50ஆண்டுகளாக நாடற்ற தேசமக்களாக தங்கள் இறைமைக்காகப் போராடும் ஈழமக்கள்

564 Views

 

இறைமைக்காகப் போராடும் ஈழமக்கள்

அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் ஜனநாயகத்தின் அரசியலில் கலையியல் நிறைஞர்

இறைமைக்காகப் போராடும் ஈழமக்கள்: 10.01.1974 ம் திகதிய 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு இனப்படுகொலைகள் முதல் 48 ஆண்டுகளாகச் சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்பும் தொடர்கிறது.

  • இந்நாளை ஈழமக்கள் விடுதலைப் போராட்டத்தின் தொடக்க நாளாகவும் கருதலாம்
  • 04.02.2022 இல் 75வது சுதந்திர தினத்தில் ஒருநாடு ஒருசட்டத் தீவாக இலங்கையை மாற்ற முயலும் சிறிலங்காவின் சட்டவிரோத முயற்சியை முறியடிக்க இணைவோம்.

பிரித்தானிய  காலனித்துவ  அரசாங்கம்,  75  ஆண்டுகளுக்கு  முன்னர்,  04.02.1948  இல் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கியது.

பிரித்தானியா அப்பொழுது இந்தியாவில் சீக்கியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இந்திய அரசியலமைப்பில்  உரிய  இடமளிப்பதற்காக  அரசியலமைப்பு  உருவாக்கல் சபையை இந்தியாவில் நிறுவிச் செயற்பட்டது போல, ஈழத்தமிழ் மக்கள் தங்களுக்குரிய இடத்தை அரசியலமைப்பில் பெறுவதற்கான விருப்பைத் தெரிவிப்பதற்கான அரசியலமைப்பு உருவாக்கல் சபையை நிறுவி அதன்வழி சுதந்திர இலங்கை்கான அரசியலமைப்பை உருவாக்கவில்லை. இதுவே இன்ற வரையான ஈழத்தமிழர் இறைமைப் பிரச்சினை, மலையக மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைகளின் வித்தாக உள்ளது.

இறைமைக்காகப் போராடும் ஈழமக்கள்சோல்பரி பிரபு இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்க ஆணையராகச் செயற்பட்ட காலத்து இலங்கைத் தமிழர்களின் தலைவரான மகாராணியின் சட்டத்தரணிப் பட்டம் பெற்ற உலகப் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள், இலண்டனுக்குத் தமிழர்களின் அரசியலமைப்பு உரிமைகள் குறித்துப் பேச வந்த பொழுது அவரைச் சந்தித்துப் பேச வேண்டாமென்ற, அக்காலத்து இலங்கைச் சட்டவாக்கசபையின் தலைவர் டி எஸ் சேனநாயக்கா விடுத்த வேண்டுகோளை ஏற்றுப் பிரித்தானிய அரசாங்கம் அவரைச் சந்திக்க மறுத்தது.

பின்னர் தனது விருப்பப்படி சோல்பரி ஆணைக்குழு மூலம் ஈழத்தமிழர்களின் இறைமையையும் சிங்களவர்களின் இறைமையையும் பொதுவாக வைத்து சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமையைக் கொண்ட அரசியலமைப்பை உருவாக்கியது. பிரித்தானியாவின் இந்தச் செயலுக்குப் பிரித்தானியா தேயிலை, கோப்பி, இரப்பர், கொக்கோ உட்பட்ட இலங்கையின் பெருந்தோட்டப் பொருட்களைச் சந்தைப் படுத்தியதால் இலங்கைக்கு கொடுக்க வேண்டி இலண்டன் மத்திய வங்கியில் ஒதுக்கு செய்யப்பட்டிருந்த பெருந் தொகையான பணத்தைச், சிங்களத் தலைவரான டி எஸ் சேனநாயக்கா தங்களுக்குத் தரத்தேவையில்லை என்று கையூட்டுப் பேரம் பேசியமையே, காரணம் என்பது வரலாற்று ஆசிரியர்கள் கருத்து.

