம்பிக்கையளித்தல். 13ஐ வைத்து இந்தியாவையும் ஈழத்தமிழரையும் ஒருங்கே மயக்கும் பேச்சுக்கள். மக்களிடை நம்பிக்கை வந்தால் தான் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தலாம் என்று நிபந்தனைகள் 13ஐ மறுத்தவர்கள் நாங்கள் என்றாலும் ஈழத்தமிழர் விரும்புகிறார்கள் என்பதால் தற்காலிகமாக நடைமுறைப்படுத்தவோம் என்னும் வலைவீச்சுக்கள். இந்நிலையில் ஈழத்தமிழர் தங்கள் இறைமையைத் தேர்தல் களத்தில் பேச இயலாதவாறு அரசியல் அமைப்பின் ஆறாவது சட்டம். இறைமையுடன் சனநாயகப் பங்களிப்புச் செய்யவியலாதவாறு பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம். இத்தனைக்கும் மேலாகத் தாங்கள் நினைத்ததைச் செய்யும் பொலிசாரின் அட்டகாசம். இவற்றுக்கு நடுவில் ஈழத்தமிழர்கள் பொதுவேட்பாளரை முன்னிறுத்தி தங்கள் அரசியல் விருப்பை வெளிப்படுத்தவும் பகிஸ்கரித்துத் தங்கள் அரசியல் விருப்பை வெளிப்படுத்தவும் முயற்சிக்கின்றனர். இருவரின் அணுகுமுறைகளும் வேறாயினும் நோக்கில் ஈழத்தமிழரின் அரசியல் விருப்பை வெளிப்படுத்தல் என்ற பொதுத்தன்மை உண்டு. இருவழிகளிலும் முயற்சியுங்கள். மக்கள் ஒன்றுபட்டு தலைமைகளை ஒன்றுபடுத்த வேண்டும் என்னும் மக்களின் விழிப்புணர்ச்சி உச்சமாகும் என்பது இலக்கின் இவ்வார எண்ணம்.

Tamil News