ஈழத் தமிழர்களின் துயரங்களைத் தீர்க்க வேண்டியது எங்கள் தாய்த் தமிழகத்தின் கடமை – வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஸ்ணன்

619 Views

தாய்த் தமிழகத்தின் கடமை

தாய்த் தமிழகத்தின் கடமை: ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு அமைய வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவரும், அதற்காக நீண்டகாலம் அயராது உழைத்து வருபவரும், திமுகவின் செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஸ்ணன் அவர்கள், 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பாகவும், ஈழத்தமிழர் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் இலக்கு உடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி

கேள்வி:
இலங்கை தமிழ் முஸ்லீம் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசை கோருவது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்:
இந்த சூழ்நிலையில் இது ஒரு நல்ல விடயம் தான். எங்களைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தம் என்பது ராஜீவ் – ஜெயவர்த்தன செய்துகொண்ட இலங்கை இந்திய ஒப்பந்தம். அந்த ஒப்பந்த காலத்தில் களத்தில் இருந்தவர்கள் விடுதலைப்புலிகள். அவர்கள் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த ஒப்பந்தத்தில் விடுதலைப்புலிகள் சார்பிலோ ஈழத்தமிழர் சார்பிலோ முக்கியமான எவரினதும் கையொப்பமும் இன்றியே ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது. இது பற்றி பல விமர்சனங்களும் உண்டு.

ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் அதை நிறைவேற்றுவோம் என்று உறுதிமொழி கொடுத்தது. அதற்கு LLRC என்ற அறிக்கை பெறப்பட்டு ஒரு நல்லிணக்கத்தை உருவாக்குவோம் என்பது மட்டுமல்லாமல், 13இற்கு மேலே 13+ ஐ நிறைவேற்றுவோம் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னதும் உண்டு. ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி தான் 13ஆவது திருத்தம் என்பது உண்டு. சரி. அதாவது வருமா? சரி ஈழம் தான் இல்லை. ஈழம் தான் வேண்டும். தனி நாடுதான். இனி சகவாழ்வு இல்லை என்ற தந்தை செல்வா வடித்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி தான் தனி ஈழம் வேண்டும் என்று விடுதலைப்புலிகள் களத்தில் நின்று போராடினார்கள். சொல்லொணா தியாகங்கள் செய்து, எத்தனை பேருடைய வீரமரணங்கள், முள்ளிவாய்க்காலில் நடந்த துயர சம்பவங்கள். அதில் இந்திய சர்க்கார் துணைபோய், பல்வேறு நாடுகள் இலங்கைக்குத் துணை போய், அன்று தனியாக நின்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தை தோற்கடித்து முள்ளிவாய்க்காலில் பெரும் துயரத்தைக் கொடுத்தது இலங்கை அரசாங்கம். அதில் இந்திய அரசாங்கத்திற்கும் மாபெரும் உதவி உண்டு. மறுக்கவில்லை.

சரி இந்த 13ஆவது திருத்தத்தை முஸ்லிம்கள் சேர்ந்து கொண்டு வருவது நல்லது தான். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும்  இடையில் எதிர்வினை இருந்த காலத்தை எல்லாம் மறந்து, ஒரே களத்தில் நிற்பது நல்லதுதான். யாழ்ப்பாணத்தில் தொடங்கி, அம்பாறை மட்டக்கப்பு வரைக்கும் தெற்கில் தமிழர் வாழும் பகுதியில் ஒரு முன்னேற்றம் வருவது நல்லதுதான். சொல்லிக் கொண்டிருக்காமல், நல்ல ஒரு முடிவு வரவேண்டும் என்பது தான் இன்றைய தேவை.

ஆனால் தனி நாடு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு இடைக் காலத்தில் இதுதான் நல்லதொரு தீர்வு என்றால், அதை ஏற்றுக் கொண்டு, மக்கள் நிம்மதியாக வாழ முடிந்தால், ஈழத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டால், எங்களைப் போல ஈழத்தமிழர்களுக்காக உழைக்கின்ற ஆதரவாளர் களாகிய எங்களுக்கும் திருப்தி. அவர்களின் நலன், மனநிம்மதி தான் எங்களுக்கு அவசியம்.

