சமூக மேம்பாடும் இளைஞர் வகிபாகமும் – துரைசாமி நடராஜா

சமூக மேம்பாடும் இளைஞர்

துரைசாமி நடராஜா

சமூக மேம்பாடும் இளைஞர் வகிபாகமும்: இளைஞர்கள் வலிமை மிக்கவர்கள். சமூக மாற்றத்தின் அச்சாணிகள். நாடு இளைஞர்களை நம்பி இருக்கின்றது. இந்த வகையில் ஒரு நாட்டின் எழுச்சியில் இளைஞர் சமூகத்தின் வகிபாகம் அதிகமாகியுள்ள நிலையில், அவர்கள் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டிய தேவை மேலெழுந்து காணப்படுகின்றது. இந்நிலையில் இளைஞர்களை உரியவாறு திசைமுகப்படுத்துவதோடு சகல துறைகளிலும் அவர்களின் பங்களிப்பையும் சரிவர பெற்றுக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். இது சாத்தியப்படாதவிடத்து பாதக விளைவுகள் பலவும் மேலோங்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

சமூக மேம்பாடும் இளைஞர்

இந்த வகையில் மலையக இளைஞர்கள் குறித்து நோக்குகையில் அவர்களின் சமூக ரீதியான பங்குபற்றுதல்கள் மற்றும் அவர்களுக்கான அங்கீகாரம் என்பன தொடர்பில் அதிருப்திகள் இருந்து வருகின்றன இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்பதோடு ஒரு அமுக்கக்குழுவாக இருந்து அல்லது அரசியலில் பங்கேற்று சமூக அபிவிருத்திக்கு இளைஞர்கள் வழிகாட்ட வேண்டும் என்ற கருத்துக்களும் வெளிப் படுத்தப் பட்டு வருகின்றன. மேலும் மலையக இளைஞர்களின் மௌனம் பாரிய பின்விளைவுகளுக்கு உந்துசக்தியாக அமைந்து விடும் என்ற கருத்துக்களும் எதிரொலிப்பதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

உலக வரலாறுகளின் திருப்பு முனையாக இளைஞர்கள் இருந்து வருகின்றனர். ஒரு முன்னேற்றகரமான போக்கிற்கு உந்துசக்தியாக இவர்கள் விளங்குகின்றார்கள். அரசாங்கங்கள் ஆட்சிபீடமேறுவதற்கும், பிழையான நெறிமுறைகளைக் கையாண்டதன் காரணமாக ஆட்சியிழப்பதற்கும் இளைஞர்கள் முக்கிய பங்காற்றி யுள்ளார்கள். எமது நேச நாடான இந்தியாவில் பிரதமர் மோடியின் வெற்றியின் பின்னணியில் இளைஞர்களின் உந்துதல் அதிகமாகவே காணப்பட்டது. ஏனைய உலக நாடுகளிலும்  இது இடம்பெற்றுள்ளது.

எனவேதான் உலக நாடுகள் இளைஞர்களின் ஆளுமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பல்துறைகளிலும் வாய்ப்பளித்து வருவதோடு அபிவிருத்திக்கான திட்டங்களையும் செயற்படுத்தி வருகின்றன. இந்த வகையில் எமது நாட்டின் இளைஞர் அபிவிருத்தித் திட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும் செயற்றிறன் குறைந்து காணப்படுவதாகவும் விசனங்கள் இருந்து வருகின்றன. வரவு செலவு திட்டம், தேர்தல் விஞ்ஞானம், தேர்தல் மேடைகள் என்பவற்றில் வழங்கப்படும் இளைஞர்சார் வாக்குறுதிகள் எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியம் மிக்கதாக உள்ளது என்பது கேள்விக்குறியாகும். பொதுவாக வழங்கப்படும் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விடுவதனையே நடைமுறையில் காண முடிகின்றது.

