இலக்கு மின்னிதழ் 155 – ஆசிரியர் தலையங்கம்

121 Views

இலக்கு மின்னிதழ் 155 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 155 – ஆசிரியர் தலையங்கம்

ஈழத்தமிழரின் தீர்மானம் எடுக்கும் உரிமை எதிலும் அனுமதிக்கப்பட வேண்டும்

கடந்த மாத இறுதியில் இந்தியா புத்தர் பரிநிர்வாணம் அடைந்த குஷி நகரில் இந்திய சிறிலங்கா பௌத்த உறவு 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த உறவென இந்தியப் பிரதமர் பாசமழை பொழிந்தார். இது ராசபக்ச குடும்பத்தினர்க்குத் தங்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் நடவடிக்கைகளில் இருந்து காக்க இந்தியா கிடைத்து விட்டது என எண்ணி மகிழவைத்தது. இந்த மகிழ்ச்சியைக் காற்றில் பறக்க வைத்து, இந்த மாதத்தைத் தொடக்கி வைத்தார்கள் பிரித்தானியத் தமிழர்கள். காலநிலைப் பேரிடரை எவ்வாறு சமாளிக்கலாம் என்ற உலக மாநாட்டுக்கு 140 நாடுகளின் தலைவர்களுடன் கைகுலுக்கிக் குலுக்கி ஈழத்தமிழர் மீதான இனஅழிப்பு யுத்தத்தால் தான் இலங்கைத் தீவின் காலநிலைக்கே எமனாகி நிற்பதை மறந்து, இயற்கையைப் போற்றும் புத்த தத்துவம் பேச வந்த இலங்கை அரச அதிபரை, பிரித்தானியத் தமிழர்கள் துப்பாக்கிகள் மௌனித்தல் வழியான மக்களின் சனநாயக சக்தி எப்படியிருக்கும் என்பதைக் கண்டு திகைக்க வைத்தனர்.

ஊரில் காலடி எடுத்து வைக்கு முன்பே வாரான் உங்கள் ஊருக்கு இனஅழிப்புக்காரன் எனப் பிரித்தானியத் தமிழர்கள் இஸ்கொத்லாந்தின்  ஊடகங்களிலும் வானுயர் கட்டிடங்களிலும் கோத்தபாயா அவர்களின் உருவத்துடன் கூடிய முன்னறிவிப்பினைச் செய்திருந்தனர். போதாக்குறைக்கு ஊருக்குள் இந்தத் தகவலட்டை பொருத்தப்பட்ட வாகனங்கள் வலம் வந்து கொண்டிருந்தன. கோத்தபாயா அவர்களின் காருக்கு முன்னாலேயே கொடிபிடித்து அவர் விடுதியின் முன்கதவினால் வர விடாது பின் கதவாலேயே வெளியேறும் அவலநிலையைப் பிரித்தானியத் தமிழர்களின் நீதிக்கான மக்கள் முற்றுகைகள் ஏற்படுத்தின.

அங்கு குவிந்து கிடந்த நவீன புகைப்படக் கருவிகளுடன் கூடிய உலக ஊடகவியலாளர்கள் கூட இந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களைக் கண்டு கதி கலங்கிப் போனார்கள். இதனால் திணறிப்போன சிறிலங்கா அரச அதிபருக்கு, அவர் உலகில் எங்கு சென்றாலும் அவரின் நிழலாக அவரும் அவரின் ஆணையில் அவரின் படையினரும் செய்த ஈழத்தமிழின அழிப்பின் பின்விளைவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கப் போகிறது என்ற உள்ளப்பயத்தைப் பிரித்தானியத் தமிழர்கள் ஏற்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்

இந்தக் கலக்கங்கள் உடன் கொழும்பில் கால் வைத்த கோத்தபாயா அவர்களுக்கு மக்கள் வங்கியைச் சீனா கறுப்புப் பட்டியலில் போட்டு முகத்தில் கரி பூசியுள்ளது.  இவங்கைக்கு சீனாவின் கியுங்டாவோ சீவின் நிறுவன 99000 மெட்ரிக் தொன் உரத்துடன் வந்த ஹிப்போஸ்பிரிட் கப்பல் அந்த உரத்தில் அபாயகரமான தீங்கு விழைக்கக் கூடிய நுண்ணுயிர்கள் உள்ளதென உரத்தின் மாதிரி மண்ணைப் பரிசோதித்த அறிவியலாளர்கள், அறிவித்ததின் பயனாகத் துறைமுக அனுமதி மறுக்கப்பட்டது. உர நிறுவனத்திற்கான ஒருமில்லியன் டொலர் பணம் வழங்குவதையும்  ஒப்பந்த மீறல் என்ற அடிப்படையில் நீதிமன்றம் தடைசெய்தது. ஆயினும் இதற்கு அசைந்து கொடுக்காத சீன அரசு, கப்பலைத் தெற்குக் கடலில் நிறுத்தி வைத்துச் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கிறது. பதிலடியாக மக்கள் வங்கியையும் தான் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. சீன உறவில் சிந்தை மகிழ்ந்திருந்த அரச அதிபர் கோத்தபாய ராசபக்சா  வெளிப்படையான சிறிலங்காவின் இறைமை இழப்புக்குப் பதில் சொல்லாது மௌனம் காத்து வருகின்றார்.