கேள்வி:
இந்த முயற்சிக்கு தமிழக அரசு எத்தகைய ஆதரவை வழங்கும்?

பதில்:
அதற்கு சரியான புரிதலோடு என்றால் சொல்ல முடியும். ஏனென்றால், முள்ளிவாய்க்கால் முடிந்தவுடன், எங்கள் தலைவர் மறைந்த கலைஞர் அவர்கள் ரெசோ அமைப்பை மறுபடியும் இரண்டாவது தடவை புதுப்பித்து, அதற்கான களப்பணியை ஆற்றும் பொறுப்பை எனக்குத் தந்தார். ரெசோ மாநாட்டை 2012இல் சென்னையில் நடத்தினோம். அதற்குப் பின்னர் இன்றைய முதல்வரோடு இணைந்து, ஐ.நா. மன்றத்திலும், ஜெனிவா ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்திலும் மனுக் கொடுப்பதில், மனுவைத் தயாரிப்பதில்  முக்கிய பங்காற்றியவர். அதுபோக பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் உலகத்தமிழ் மாநாட்டில் தமிழ்நாட்டுத் தலைவர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டார்கள். அதில் வை.கோ, நெடுமாறன் கலந்து கொள்ளவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி ஜி.கே. மணி, டாக்டர் கிருஸ்ணசாமி, திருமாவளவன், இந்திய பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த தா.பாண்டியன். டி.ராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர். இறுதியாக அந்த மாநாட்டில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களின் நலனும், அவர்களின் மன அமைதியும், நிம்மதியான வாழ்க்கையும் அவசியம். 13ஆம் திருத்தம் வந்தால் அதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் தன்னாலான எல்லாவிதமான அர்ப்பணிப்புகளையும் பணிகளையும் நிச்சயமாகச் செய்யும் என்று அன்றைக்கே உறுதியளித்துள்ளார். அந்த மாநாடு நடந்து கிட்டத்தட்ட எட்டு ஒன்பது ஆண்டுகளாகி விட்டன.

நான் திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு செயலாளராக  இருக்கிறேன். அந்த வகையில் அதற்கான முன்முயற்சிகளை எடுப்போம். ஈழத் தமிழர்கள் தொடர்பான விடயங்களை தமிழக முதலவரிடம் ஈழத்தமிழர் குறித்தான விடயங்களை வலியுறுத்தக் கூடியவனாக ஈழத்தமிழர்களுக்காக  நிச்சயமாக நான் இருப்பேன்.

கேள்வி:
தமிழ் மக்கள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தும் வண்ணம் ஒரு சூழலை இந்திய மத்திய அரசு உருவாக்க மாநில அரசு அழுத்தம் கொடுக்குமா?

பதில்:
நிச்சயமாகத் கொடுக்கும். 2009 காலகட்டங்களில் நாங்கள் காங்கிரஸ் கட்சியில் கூட்டாக இருந்து அமைச்சரவையில் பங்கேற்றது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்போது முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்த போது, நானும், அழகிரி, ராஜா போன்றோர் இராஜினாமா செய்து, எங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றோம். எதிர்ப்பைத் தெரிவித்தோம். ரெசோ இயக்கமாக முதல்வர் லண்டன் வந்து பேசினார். பிரிட்டன் பாராளுமன்றத்தில் சென்று ஈழத்தமிழர்களுக்காகப் பேசினோம். ஐ.நா. வரைக்கும் சென்று கலைஞரின் மனுவை வழங்கினோம். அந்த மனுவில் ஈழத்தமிழர் நலன் பேணப்பட வேண்டும் என்றும், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, டெல்லியில் ரெசோ நடத்திய மாநாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, முதலமைச்சர் பேசினார்.

மேலும் பல்வேறு தூதரகங்களுக்குச் சென்று ஈழத்தமிழர் சார்பாக பேசினோம். அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு செல்லக்கூடாது என்று கோரிக்கை வைத்ததையடுத்து, பிரதமர் மன்மோகன்சிங் அந்த மாநாட்டிற்குச் செல்லவில்லை. இப்படியெல்லாம் கடந்த காலத்தில் நாங்கள் செய்ததை எல்லாம் நினைவில் கொண்டு, மத்திய அரசிற்கு அழுத்தத்தைக் கொடுப்போம்.