இலங்கையின் இளைஞர்கள் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். சமூகம், தொழில், பொருளாதாரம், கல்வி, அரசியல் உள்ளிட்ட பல துறைகளும் இதில் உள்ளடங்கும். நாட்டின் எழுச்சிக்கு தோள் கொடுக்க வேண்டிய இளைஞர்கள் பலரின் உயிர்கள் இங்கு நிலவிய கொடிய  யுத்த சூழ்நிலையால் காவு கொள்ளப்பட்டமை கொடுமையிலும கொடுமையாகும். இராணுவ மற்றும் விடுதலைப்புலிகள் தரப்பில் உயிரிழந்த அனைவரும் எமது சகோதரர்களே என்பதை மறந்து விடுவதற்கில்லை. இவர்களின் இழப்பு நாட்டிற்கும், வீட்டிற்கும்,  நாட்டின் அபிவிருத்திக்கும் பேரிழப்பு என்பதனையும் மறுப்பதற்கில்லை.

வாய்ப்பில்லாத மலையக இளைஞர்கள்

சமூக மேம்பாடும் இளைஞர்இளைஞர் அபிவிருத்தி, செயற்பாடு குறித்து பேசுகின்றபோது, மலையக இளைஞர்கள் தொடர்பில் நாம் சற்று ஆழமாகவே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தேசிய மட்ட வாய்ப்புகளில் இவர்கள் எந்தளவு உள்ளீர்க் கப்படுகின்றார்கள்? இவர்களின் சமூக அந்தஸ்து எவ்வாறுள்ளது? அரசியலில் உரிய இடம் இவர்களுக்கு வழங்கப்படுகின்றதா? தலைமைத்துவ விடயங்களில் இவர்களின் வகிபாகம் என்ன? இவர்களின் கருத்துக்களை சமூக நிறுவனங்கள் எந்தளவுக்கு உள்வாங்குகின்றன? என்பது தொடர்பில் சிந்திக்கையில் திருப்தியான வெளிப்பாடுகளைக் காண முடியவில்லை. ஒரு புறந்தள்ளப்பட்ட நிலையிலேயே இவர்களின் நிலைமை மலையகத்தில் காணப்படுகின்றது.

தீர்மானம் மேற்கொள்ளப்படும் இடங்களில் இளைஞர்களின் உள்ளீர்ப்பு திருப்தியாக இல்லை. இளைஞர் அபிவிருத்தி திட்டங்களை அரசியல் தொழிற்சங்கவாதிகள உரியவாறு முன்னெடுப்பதாக இல்லை. சில கட்சிகளிடம் செயற்றிட்டங்கள் உள்ளபோதும் அவை ஏட்டளவிலேயே முற்றுப்பெற்று விடுகின்றன. அல்லது மேதினத்துக்கு மேதினம் மட்டுமே அவை தூசுதட்டிப் பார்க்கப்படுகின்றன. இதனால் இளைஞர் அதிருப்தி மேலோங்கியுள்ளது. இளைஞர்களை ஏணியாக்கி, அவர்களை மையப்படுத்தி மேல்நகரும் அரசியல்வாதிகள் பின்னர் அவ்விளைஞர்களை கைகழுவி விடுவது ஒன்றும் புதிய விடயமல்ல.

இளைஞர்களுக்கான பயிற்சி வசதிகள் உரியவாறு காணப்படவில்லை. இதனால் குறைவான தகைமையைக் கொண்டுள்ள இளைஞர்கள் கீழ்மட்ட தொழில்களில் பல சிரமங்களுடன் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். நகர்ப்புற வர்த்தக நிலையங்களில் தொழில் நிலையில் இவர்கள் படும் அவலங்கள் சொல்லி முடியாது. மனிதவள அபிவிருத்தி வகிக்கும் முக்கிய பங்கினை உணர்ந்துள்ள அரசாங்கம் அதனை மேம்படுத்துவதற்கென்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மனிதவள அபிவிருத்தி மையங்களை அமைந்துள்ளது.