இலங்கைக்கான இந்த ஒதுக்கீட்டு நிதி வருமானம் முழுக்க முழுக்க மலையகத் தமிழ் மக்களின் இரத்த வியர்வை சிந்திய உடலுழைப்பால் ஈட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. அவ்வாறே பாக்கிஸ்தானிய இந்திய வர்த்தகப் பெருமக்களின் முதலீடுகளாலும் கடின உழைப்பாலுமே அந்நேரத்தில் இலங்கைக்கான அந்நியச் செலாவணி மிகப்பெருமளவில் ஈட்டப்பட்டுக் கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. அந்நேரத்தில் முஸ்லீம்களின் நாளாந்தப் பேச்சு மொழியாகத் தமிழே இருந்தது. மேலும் பிரித்தானியாவின் இலங்கைக்கான நிர்வாகமும் பொருளாதார முயற்சிகளும் இலங்கைத் தமிழர்களின் அதிகளவான பங்களிப்புடன் வளர்ந்தன என்பதும் வரலாறு.

ஆயினும் ஈழத்தமிழர்களின் இறைமையையும் இலங்கையின் தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைகளையும்  கவனத்தில்  எடுக்க  காலனித்துவ  பிரித்தானிய  அரசாங்கம் மறுத்தது. ஈழத்தமிழர்களின் இறைமையினை சிங்களப் பெரும்பான்மை யினரின் இறைமையுடன் இணைத்து

இலங்கை அரசுக்கான பொது இறைமையாகச் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சியை சோல்பரி அரசியலமைப்பின் மூலம் உருவாக்கியது. சோல்பரி அரசியலமைப்பின் 29(2) வது பிரிவை இலங்கையின் சிறுபான்மை மதங்கள் இனங்களுக்கு எதிரான சட்டங்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதனை எதிர்த்து மேன்முறையீட்டை பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலில் செய்யலாம் என அரசியலமைப்புப் பாதுகாப்பு இலங்கையின் சிறுபான்மையினங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது பிரித்தானியாவின் வாதமாக அமைந்தது.

இதன் அடிப்படையில் இலங்கையின் அதி உச்ச இறைமை பிரித்தானியாவிடமே உள்ளது என இரஸ்யா ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையைத் தனிநாடாக உறுப்புரிமை கொடுக்க விடாது இரண்டு தடவைகள், தனது இரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி 1948 முதல் 1956 வரை தடுத்தது. இவ்வாறு பிரித்தானியாவுடன் 1948க்குப் பின்னரும் பகிரப்பட்டிருந்த ஈழத்தமிழரின் இறைமையைப் பயன்படுத்தி கோடீஸ்வரன் என்பவர், தன்னைச் சிங்களம் மட்டும் சட்டத்தின் மூலம் வேலைநீக்கம் செய்தது சோல்பரி அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என பிரித்தானியப் பிரிவிக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்த வழக்கில், பிரித்தானிய பிரிவிக்கவுன்சில் அவரை மீளவும் வேலைக்கு நட்டஈடு செலுத்தி எடுக்குமாறும், சிங்களம் மட்டும் சட்டத்தை மீளாய்வு செய்து திரும்பவும் அரசியலமைப்புக்கு ஏற்ப நிறைவேற்றுமாறும், 1969இல் தீர்ப்பு வழங்கியது.

இதனை ஏற்க மறுத்த சிறிலங்கா அரசாங்கத்தினர் 1970ம் ஆண்டுத் தேர்தலை நடத்தி கூட்டரசாங்கத்தை  சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் அமைத்தனர். 22.05.1972இல் சிறிலங்காவின் கூட்டரசாங்கம் தமிழர்களின் விருப்புப் பெறப்படாத தன்னிச்சையான சிறிலங்கா சிங்கள பௌத்த குடியரசுப் பிரகடனத்தின் மூலம் சோல்பரி அரசியலமைப்பி லிருந்தும், பிரித்தானிய அரசி மாட்சிமைக்குரிய 2வது எலிசபேத் மகாராணி அவர்கள் இலங்கை நாட்டின் தலைவி என்ற நிலையில் இருந்தும் விலகியது.

இதனால் அன்று முதல் இன்று வரை 50 ஆண்டுகள் – அரை நூற்றாண்டுகள் ஈழத்தமிழர்கள் அரசற்ற தேசஇனமாக தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே அமைத்தல் என்னும் அடிப்படை மனித உரிமையைப் பேணும் வகையில் தங்களின் மக்கள் இறைமையை உறுதிப்படுத்தப் போராடி வருகின்றனர்.