கேள்வி:
இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்தால் இந்தியாவிற்கு என்ன நன்மை இருக்கிறது?

பதில்:
தென்கிழக்கு ஆசிய புவியரசில் பல பிரச்சினைகள் உள்ளன. இந்தியாவைச் சுற்றிலும் எதிரிகள் உள்ளார்கள். பாகிஸ்தான் இந்தியாவுக்கு நல்ல எண்ணத்தில் நல்ல திறமான உறவுகள் இல்லை. சீனாவிடமும்  நல்ல உறவு இல்லை. நேபாளமும், இன்றைக்கு சரியாக இந்தியாவுடனும் ஒட்டுறவு இல்லாமல் இருக்கின்றது. வங்கதேசத்திற்கும், இந்தியாவுக்கும் சரியான உறவுகள் இல்லை. அதே போல மியான்மரில் பல பிரச்சினைகள். உங்களுக்கு நன்றாக தெரியும். இலங்கையின் ஆதரவோடு சீனா இன்றைக்கு இந்து மகா சமுத்திரத்தில் குடிகொண்டு விட்டது. இப்போது கச்சத்தீவு தொடங்கி ராமேஸ்வரம் எல்லைவரை. இரண்டு நாளைக்கு முன்னர் தான் சீன அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில், இலங்கை ஈழத்தமிழர்கள் பிரச்சனைகளுக்கெல்லாம், இந்தியா ஆதரவு நீட்டினால், நாளைக்கு, அது நமக்கு ஒரு பாதுகாப்பு. இந்து மகா சமுத்திரத்தில் ஏற்கனவே சீனாவுடைய ஆதிக்கம்.  பட்டு வழிச்சாலை, வியாபார வழிச்சாலை என்று ஆரம்பித்து அது ஏற்கனவே அந்த ஆபிரிக்கா தென்னமெரிக்க நாடுகளுக்கு செல்லக்கூடிய வகையில் பட்டு வழி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா அமைதி மண்டலமாக இருந்தது. அங்கே சீனாவின் ஆதிக்கம், நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. அது மட்டும் இல்லை அம்பாந்தோட்டை, 99 வருட குத்தகை. இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தை தனி இடத்தை சுய அதிகாரம் பெற்ற ஒரு துறைமுகம் கூட்டமாக ஒரு பகுதியை தன் வசமாக்கி இருக்கிறது. அதனை China city என்றழைக்கின்றார்கள். இலங்கை முழுவதும் சீன எழுத்துக்களில் பலகைகள் உள்ளன.

இப்படி சீனாவின் ஆதிக்கம், நாளுக்கு நாள் வரும்போது  நமக்கு வடபகுதியிலும் சீனா, தென் பகுதியிலும் இலங்கையின் ஆதரவோடு சீனா வந்து விட்டது. இந்து மகா சமுத்திரத்தில் ஒரு பக்கத்தில், டியூகோகாசியா தீவில் அமெரிக்காவுடைய ஆதிக்கம் இருந்தது. அப்போது இந்திரா காந்தி காலத்திலே அமெரிக்கா, டிக்ஸித் காலத்தில் ஒரு ராணுவ தளம் அமைக்கும்போது அன்றைக்கு சோவியத் ரஸ்யா பிரிவாகவில்லை. அப்போது சோவியத் ரஸ்யாவும், இந்தியா கடுமையாகப் போராடி அந்த டியூகோகாசியாவில் இருந்த அந்த  அமெரிக்க இராணுவ தளத்தை அப்புறப் படுத்தினார்கள். அந்த ராணுவ தளத்தை  அமைப்பது டியூகோகாசியாவில் இருந்த தீவு அதாவது சீசெய்ன்ஸினுடைய சொந்த பூமி. அதனை பிரிட்டன்  குத்தகைக்கு எடுத்து  அதை துணைக் குத்தகைக்காக  அமெரிக்கா அன்றைக்கு எடுத்து சென்றதை அன்னை இந்திரா காந்தியினுடைய கடுமையான போராட்டத்தின் விளைவாகவும் கடுமையான எதிர்ப்பிலும் எடுத்துச் சென்றார்கள். திரும்பவும்  அதே இடத்தில் அமெரிக்க இராணுவ தளம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து கிட்டத்தட்ட சில ஆயிரம் கிலேமீற்றர்  இலங்கையைத் தாண்டி அமெரிக்க இராணுவ தளம் இருப்பது நல்லதல்ல.

