வாழிட நாடுகளில் மரபுரிமை விழிப்புணர்வு – இலக்கும் போக்கும் – பொன்னையா விவேகானந்தன் – கனடா

715 Views

 மரபுரிமை விழிப்புணர்வு

பொன்னையா விவேகானந்தன் – கனடா

வாழிட நாடுகளில் மரபுரிமை விழிப்புணர்வு: தமிழர் வரலாற்றில் தைத்திங்களுக்குச் சிறப்பிடம் உண்டு. வாழ்வாதாரத்தின் அடித்தளமாகத் திகழ்ந்த  உழவுத்தொழிலைப் போற்றிய தமிழர், தைத்திங்களையே அறுவடைக் காலமாகக் கொண்டனர். வாழ்வை வளப்படுத்தும் அறுவடையைத் தமிழர் கொண்டாடியதன் தொடர்ச்சியே தைப்பொங்கல் பெருவிழா எனலாம். அறுவடை விழாவாகவும், நன்றி கூறும் நாட்களாகவும் ஊரே கூடிக் கொண்டாடும் கலைகளின் களமாகவும் இம்மாதம் அமைகின்றது.

 மரபுரிமை விழிப்புணர்வுகடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக ஐரோப்பிய, வடஅமெரிக்க, ஆஸ்திரேலிய வாழ்புலங்களில் தனித்துவமாக சமூகக் கட்டமைப்பாக உருக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகம், தைமாதத்தையும் பொங்கல் விழாவையும் புதிய பரிமாணங்களில் அணுகத் தொடங்கி யிருக்கின்றது.

நிலைத்த மரபுகளைக் கொண்ட ஓரினம் பிறவினங்களோடு இணைந்தவொரு தளத்தில் வாழும் நிலை ஏற்படுகின்றபோதும், பிறவினத்தவரின் ஆளுகைக்குட்பட்டு வாழும் நிலையிலும் மரபுகளைப் பேணுவது தொடர்பான சிந்தனை தோற்றம் கொள்கின்றது.

இதன்வழியே மரபைப் பேணுதல் தொடர்பான சிந்தனையோட்டம் முதன்முதலில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தவரிடையே தோற்றம் கொண்டது என்பதில் வியப்பில்லை. தாயகத்தை விட்டு வெளியேறி, பலவினங்கள் கலந்துறையும் ஓரியங்குதளத்தில் நிரந்தரமான வாழ்வைக் கட்டமைத்து வாழ முற்படும்போது, பண்பாட்டு மரபுகளையும் காத்துச்செல்ல வேண்டிய உன்னதமான தேவை உணரப்படுகின்றது.

பலவினமக்கள் இணைந்து வாழும் வாழ்புலத்தில், ஒவ்வொரு இனமும் தனித்துவ அடையாளங்களைத் தொடர்ச்சியாகப் பேணத் தவறுமாயின், வாழும் புலத்தில் அவ்வினங்கள் கரைந்து அழிந்துவிடும் என்பதே வராலாற்று உண்மை. இந்நிலையில்; அடையாளப் பேணல் தொடர்பான விழிப்புணர்வு குறித்து இனப்பற்றுக் கொண்ட இனங்கள் ஆழமாகச் சிந்திக்கத் தொடங்குகின்றன. அதற்கான வழிவகைகளைத் தேட ஆரம்பிக்கின்றன.

 மரபுரிமை விழிப்புணர்வுஇவ்வாறான கருத்தோட்டங்களின் வழியாக புலம்பெயர்ந்தோர் வாழ்புலத்தில் தைத் திங்களானது, தமிழர் மரபுத் திங்கள் என்ற புதிய வடிவத்தைப் பெறுகின்றது. இவ்வாறான தொரு வடிவத்தில் தைத் திங்களையோ அல்லது பொங்கல் விழாவையோ நோக்கும் சூழல் தாயகத்தில் இல்லை.

புலம்பெயர்ந்தோருள்ளும் இந்தத் தேவையை முதலில் உணர்ந்தோர் கனடாவாழ் தமிழரே. அதற்குக் காரணங்கள் இருக்கின்றன. கனடாவிலேயே அதிகளவு தமிழர்கள் வாழ்கின்றனர். கணிசமானோர் தாயகத் தொடர்புகளற்ற குடும்பங்களாக இருக்கின்றனர். இனித் தொடரும் தலைமுறைகளின் நிரந்தர வாழிடமாக இத்தளமே அமைகின்றது. இந்நிலையில் பெரிதும் ஆங்கிலமொழி வயப்பட்ட சூழலில், தமிழ்மொழிப் பயன்பாடு அருகிச் செல்வதையும், கனடியத் தேசியப் பண்பாடு இளையோரை அதிகளவில் ஈர்க்கும் நிலையினையும் அவதானத்துக்குட்படுத்திய சமூகப் பற்றாளர் சிலர் மரபுப் பேணல் சிந்தனையை முன்வைத்தனர்.