சிறிலங்கா அரசாங்கம் பிரிவினைக்கோரிக்கை என ஈழத்தமிழ் மக்களின் இறைமையைத் திரிபுபடுத்தி வருகிறது. தனது ஈழத்தமிழின அழிப்பு அரசியலை சிறிலங்காவின் தேசியப் பாதுகாப்பையும்  ஓருமைப்பாட்டையும்  பேணும்  செயல்  எனவும்  தங்களின் மக்கள் இறைமைக்காகப் போராடும் ஈழத்தமிழர்களை இனஅழிப்புச் செய்வதைப் பயங்கரவாதத்திற்கு எதிரான தேசியப் பாதுகாப்புச் செயற்பாடெனவும் நியாயப்படுத்தி வருகிறது.

இறைமைக்காகப் போராடும் ஈழமக்கள்மேலும் அரசற்ற தேச இனமாகத் தமிழர்களை மாற்றிய 1972 இலிருந்து 2ஆவது ஆண்டிலேயே சிறிலங்கா, இலங்கையில் தமிழருக்குப் பண்பாட்டைப் பேணும் உரிமை கூட இல்லையென தலைநகரான கொழும்பில் மற்றைய நாடுகளில் நடந்தது போல நாட்டின் அரச தலைவரால் தொடங்கப் பெற்று நடைபெறுமென இருந்த 4வது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டுக்கு அனுமதி வழங்க மறுத்தது. பின்னர் ஈழத்தமழ் மக்கள் தாங்கள் தேசமாக எழுந்து யாழப்பாணத்தில் ஊரே விழாக்கோலம் பூண்டு நடாத்திய 4வது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டின் பண்பாட்டு ஊர்வலத்திற்கும் உரிய அனுமதியை மறுத்து இருவருடைய உயிர் இழப்புக்குக் காரணமாகியது.

இறுதி நிகழ்வான யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் முன் நடந்த நன்றி தெரிவிப்பு விழாவினைப் படைபலம் கொண்டு. கூட்டமாக இருந்த மக்கள் மேல் துப்பாக்கிப் பிரயோகம் செய்து மின்கம்பியைத்  துண்டித்து  விழ  வைத்து  9   தமிழர்கள்  உயிரிழக்கக் காரணமாகியது. கூடியிருந்த அப்பாவி மக்கள் மேலும் பெண்களை அவமானப்படுத்துவது உட்பட்ட பல்வேறு தாக்குதல்களைப் படையினர் நடாத்தினர். இதனால் மொத்தமாக 11 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்ட இந்த வரலாற்று நிகழ்வைப் பண்பாட்டு இனஅழிப்பாகவே வரலாறு கட்டமைக்கிறது. காரணம் இவர்கள் தங்கள் பண்பாட்டைக் கொண்டாடுவதற்கு அமைதியான முறையில் கூடிய அப்பாவித் தமிழ் மக்கள்.

இந்த அப்பாவித் தமிழ் மக்களைப் படைபலம் என்னும் அரச பயங்கரவாதத்தாலும் உரிய அனுமதி மறுப்பென்ற அரச பாராபட்ச சட்ட ஆட்சியாலும் சிறிலங்கா கொன்றழித்தது. இந்த 10.01.1974 தான் ஈழமக்களின் அரசியல் போராட்டம் தங்களின் உயிரையும் உடமைகளையும் நாளாந்த வாழ்வையும் பாதுகாக்கும் மனித உரிமைகள் போராட்டமாக மாறியது. இதனை ஆயுத எதிர்ப்பின் மூலம் தங்களைப் பாதுகாக்கும் ஆயுதப்போராட்டமாக, முழுஅளவிலே எழ வைத்தது. அந்த வகையில் இன்று வரை 48 ஆண்டுகால இனஅழிப்புக்கு எதிரான மக்கள் போராட்டமாக ஆயுத எதிர்ப்பாக 35 ஆண்டுகளும் துப்பாக்கிகள் மௌனித்த அரசியல் போராட்டமாகப் 13 ஆண்டுகளும் ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் தொடர்கிறது.

இவ்வாறாக, தங்களின் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கான தங்களின் மக்களால் தங்களின் மக்களுக்காக தங்களின் மக்களாலான மக்கள் அரசாக அமையக் கூடிய அரச முறைமை யொன்றின் உலக அங்கீகாரத்தை எதிர்பார்த்து 50 ஆண்டுகால ஈழமக்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 50 ஆண்டுகளாக – அரைநூற்றாண்டு காலம் உலகின் ஒரு சிறிய மக்களினம் தொடர்ந்து அரசற்ற தேகமக்களாக வாழ்ந்து இனஅழிப்புக்கு உள்ளாகி வருகிறது என்பதால் ஈழத்தமிழர் பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினையல்ல. அனைத்துல நாடுகளின் மன்றத்தால் தீர்க்கப்பட காலனித்துவ காலப் பிரச்சினையாகத் தொடர்கிறது. பிரித்தானிய அரசு தன்னால் உருவாக்கப்பட்ட இப்பிரச்சினைக்கு தகுந்த நீதியானதும் உண்மை யானதுமான நேர்மையான தீர்வை அனைத்துலக மட்டத்தில் பெற்றுக் கொடுக்கும் என்கிற உறுதி பிரித்தானியாவில் பிரித்தானியக் குடிகளாக வாழும் 500000 க்கு மேற்பட்ட தமிழர்களுக்கும் உண்டு.