ஒரு பக்கம் பிரான்ஸ், அதே போல கீழ்ப்புறம் கிழக்குப் பகுதி இந்துமகா சமுத்திரப் பகுதியில் ஜப்பான்  எண்ணெய்  வளம் பற்றிய  ஆய்வுகள் நடத்திக் கொண்டிருக் கின்றது.  திருகோணமலை  ஒரு கேந்திரப்பகுதி திருகோணமலையில் அனைத்து கட்சிகளும் கண் வைத்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, அமெரிக்கா ஒரு முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்  திருகோணாமலை  துறைமுகத்தை குத்தகைக்கு  கேட்டது.  voice of Americaக்காவும் எண்ணெய் கிடங்குகள் வைக்க கேட்டது. அன்றைக்கு இந்தியா எதிர்த்ததால்  வழங்கவில்லை. இப்படியான நிலையில் புதிய அரசியலில் பல சிக்கல்கள். அதே போல  சீனா இன்றைக்கு வடக்கையும் தரை வழியாக பட்டு வழிச்சாலை போட்டு மும்பை வழியாக ஆப்கான் வழியாக, பாகிஸ்தான் வழியாக, கிட்டத்தட்ட நம்ம குஜராத்  கடல் எல்லை வரை எட்டி விட்டார்கள். வடக்கே தரைவழி மார்க்கமாக, பட்டுவழிச்சாலை.

இங்கே நம்முடைய இந்து மகா சமுத்திரத்திலும் கடல் மார்க்கமாக, பட்டு வழிச்சாலை. இதெல்லாம் கவனித்து  இந்த சூழலில்  இந்தியாவுக்கு பாதுகாப்பு ஒன்று இருக்கின்றதால் ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிட்டு அதில் ஒரு மேலாண்மையை நிறுவி தன்னுடைய ஆளுமையை நிறுவி, ஈழத்தமிழர் அத்தனை பேரும், இந்தியாவினை தாய்நாடு என்று நினைத்தால். இந்தியாவில் போர் நடந்தது. இந்தியாவுக்கும்  இலங்கையருக்கும்  போர் நடந்தது. 1964இல்  சீனவுக்கும்  அப்போது செல்வநாயகம் அவர்கள் வீரசிங்கம் அரங்கில் என்ன பேசினார்? இந்தியா எங்களுடைய தாய்நாடு. ஜவஹர்லால் நேரு ஒப்பற்ற தலைவர். இங்கே நிதி திரட்டி இருக்கிறோம். யாழ்ப்பாணம் தெருக்களில் நிதி திரட்டி இருக்கிறோம். இந்த நிதியை நாங்கள் இந்திய அரசு எங்களுடைய தாய்நாட்டு அரசுக்கு, எங்களுடைய, ஜவஹர்லால் நேருக்கு அனுப்பப் போகிறோம் என்று வீராவேசமாக பேசவில்லையா? இது எவ்வளவு ஒரு அன்பான விஷயம். அன்றைக்கு ஆயுதப் போராட்டம்  கிடையாது. இது 1964இல்.

வங்களாதேசம் பெற்றுத்தர வேண்டும் என இந்திரா தீர்க்கமாக இருந்தபோது, என்ன சொன்னார்கள்? பாகிஸ்தான் விமானங்கள்  வந்தால் கொழும்பில் எண்ணெய் போட்டு அனுப்பாதீர்கள் என்று சொன்னார்கள். அதை மறுத்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா எண்ணெய் போடுவதற்கான உதவி செய்தால்தான் இராணுவங்களை, இராணுவ விமானங்களை பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பலாம் என்ற  சொல்லை மீறி இந்தியாவிற்கு இலங்கை உதவவில்லை. இந்தியா பல விடயங்களுக்கு ஜவஹர்லால் நேரு காலத்தில்  இலங்கைக்கு  உதவியுள்ளது. அந்த நன்றி விசுவாசம், காட்டவே இல்லை இலங்கை பல நேரத்திலே! திருகோணமலை பிரச்சனையும் காட்டவில்லை. அதேபோல சீனா உறவு பிரச்சினையிலும் காட்டவில்லை. இந்தியாவுக்கு விரோதமாக எல்லா விடயங்களும் இடம்பெறுகின்றது. அன்று சேனநாயக்கா தொடங்கி பண்டாரநாயக்கா வரை, இன்றைக்கு ராஜபக்ச வரைக்கும் இருக்கின்ற அத்தனை பேரும் சாட்சி.