எனினும் தோட்ட இளைஞர்களுக்கு அவ்வித பயிற்சிக்கான வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. தமிழ் மொழிமூல பயிற்சியாளர் இல்லாமை இதற்கான முக்கிய காரணமாகும் என்பதனை பேராசிரியர் மு.சின்னத்தம்பி ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ஏறக்குறைய எல்லா பெருந்தோட்ட மாவட்டங்களிலுமே தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரிகளும் பயிற்சி மையங்களும் இருந்தபோதிலும் சிங்களமே அவற்றில் பயிற்சி மொழியாக உள்ளதால் தமிழ் மொழி மூலமாகக் கல்வி பயின்ற மலையக இளைஞர்கள் இப்பயிற்சி நெறியில் சேரமுடியாத நிலை காணப்பட்டமையையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

மலையக சமூகம் சகலதுறை சார் அபிவிருத்தி இலக்குகளையும் எட்டிப் பிடிப்பதற்கு இன்னும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. இது இலகுவான ஒரு காரியமாக தென்படவில்லை. இலக்குகளை உரியவாறு அடைந்து கொள்வதற்கு இளைஞர்களின் சமூக ரீதியான சிந்தனை, அர்ப்பணிப்பு என்பன மிகவும் அவசியமாகியுள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக நகர்ப்புறங்களில் கடமையாற்றிய மலையக இளைஞர்கள் தற்போது மலையகத்திற்கு வருகைதந்து பல்வேறு தொழில்களிலும்  ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா இளைஞர்களை ஒருமுகப்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் இந்த ஒருமுகத்தன்மையைப் பயன்படுத்தி இளைஞர்கள் சமூக அபிவிருத்தி குறித்து சிந்தித்து காத்திரமான பங்காற்ற வேண்டும். தானுண்டு தமது குடும்பமுண்டு என்ற குறுகிய வரையறையை விட்டு வெளியேறி சமூகம், நாடு, உலகம் என்ற பரந்த நோக்கில் செயற்பாடுகளை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அழிக்க முடியாத சக்தி

சமூக மேம்பாடும் இளைஞர்சுவாமி விவேகானந்தர், சோக்ரடீஸ், அப்துல் கலாம் போன்ற பலர்  இளைஞர் சக்தியின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியுள்ளனர். உன் உலகம் என்பது உன்னிடமிருந்து தானே தொடங்குகின்றது. எனவே நீ முதலில் பகுத்தறிவு சிந்தனையாளராக மாற வேண்டும் என்கிறார் சோக்ரடீஸ். நான் ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கெடுக்கிறேன்.மக்களின் மத நம்பிக்கைக்கு மாசு கற்பிக்கிறேன் என்றெல்லாம் என்மீது குற்றம் சாட்டி எனக்கு மரணதண்டனையே தக்கது என்று முடிவு கட்டி விட்டீர்கள். விரைவில் என்னை நீங்கள் அழித்துவிடலாம். ஆனால் என்னோடு என் கருத்துக்களையும் அழித்துவிடலாம் என்ற உங்கள் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. எனக்குப் பின்னால் எண்ணற்ற இளைஞர்கள் ஏதென்ஸ் நகர மக்களை நல்வழிப்படுத்த நற் தொண்டாற்ற தோன்றிக் கொண்டே இருப்பார்கள் என்று இளைஞர் சக்தியில் சாக்ரடீஸ் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இந்த வகையில் சமூக அபிவிருத்தியில் இளைஞர்கள் ஆக்கபூர்வமான வகிபாகத்தினைக் கொண்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது. மலையக மக்களின் பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் இளைஞர்களின் கவனம் திரும்பி இருந்ததை கடந்த காலத்தின் பல விடயங்கள் எடுத்துக்காட்டின. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்காக ஏனையோரையும் இணைத்துக் கொண்டு இவர்கள் குரல் கொடுத்திருந்தமை பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்நிலையில் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியாகவும் இவர்களின் செயற்பாடுகள் அதிகரிக்க வேண்டும் என்ற கோஷங்கள் வலுப்பெற்றிருந்தன. சமூக அபிவிருத்தியில் செயற்றிறன்மிக்க அரசியல் பிரதிநிதித்துவம் பல முன்னேற்றகரமான மாறுதல்களுக்கு வித்திட்டிருக்கின்றது.

