இந்தியத் தேசிய சனநாயக கூட்டணி ஈழத்தமிழரின் தேசிய பிரச்சனைக்கு உரிய ஆதரவு அளிக்குமா? | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 290

இந்தியத் தேசிய சனநாயக கூட்டணி ஈழத்தமிழரின் தேசிய பிரச்சனைக்கு உரிய ஆதரவு அளிக்குமா?

உலகின் மிகப்பெரிய சனநாயகத் தேர்தல் என்ற பெருமையைக் கொண்ட 8337 தேசியக் கட்சி வேட்பாளர்களும், 1333 மாநிலக்கட்சி வேட்பாளர்களும் தேர்தல் ஆணையகத்தால் அங்கீகரிக்கப்படாத 532 கட்சிகளின் 2580  வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்கள் 3915 பேரும் போட்டியிட்ட இந்தியாவில் கீழ்ச்சபை  என்று சுருக்கமாகச் சுட்டப்படும் இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிவுகள் யூன் 4ம் நாள் வெளிவந்தது. இந்த முடிவுகளின் அடிப்படையில் மீளவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது பாரதிய ஜனதாக் கட்சியின் தனித்து ஆட்சியமைப்பதற்கான 272 பெரும்பான்மையை  முன்னைய நாடாளுமன்றத்தில் இருந்த 303 இலிருந்து 240 ஆக இழந்த நிலையில், தனது தேர்தல் கூட்டணிக்கட்சிகளான சந்திபாபுநாயுடுவுடனான தெலுங்குதேசக்கட்சி மற்றும் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளக்கட்சி ஆகியவற்றுடன் கூடிய தனது இந்திய தேசிய சனநாயக கூட்டணியின் ஆதரவால் 290 ஆக உயர்த்தி, கூட்டாட்சி அமைக்கும்  இந்தியாவின் பிரதமராக மூன்றாவது தடவையாக ஜுன் 9ம் திகதி முதல் தனது இந்தியப் பிரதமர் பதவியைத் தொடரவுள்ளார். இந்திய மக்களின் இறைமையின் சின்னமாக இந்தியாவின் பிரதமராக மீளவும் அடுத்த ஐந்தாண்டு காலத்துக்குப் பதவியேற்கும் மாண்பமை நரேந்திரமோடி அவர்களுக்கு “இலக்கு” ஆசிரிய குழுவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்நேரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய தேசிய சனநாயக கூட்டணியின் தோற்றத்துக்கு வித்திட்ட முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் முன்னாள் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ் மற்றும் பால்தாக்கரே போன்றவர்களை இந்தியத் தேசிய சனநாயகக் கூட்டணியுடனான வெற்றியின் பின்னர் உரைநிகழ்த்தும் பொழுது நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார். இந்நேரத்தில் ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினை குறித்த முன்னாள் இந்தியப்பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டோசின் கருத்துக்களை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தொடங்கியுள்ள புதிய ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்த முயல்வாராக இருந்தால் ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினைக்கான இந்தியாவின் அணுகுமுறையில் புதிய வெளிவிவகாரக்  கொள்கையை அவரால் நடைமுறைப்படுத்த முடியும். இனமான உணர்வுள்ள தமிழகத்தில் வளர்ச்சியும் காண முடியும் என்பதை இலக்கு இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறது. அத்துடன் இந்தியப் பிரதமர் அவர்கள் “ஆட்சியை நடத்த ஒருமித்த கருத்தே முக்கியம்-பெரும்பான்மையல்ல” என்ற முக்கியமான கருத்தைக் கூறியுள்ளார். இலங்கைத் தீவிலும் இந்தியப் பிரதமர் பெரும்பான்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காது எவ்வாறு முன்னாள் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணாண்டோஸ்   அவர்கள் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையை எவ்வாறு அணுகி ஈழத்தமிழர்களுடன் ஒருமித்த கருத்துடன் பயணித்தாரோ அவ்வாறு மீளவும் ஈழத்தமிழர்களுடன் ஒருமித்த கருத்து  இந்திய மத்திய அரசுக்கு உருவாக பிரதமர் தனது ஆட்சியினை முன்னெடுக்க வேண்டும் என்பது இலக்கின் வேண்டுகோளாக உள்ளது.
தமிழகத்தில் இந்தியத் தேசிய சனநாயகக் கூட்டணிக்கு ஒரு இடம் கூடக் கிடைக்காத நிலையிலும் 23 லோக்சபாத் தொகுதிகளிலும் 49 இலட்சத்து 18 ஆயிரத்து 303 ஓட்டுக்களை அது பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது என்று பிரதமரும் கருதுகின்றார். இதனால் இந்த வளர்ச்சிக்கு உதவியவர் களுக்கு ராஜ்ய சபை வழி அமைச்சுக்களும் அளிக்கப்படவும் கூடும்.  