அதே போல எத்தனை ஒப்பந்தங்கள்?  அங்கே உள்ள ஈழத்தமிழருக்கும் சிங்கள அரசுக்கும் எத்தனை ஒப்பந்தங்கள் அந்த காலம்  சுதந்திரம் பெற்ற காலம்? அந்த ஒப்பந்தத்தில் எந்த ஒப்பந்தமாவது உறுதியாக, நிறைவேற்றப்பட்டதா? விடுதலைப் புலிகள் சரி சமரசத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்றார்கள். என்ன நடந்தது? ஏதாவது ஒன்று இன்று வரைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டதா?  அந்த பூர்வீக மண்ணில் பிறந்த அதாவது  ஈழ மண்ணில் பிறந்த ஈழத்தமிழர்களுடைய நலனை பாதுகாப்பது எங்களுடைய தோழமைக்கும் முதலில் தொப்புள் கொடி உறவுக்கு மட்டும் இல்ல, இந்தியாவுக்கே நாளைக்கு நல்லது. இந்தியா நாளை தமிழர்களை தம் வசம் வைத்துக் கொண்டால் நிச்சயமாக, இந்தியாவுக்கு ஒரு பாதுகாப்பு.  ஈழத்தமிழர்களுக்கும் ஒரு நல்லது பிறக்க வேண்டும். இந்தியாவிற்கு ஈழத்தமிழர்கள் பிரச்சினையை அணுகினால் முக்கிய தீர்வுகள், பாதுகாப்பு, அதே போல இந்தியா என்ற வல்லமை நாடு இங்கே நிலைநிறுத்துகிறது என்ற ஒரு பெயரும் கிடைக்கும். சீனா, ஒரு பக்கத்தில் கடுமையாக, வளர்ந்து கொண்டு வருகிறது. அது இந்தியாவுக்கு நல்லதல்ல.

கேள்வி:
இலங்கை மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை ஒன்று இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளதா?

பதில்:
1970களிலிருந்து ஈழத்தமிழர் பிரச்சினைக்காக நெடுமாறனோடு களப் பணியாற்றியவன். பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் போன்றோர் என்னோடு தங்கியிருந்தார்கள். பாண்டிபஜார் சம்பத்தின் போது எனக்கு நெருக்கமாக இருந்தார். அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், யோகேஸ்வரன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட எனக்கு நெருக்கமானவர்கள். அவர்களுடனும் நான் பேசிக் கொண்டிருந்தேன். ஈழத் தமிழர்களின் துயரங்களைத் தீர்க்க வேண்டியது எங்கள் தாய்த் தமிழகத்தின் கடமை. அந்த வகையில், மோடி அரசிற்கு என்ன செய்யலாம் என்ற குறிப்பு முறையாக அனுப்பப்பட்டுள்ளது. திமுகவிலிருந்து ஈழத்தமிழருக்கான பணியை மோடி ஆட்சியிலும் செய்துள்ளேன். இப்போதும் இந்தக் குறிப்புகள் என்னிடமிருந்து வாங்கிச் சென்றுள்ளார்கள். அந்தக் குறிப்புகளில் நான் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால்,