கனடா தொழில்நுட்பக் கல்லூரி 1999இல் ‘தமிழ்மொழிக் கிழமை’ என்ற பெயரில் இந்த முயற்சியைத் தொடங்கியது. பின்னாட்களில் இது தைப்பொங்கலையொட்டி, தைமாதத்தில் முன்னெடுக்கப்படும் மரபுப் பேணல் நிகழ்வுகளாக மாறின.

மரபுரிமை என்ற சொல் கூட கடந்த கால் நூற்றாண்டுக்குள்தான் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மரபை உரிமையாகக் கருதும் சிந்தனையின் வெளிப்பாடாகவே இச்சொல் உருப்பெறுகின்றது.

கனடா அரசின் பல்லினப் பண்பாட்டுக் கொள்கைகள் இனஞ்சார்ந்த அடையாளப் பேணல் முயற்சிகளுக்குச் சார்பாக இருந்தன. இதன்வழியே தைத்திங்கள் ‘தமிழர் மரபுத் திங்கள்’ என்ற அங்கீகாரத்தை அரச நிர்வாக அலகுகள் மட்டத்தில் பெற்றது.

இதன் விளைவாக, தைத்திங்கள், அடையாளப் பேணல்கள் தொடர்பான விழிப்புணர்வு குறித்து அதிகளவில் பேசும் மாதமாக அமைந்து விடுகின்றது. தைத்திங்களை மரபுத் திங்களாகக் கருதிச் செயற்படும் சூழல், தற்போது பிரித்தானியாவிலும் தோன்றியுள்ளமை மகிழ்ச்சி தருகின்றது. அங்கு அரச அங்கீகாரம் மரபுத் திங்களுக்கு கிடைத்திருக்கும் செய்தி, தமிழர் அனைவருக்கும் புத்தூக்கம் தருகின்றது. தமிழர் வாழும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் தைமாதத்தை மரபுத் திங்களாகப் போற்றும் மாண்பு உருவாக வேண்டும்.

எமது அடையாளப் பேணல் தொடர்பில் நாம் பெரிதும் கருத்திற் கொள்ள வேண்டிய விடயங்களாக இருப்பவை மொழி, வழிபாடு, பண்பாடு, மரபுசார் நடத்தைகள், வரலாறு போன்ற விடயங்களே.

 மரபுரிமை விழிப்புணர்வுமாறுபட்ட பண்பாட்டுச் சூழலில் தோன்றி வளர்ந்து கொண்டிருக்கும் புலம் பெயர்ந்தோரின் இளைய தலைமுறையினர் தமிழியல் சார்ந்த வாழ்வைக் கல்வியாகவே கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில், தமிழருக்கே உரித்தான வாழ்வியல் கோட்பாடுகளில் எவற்றை விடுப்பது எவற்றைப் பேணிச் செல்வது என்ற சவால்களே எம்மிடம் நிறைந்து கிடக்கின்றன.

குடியேறிய வாழிட நாடுகளில் நாம் பேணிச் செல்ல வேண்டிய அடையாளங்கள் பற்றியும் தேவையான தமிழர் மரபுகளை விட்டு விலகிச் செல்லாத புதிய வாழ்வியல் கோட்பாடுகளை வகுத்துச் செல்வது பற்றியும் எடுத்துக் கூறுவதாகவே மரபுரிமைச் செயற்பாடுகள் அமைய வேண்டும். கனடாவில் இயங்கிவரும் தமிழ் மரபுரிமை நடுவம் கீழ்க்காணும் இலக்குகளை முதன்மையானதாகக் கொண்டுள்ளது.

  1. இளையோரிடையே இனம், மொழி, பண்பாடு, கலை தொடர்பில் தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழின அடையாளங்களைப் பேணியவாறு வாழத் தூண்டதல்.
  2. பிறவினத்தோருக்குத் தமிழர் வரலாற்றுப் பெருமையை உணர்த்துதல்
  3. தமிழர் வாழ்வியற் செயற்பாடுகளை மரபு சார்ந்து கட்டமைத்துப் பேணிச் செல்லுதல்

நாம் வாழிட நாடுகளுக்கு ஏற்ப,  பொருத்தமான தமிழர் பண்பாட்டு மரபுகளைப் பின்பற்றிச் செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம். எமது தமிழினம் சார்ந்த இருப்பு எமது நடத்தைகளிலேயே தங்கியிருக்கின்றது. கடந்த நாற்பது ஆண்டுகாலப் புலம்பெயர் வாழ்வில் நாம் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கின்றோம். இந்த மாற்றங்களில் பல, எமது பாரம்பரிய பண்பாட்டு மரபுகளை மாற்றிச் செல்கின்றன. எமது நடத்தைகளை எமது மரபொழுங்கில் கட்டமைத்து அடையாளப் பேணல்களுடன் நாம் இயங்க வேண்டும். எமது நடத்தைகளையே இளையோரும் பின்பற்றிச் செல்வர்.