இறைமைக்காகப் போராடும் ஈழமக்கள்பிரித்தானிய லேபர் கட்சி பிரதமர் அட்லி அன்று விட்ட தவறே இன்று ஈழத்தமிழர்களின் இனஅழிப்பின் மூலகாரணமாக உள்ளது. மதிப்புக்குரிய மாகிரெட் தச்சர் அம்மையார் அவர்கள் பிரித்தானியப் பிரதமராக இருந்த காலத்தில் ஏற்பட்ட இன்றைய ஈழத்தமிழ் பிரச்சினைகளுக்கு அவர் போதிய அக்கறை காட்டாததும், சிறிலங்கா இனஅழிப்பில் வேகம்பெற வைத்தது. இந்தியப் பிரதமர் மதிப்புக்குரிய இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் அவர் எடுத்த சில நடவடிக்கைகளுடன் மதிப்புக்குரிய மாகிரெட் தச்சர் அம்மையார் இணைந்து பலப்படுத்தியிருந்தால் ஈழத் தமிழர் பிரச்சினை அனைத்துலகப் பிரச்சினை என்ற நிலையினை ஆர்ஜென்டினா ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈழத் தமிழர்களுக்கான பாதுகாப்பு தீர்மானத்தை முன்மொழிந்த வேளையிலேயே அடைந்திருக்கும்.

ஆயினும் கொன்சர்வேடிவ் கட்சி அன்று விட்ட தவறுகளை, மாற்றக் கூடிய வகையில், இன்று பிரித்தானியப் பிரதமர் மதிப்புக்குரிய பொரிஸ் யோன்சன் அவர்களும், பிரித்தானிய மற்றைய கட்சியினரான லேபர் கட்சி, லிபரல் கட்சி, கிறீன் கட்சி, ஸ்கொட்லாந்து, வேல்சு, வட அயர்லாந்துப் பிரதேசக் கட்சிகளும், ஈழத்தமிழர் பிரச்சினையில் பாதுகாப்பான அமைதியான முறையில் ஈழமக்கள் வாழ்வதற்கான வழியில் அதனைத் தீர்த்து வைக்க வேண்டுமென்ற பெருவிருப்புக் கொண்டவர்களாக உள்ளனர். கனடாவிலும் கூட இந்நிலை உண்டு. இந்நேரத்தில் பிரித்தானியாவிலும் உலகெங்கும் வாழும் உலகத்தமிழினத்தினர், ஈழத்தமிழர்கள் மேல் செய்யப்பட்டு வரும் ஈழத்தமிழின அழிப்பை ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்னும் புதிய அரசியலமைப்பு மூலம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைவானதாக மாற்ற முயலும் பேரபாயத்தில் இருந்து, ஈழத்தமிழ் மக்களைப் பாதுகாக்க ஒருங்கிணைத்து பாடுபட 2022இல் தமிழன்னை அழைக்கின்றார்.

இந்த ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்பது ஈழத்தமிழரின் இறைமையை மறுக்கும் சட்டவாக்கம். எனவே இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை மொழிப் பிரச்சினை இனப்பிரச்சினை மதப்பிரச்சினை என்ற கருத்தியில்களைக் கடந்து “ஈழத்தமிழரின் இறைமைப்பிரச்சினை” என்ற உண்மை வடிவில் மேலெழுந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தி உலக நாடுகளதும் அமைப்புக்களதும் ஆதரவை ஈழத் தமிழர்களுக்குப் பெற்றக் கொடுக்க அனைத்து  உலகத் தமிழர்களும் இணைவோம். இயன்றதைச் செய்வோம். இனி இல்லை இனஅழிப்பு ஈழத் தமிழர்களுக்கு என்கிற பாதுகாப்பான அமைதி உள்ள  ஆட்சிமுறை ஈழத்தில் தோன்ற உழைக்க உறுதி பூணுவோம்.

Tamil News

Leave a Reply