  1. இதுவரை அங்கே தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். இன அழிப்பு நடந்தது. அங்கு இனஅழிப்பு நடந்தது மட்டுமல்ல, அந்த இன அழிப்பு பற்றி சர்வதேச, சுதந்திரமான, நம்பிக்கையான ஒரு விசாரணை அவசியம் நடத்தப்பட வேண்டும். லைபீரிய அதிபர் மீது எவ்வாறு விசாரணை நடத்தப்பட்டதோ அதேபோன்று விசாரணை நடத்தப்பட்டால், ரணங்களுக்கு ஓரளவு மருந்து போட்டது போல இருக்கும். அந்த விசாரணைக்கான முயற்சியை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இது ஏற்கனவே தீர்மானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
  2. வடக்கு கிழக்குப் பகுதிகளில் 13ஆம் திருத்தச் சட்டம் 13+ என்பது நடைமுறைக்கு வரவேண்டும்.
  3. அங்குள்ள ஈழத்தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஈழத்தமிழர்கள் நிம்மதியாக வாழ என்ன வழி? ஈழத் தமிழர்கள் உரிமைகள் பெறவேண்டுமாயின் எந்த அரசியல் நடைமுறை? என்பது குறித்தான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
  4. வடக்கு கிழக்கு மாகாணசபை இருந்தது. விக்னேஸ்வரன் முதல்வராக இருந்தார். அதிகாரம் இல்லை. வரதராஜப்பெருமாள் முதல்வராக இருந்த காலத்திலும் அவர் இந்தியாவில் மத்தியப்பிரதேசத்தில் தான் வாழ்ந்தார். இந்தியாவைப் பொறுத்தவரையில் மாநில சுயாட்சி வேண்டும் என்று கேட்கின்றோம். சட்டம் ஒழுங்கு, வருவாய், நில உரிமை இவை எல்லாம் மாநில அரசிடம் இருக்கின்றது.

அங்கு மீன்பிடித் தொழில் முக்கியமான ஒரு தொழில். இதற்கான ஒரு முடிவை எடுக்க வேண்டுமாயின் கொழும்பில்தானே எடுக்க வேண்டும். வடக்கு கிழக்கு மாநிலத்தில் எடுக்க முடியாதே. என்ன அதிகாரங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. அங்கு ஒரு முடிவு எடுக்க வேண்டுமாயின் முதல்வர் ஊடாக கொழும்பிற்கு சென்று அங்குதான் முடிவு எடுக்க வேண்டும். முதல்வரால் முடிவு எடுக்க முடியாதே. இப்படிப்பட்ட மாகாண அரசாங்கம் தேவைதானா? அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து அதைச் சீர்திருத்த வேண்டும் என்று கேட்டுள்ளேன்.

  1. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது காணாமல் போனோர் பற்றி அறிந்து அவர்களின் உறவினரிடம் அவர்கள் பற்றிய தகவல்களைச் சொல்லுதல்.
  2. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் சிறைச் சாலைகளில் இருக்கின்றார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
  3. வடக்கு கிழக்குப் பகுதியில் பல இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. அவை அகற்றப்பட வேண்டும். அது மட்டுமல்ல, சில காலங்களின் முன்னர் நான் இலங்கைக்குச் சென்றிருந்தேன். அங்கு பல இடங்களில் இலங்கை இராணுவம் தமிழர்களின் நிலங்களில் முகாமிட்டு இருக்கின்றனர். முள்ளிவாய்க்கால முடிந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அவர்கள் அங்கே இருக்க வேண்டிய அவசியம் என்ன? சிங்கள அரசாங்கம் அந்த இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்.
  4. அங்குள்ள தமிழர்களின் காணிகள், வீடுகள் யாருக்கு உரிமையானதோ அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்கான வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன.

மேற்கூறப்பட்ட விடயங்கள் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். நான் திமுக அரசில் ஈழத்தமிழர்கள் பற்றி அக்கறை கொண்டவன் என்ற வகையில் மத்திய அரசிலிருந்து அதிகாரிகள் என்னிடம் இரண்டு தடவைகள் ஆலோசனை கேட்டுச் சென்றுள்ளார்கள். விரிவான ஆங்கிலத்தில் இந்த விடயங்களைத் தயாரித்து அனுப்பியுள்ளேன். இந்த விபரங்கள் தொடர்பாக இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு நூல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. இந்தப் பணியை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். தமிழகத்தில் வைகோ போன்ற எல்லாக் கட்சிகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றார்கள்.