வாழிட நாடுகளில் எமது அன்றாட வாழ்வை, வலுவான இருப்பு சார்ந்து கட்டமைத்துச் செல்வதும் இந்த மரபுரிமை நடுவத்தின் பணியாகின்றது.

சீரான, ஒழுங்கமைக்கப்பட்ட மரபுசார் நடத்தைகளைக் கொண்ட வாழ்வியல் முறைகளை மையப்படுத்திய புலம்பெயர் சமூகத்தைக் கட்டமைப்பதாகவே மரபரிமை நிகழ்வுகள் அமைய வேண்டும். ஆண்டுதோறும் மெல்லமெல்ல அதிகரித்துவரும் மரபுரிமை தொடர்பான விழிப்புணர்வு தமிழ்ச் சமூகத்தின் அனைத்து தரப்பினரிடையேயும் ஏற்பட வேண்டும். இந்தப் பணியை மரபுரிமை நடுவம் மட்டுமல்ல, பிற நிறுவனங்களும் ஊடகங்களும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வுலகில் தமிழர் முதற்குடிகளா என்பது எமக்குத் தெரியாது. ஆனால் நாம் இப்பூமியின் பழங்குடிகள் என்பது பேருண்மை.

இவ்வலகில் எம்மைத் தனிமனிதராகவும் இனமாகவும் பெருமைப்படுத்தவல்ல பேரடையாளம் நாம் தமிழரென்பதே. இதைத் துறந்தோ மறந்தோ செல்ல முற்படுகின்ற ஒவ்வொருவரும் தம்மைத்தாமே அழித்துக் கொள்பவராவர்.

இத்தகைய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கே அமைப்பு சார்ந்த செயற்பாடுகளாகத் தமிழர் மரபுத் திங்கள் நிகழ்வுகள் அமைகின்றன. இந்த நிகழ்வுகள் முழுமையான பெருவடிவம் கொள்ள நிதிவளமும் ஆட்பலமும் தேவை. இச்செயற்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாற்றுப்பயன் கருதாமல் பலரும் இணைவோமேயாயின் தோன்றவிருக்கும் ஒவ்வொரு தலைமுறையினையும் தமிழியல் அடையாளம் சார்ந்தவர்களாக நாம் போற்றிப் பாதுகாக்க முடியும்.

 மரபுரிமை விழிப்புணர்வுகனடாவிலும் பிரித்தானியாவிலும் முன்னெடுக்கப் பட்டுவரும் மரபுரிமை நிகழ்வுகள், உலகம் தழுவியதாக மாற வேண்டிய தேவையுள்ளது. தமிழருக்கென தனிநாடும் தன்னாட்சி கொண்ட அரசும் இல்லை. தமிழரல்லோதோரின் ஆளுகைக்கு உட்பட்டே தமிழர் எங்கும் வாழ்கின்றனர். ஆளுகைக்குட்பட்ட இனத்தின் அடையாளங்களைஇ ஆளும் இனம் சிறுகச் சிறுக அழிக்க முனைவதே உலக வரலாறு. தமிழகம், தமிழீழம் போன்ற தாயகப் பகுதிகளில் இந்த அழிப்புகள் வெளிப்படையாகவும் கட்புலனாகா வடிவங்களிலும் முன்னெடுக் கப்படுகின்றன. இதை உணர்வதற்கும் வாழும் நாடுகளிலும் மரபுகளைப் பேணுவதற்கும் எமக்குள் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மரபுரிமைச் செயற்பாடுகளுக்குப் பெரும் பங்கு உண்டு.

எதிர்கால தமிழ்ச்சமூகத்தின் அடையாளம் சார்ந்த இருப்பைக் கருதிஇ இனப்பற்றுள்ள இனைவரும் உறுதியோடும் வலிமையோடும் இயங்குதல் அவசியமானது.

தாயகம் தவிர்ந்த பிற வாழிடங்களில் தமிழ்த்தலைமுறைகள் நிலைத்த இன வடையாளங்களுடன் வாழ்வைத் தொடர வேண்டுமாயின் தமிழ் மரபுகளை நிறுவனக் கட்டமைப்புகளின் வழிநின்றே முன்னெடுக்க வேண்டும். வாழிட நாடுகள் எங்கும் தோன்றும் மரபுரிமை அமைப்புகளை வளர்த்துச் செல்வோம்.

Tamil News

2 COMMENTS

  1. […] வாழிட நாடுகளில் மரபுரிமை விழிப்புணர்வு: தமிழர் வரலாற்றில் தைத்திங்களுக்குச் சிறப்பிடம் உண்டு. வாழ்வாதாரத்தின் அடித்தளமாகத் திகழ்ந்த உழவுத்தொழிலைப் போற்றிய  […]

Leave a Reply