இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:15 மணிக்கு ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
மோடியின் பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸூ, சிசல்ஸ் துணை ஜனாதிபதி அகமது அபிப், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல், பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே உள்ளிட்ட 7 அயல் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அண்டை நாடுகளின் தலைவர்களை அழைத்து உள்ளோம். இது “அயல் நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கை மற்றும் “சாகர்” எனப்படும் பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பார்வைக்கு இந்தியா அளித்த மிக உயர்ந்த முன்னுரிமையாக இது ஏற்பாடு செய்து உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதைத் தவிர, அயல் நாட்டுத் தலைவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு ராஷ்டிரபதி பவனில் அந்த நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு அளிக்கும் விருந்திலும் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.