இதற்கிடை வெளிப்படையாகவே ஒரு நாடு ஒரு சட்டச்  செயலணித் தலைவர் ஞானசார தேரர் செயலணியின் உறுப்பினர்களாகத் தமிழர்களை ஏன் அனுமதிக்க வேண்டும் எனக் கர்ச்சித்து, தமிழர்களின் தீர்மானமெடுக்கும் உரிமைக்கு இடமேயில்லை என அவர்களின் சனநாயகப் பங்களிப்பை அனுமதிக்க முடியாது என வெளிப்படையாகவே பேசி வருகிறார். இது  இந்தச் சட்டமே தமிழர்களை ஆட்சிமுறைமையிலிருந்து புறந்தள்ளுவதற்கான அரசியலமைப்பு மாற்றம் என்பதை உலகுக்குத் தெளிவுபடுத்தி வருகிறது.  அத்துடன் மகாணசபைகளை உருத்தெரியாமல் பண்ணுவதும் இந்தச் சட்டத்தின் நோக்கு என்பதையும் அவர் தாராளமாகப் பேசி வருகிறார். இந்த இலட்சணத்தில் இந்தியா 13வது திருத்தத்தின் மூலம் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்குத் தன்னால் உதவ முடியுமென அதனை இந்தக் காலகட்டத்தில் முன்மொழிவது உலகுக்குத் திகைப்பைக் கொடுக்கிறது.

கூடவே அரிசிப் பற்றாக்குறை என்றால் அரிசி, சீனாவின் உரத்திற்குப் பதிலாக நானோ செயற்கை உரம், பௌத்த விகாரைகளைப் புனர்நிர்மாணம் செய்யப் 15 மில்லியன்  என இந்தியா அள்ளி வழங்கினாலும், சிங்கள பௌத்த பெரும்பான்மைக் கும்பல் 13வது திருத்தத்தை மீளக் கொண்டுவர அனுமதிக்காது என்பதை இந்தியாவுக்கு இவர் பேச்சு தெளிவுபடுத்தி வருகிறது. திரு. எரிக்சொல்ஹெய்ம் அவர்கள் 2008 முதல் இந்தியா சிறிலங்காவுக்கு அளித்த புலனாய்வுத் தகவல்களே சிறிலங்காவின் இராணுவ வெற்றிக்குக் காரணமெனச் சென்னையில் வைத்துச் செவ்வியளித்தாலும், பிக்குகள் அமுக்கக்குழு அதனைக் கேட்டும் நட்புப் பாராட்டப் போவதில்லை என்பது வெளிப்படை.

இந்நிலையில் தங்களுடன் சட்டநுணுக்கங்களை ஆராயவெனத் தன்னையும் சட்டத்தரணி நிர்மலா சந்திரகாசனையும், சட்டத்தரணி கனகநாயகத்தையும் வாசிங்டன் அழைத்துள்ளது. நாங்கள் அமெரிக்கா செல்கின்றோம் என்கிற தமிழ்த் தேசியக் கூட்டணியின் சிறிலங்காப் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கூற்று, இந்தியா அமெரிக்காவுடன் இணைந்த அழுத்தத்தை 13வது திருத்தத்தை மீளக் கொண்டுவர சிறிலங்காவுக்குக் கொடுக்கப் போகிறதா என்ற கேள்வியைத் தோற்றுவித்துள்ளது.

எதிலும் ஈழத்தமிழர்களின் தீர்மானம் எடுக்கும் உரிமை மறுக்கப்படுவதே ஈழத் தமிழின அழிப்பின் மூலகாரணமாக 1921 முதல் இன்றுவரை நூறாண்டுகள் தொடர்கிறது. இதனால் எது எப்படியும் நடக்கட்டும், ஆனால் ஈழத்தமிழ் மக்களுக்கு அதில் தீர்மானம் எடுப்பதற்குரிய உரிமை மறுக்கப்படாது பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் உலகத்தமிழர்கள்  எடுக்க வேண்டுமென்பதே இலக்கின் எண்ணம்.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad இலக்கு மின்னிதழ் 155 – ஆசிரியர் தலையங்கம்

Leave a Reply