என்னைப் பொறுத்தவரை தெளிவாகச் சொல்லுகின்றேன். அழுத்தமாக, திருத்தமாக, பலமுறை சொல்லியுள்ளேன். ராஜீவ் படுகொலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும், பிரபாகரனுக்கும் சம்பந்தமில்லை. இதை கிட்டு தொடக்கத்திலேயே மறுத்துள்ளார். விடுதலைப்புலிகள் ராஜீவைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்திரா காந்தி மீது விடுதலைப் புலிகள் நன்றி பாராட்டினார்கள். இந்திரா அம்மா இருந்தால் எங்களுக்கு ஈழம் கிடைக்கும். இந்திரா காந்தி இறந்த போது பிரபாகரன் என்ன வேதனைப்பட்டார் என்று எனக்குத் தெரியும்.

83களில் பிரபாகரன் இந்திரா காந்தி அம்மையாரைப் பற்றி என்னுடன் பேசும் போது, “அண்யே தமிழீழம் நிச்சயமாகக் கிடைக்கும். அந்த ஒரு அழுத்தமான பார்வை, தீர்க்கமான பார்வை எங்களுக்கு இருக்கின்றது. நிச்சயமாக நம்பிக்கை இருக்கின்றது. தமிழீழம் கிடைத்ததும் அதை ஆரம்பித்து வைப்பதற்கு இந்திரா காந்தி அம்மையாரை நாங்கள் பலாலி விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு வைத்து வரவேற்போம். அத்துடன் எங்களுக்காகக் குரல் கொடுத்த உங்களைப் போன்றோரை, நெடுமாறனைப் போன்றோரை, அனிதாப் பிரதாப் போன்றோரை அதே சிவப்புக் கம்பளத்தில் நான் வரவேற்பேன் அண்ணை.” என்று கூறினார். அதற்கு நான் சொன்னேன் வங்கதேசத்தை உருவாக்கியது போல உங்களுக்கும் நிச்சயம் உருவாக்கித் தருவார்கள்” என்று   சொன்னேன். கடந்த காலத்தில் காங்கிரசில் நானும் நெடுமாறனும் இருந்த போதுதான் நெடுமாறன் இது குறித்து இந்திரா காந்தி அம்மையாரிடம் அழுத்தமாகப் பேசியிருந்தார். இது நடந்தது 82, 83 காலப்பகுதிகளில். ஆனால் இந்திரா காந்தி அம்மையார் துயரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.

ஈழம் பெற்றுவிடுவோம் என்று பிரபாகரன் நம்பிக்கையோடு இருந்தார். இன்று அது நடக்கிவல்லை. தள்ளிப் போய்விட்டது. இது ஒரு துக்ககரமான பின்னடைவு தான் நான் மறுக்கவில்லை. சரி ஈழம் கிடைக்கவில்லை. தனிநாடு கிடைக்கவில்லை. இப்போதுள்ள சூழ்நிலைக்கு நான் மேலே சொன்ன 8 கோரிக்கைகளையும் நிறைவேற்றக்கூடியதாக இந்திய மத்திய அரசு அந்தக் கடமையை ஆற்ற வேண்டும் என்று எங்களைப் போன்றோர் நிச்சயமாகக் குரல் கொடுப்போம். என்ன துயரம் என்றால் உங்களுக்காகக் குரல் கொடுக்க எங்களைப் போன்றோர் நாடாளுமன்றம் செல்லவில்லை. அதற்காக நாங்கள் கவலைப்படவில்லை. என்றைக்கும் எங்கள் குரல் உரத்த குரலாக ஈழத்தமிழருக்காக இருக்கும். ரெசோ என்றாலோ ஈழத்தமிழர் பிரச்சினை என்றாலோ தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் என்று பத்துப் பதினைந்து பேரைத்தான் இன்று சொல்ல முடியும். எங்கள் குரல் ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு இருக்கும் என்று உறுதியாகச் சொல்கிறேன்.

Tamil News

1 COMMENT

  1. […] தாய்த் தமிழகத்தின் கடமை: ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு அமைய வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவரும், அதற்காக நீண்டகாலம் அயராது உழைத்து வருபவரும், திமுகவின்மின்னிதழை முழுமையாக பார்வையிட…https://www.ilakku.org/ilakku-weekly-epaper-164-january-08-2022/ https://www.ilakku.org/ilakku-weekly-epaper-163-january-02-2022/https://www.ilakku.org/  […]

Leave a Reply