அதே வேளை தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா தளத்தின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து முயற்சிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இதன் வழி தமிழகத்தின் கரையாகவும் ஈழத்தமிழர்களின் கரையாகவும் உள்ள இந்துமாக்கடல் மேலான சமகாலத்தின் முக்கியத்துவத்தைப் பிரதமர் கருத்தில் கொண்டு செயற்படவுள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு இதனுடைய முக்கியத்துவமும் உலகறிந்த ஒன்று. இந்நிலையில் இந்துமாக்கடலின் தென்னிந்தியக்கரையின் நுட்பங்களையும் தட்பங்களையும் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக வாழ்வால் அறிந்து தங்களின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல தமிழகத்தின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் கேரளா உட்பட்ட தென்னிந்திய மாநிலங்களின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் ஈழத்தமிழர்கள் சமகால வரலாற்றில் எவ்வாறு கேடயமாக விளங்கினர் என்பதை சமகால வரலாற்றை உண்மையுடனும் நேர்மையுடனும் ஆய்வு செய்யும் வரலாற்று ஆசிரியர்கள் நன்கறிவர். ஈழத்தமிழர்களின் இந்த முக்கியத்துவத்தை பிரதமர் அவர்கள் கவனத்தில் கொண்டு இந்தியாவின் மத்திய அரசில் காணப்படும் ஈழத்தமிழர் எதிர்ப்பு கொள்கை உருவாக்கப் போக்கை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்பது இலக்கின் முக்கியமான கருத்தாக உள்ளது.
இனித் தமிழகத்தைப் பொறுத்த மட்டில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் இந்தியா கூட்டணியுடனான இணைப்புடன் நடைபெற்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் 40க்கு 40 என்று மக்கள் தங்கள் ஆணையை வெளியிட்டுள்ளனர். இலக்கு உங்களின் இந்த வெற்றிக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இனஉறவுடன் தெரிவிக்கின்றது.  இந்த வெற்றியை நெறிப்படுத்தியதில் திராவிட முன்னேற்றக்கழகம் தமிழகத்தின் தலைமைச் செல்நெறியாக விளங்கியுள்ளது. இந்நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இனத்துவ மொழித்துவ பண்பாட்டு உறவில் நாள்தோறும் திட்டமிட்ட இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு என்ற மூவகை இனஅழிப்புகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் குறித்தும் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பால் இன்று வரை தண்டனை நீதிக்காகவும் பரிகார நீதிக்காகவும் போராடும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்காகவும்  அதன் கடமைகளைப் பொறுப்புக்களை முன்னெடுப் பதற்கான செயல் திட்டங்களை அது முன்னெடுக்க வேண்டுமென்பது இலக்கின் கருத்து. சுருக்கமாகச் சொன்னால் ஈழத்தமிழர்கள் தங்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையினை ஏற்கும்படியான கோரிக்கையையே உலகெங்கும் பரவலாக முன்வைக்கின்றார்கள். இந்தக் கோரிக்கைக்கு மாநில அரசு என்ற முறையில் இந்தக் கோரிக்கை பிரிவினைவாதமல்ல இதற்கான சனநாயக ரீதியான முயற்சிகள் பயங்கரவாதமுமல்ல என்பதனையும் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமை எந்த வகையிலும் இந்திய இறைமைக்கோ ஒருமைப்பாட்டுக்கோ எதிரானதல்லவென்பதையும் இந்தியளவிலும் அனைத்துலக அளவிலும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உண்டு.
இலங்கையில் அங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் தன்னலத்தின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையை முன்னெடுக்காத அரசியலையே நடாத்துகின்றார்கள். இதற்கு உதாரணம் கடந்த வாரத்தில் தன்னைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியக் குழுவினரிடம் திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மூத்த ஆளுமையாகவும் உள்ள சம்பந்தன் அவர்கள் “ஈழத்தமிழர்கள் வெளியக தன்னாட்சி உரிமையினைப் பயன்படுத்த வேண்டி வரும்” என அப்பட்டமான வரலாற்றுத் திரிபுவாதத்தை யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை அருகில் வைத்துக் கொண்டு கூறியுள்ளார். 1975 இல் தந்தை செல்வநாயகம் அவர்கள் சிறிலங்காப் பாராளுமன்றத்தை விட்டு விலகித் தன்னாட்சிப் பிரகடனத்தைச் செய்தது முதல் இன்று வரை அரை நூற்றாண்டுகளாக ஈழத்தமிழர்கள் தங்களின் வெளியகத் தன்னாட்சி உரிமைக்கான அங்கீகாரமே தங்களுக்கான ஒரே தீர்வு என்று வரலாறு படைத்து நிற்பதைச் சம்பந்தர் கோஸ்டி மறைக்கிறது. இந்நிலையில் தமிழகமும் உலகெங்கும் வாழும் தமிழர்களும் இணைந்து ஈழத்தமிழரின் வெளியகத் தன்னாட்சி உரிமைக்கான குரலை ஒங்கி ஒலிக்க வைப்பதன் மூலமே ஈழத்தமிழர்களின் இருப்பையும் பாதுகாப்பான அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் உறுதி செய்யலாம். இதற்கு இந்தியப் பிரதமர் தனது மூன்றாவது ஆட்சியில் துணை செய்ய வைக்க அனைத்துத் தமிழரும் உழைக்க வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.

Tamil News