கீழ் நிலைச் சமூகங்கள் பலவற்றின் மேல் நோக்கிய அசைவிற்கு தோள் கொடுத்திருக்கின்றது. இந்நிலையில் மலையகத்தில் படித்த இளைஞர்களின் தொகை அதிகரித்து வருகின்ற நிலையில் இத்தகையோர் அரசியல் களம் புகுந்து சமூக அபிவிருத்தியை சாதகப்படுத்த வேண்டும் என்ற கருத்து வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன. இன்றைய மலையக இளைஞர்களில் அதிகமானோர் படித்தவர்களாகவுள்ளனர். எனவே இவர்களின் சகலதுறைசார் வகிபாகம் மிகவும் இன்றியமையாததாகின்றது.

படித்தவர்கள் முன்வராத விடத்து முட்டாள்கள் ஆளநேரிடும் என்பதனை மறந்து செயற்படுதல் கூடாது. இவற்றோடு ஒரு அமுக்கக் குழுவாக செயற்பட்டு மலையக மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க இளைஞர்கள் முனைதல் வேண்டும் என்று கருத்துக்களும் இருந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. இதேவேளை மூத்த அரசியல்வாதிகள் இளைஞர்களின் திறன்களுக்கும் அறிவுசார்ந்த செயற்பாடுகளுக்கும் மதிப்பளித்து அவர்களுக்கு வழிவிடுவது அவசியமாகும். அரசியல் பேராசையால் இளைஞர்களைப் புறந்தள்ளிச் செயற்படுவதை இவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு சமூகத்தின் நிலைபேறான தன்மைக்கும், மேலெழும்புகைக்கும்  பல்துறைசார் விழிப்புணர்வுகள் அச்சமூகத்தவரிடையே ஏற்படுத்தப்படுதல் வேண்டும். மலையக சமூகம் பின்தங்கிய சமூகம் என்றவகையில் இது அதிகமாகவே தேவைப்படுகின்றது. இத்தகைய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதில் படித்த இளைஞர்கள் கூடிய அக்கறை செலுத்துதல் வேண்டும். படித்துவிட்டார்கள் என்பதற்காக சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்திக் கொள்ள யாரும் முற்படுதல் கூடாது. இது ஏறிய ஏணியை எட்டி உதைப்பதற்கு சமனாகும். இதைவிடுத்து சமூகத்தின் மேலெழும்புகைக்கு தம்மாலான உச்சகட்ட பங்களிப்பினை நல்குவதே ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாகும்.

சுறுசுறுப்பாய் இருங்கள். நீங்கள் நம்பும் விசயத்திற்காக தொடர்ந்து போராடுங்கள். நீங்கள் இதனைச் செய்யவில்லையெனில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டீர்கள் என்று அர்த்தம். நமக்கான தீர்வுகளுக்கு போராட வேண்டியது நாம்தானே தவிர மற்றவர்கள் கிடையாது. உனது குறிக்கோளில் வெற்றி பெற உனது எண்ணங்கள் உனது இலட்சியத்தை நோக்கியே ஒருமுகப் படுத்தப்பட வேண்டும் என்ற அப்துல் கலாமின் வைரவரிகளை மலையக இளைஞர்கள் மனதிருத்தி சமூகத்தின் எழுச்சியை சாதகமாக்க வேண்டும். இதைவிடுத்து இப்போது மௌனமாக இருந்துவிட்டு பின்னால் வருந்துவதால் பயனில்லை.

Tamil News