பெரும்பான்மைக் கட்சிகள் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குவதற்கே முற்படுகின்றனர்…

484 Views

உரிமைகளை நசுக்குவதற்கே

“பெரும்பான்மைக் கட்சிகள் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குவதற்கே முற்படுகின்றனவே தவிர அவர்களின் நலன்களைப் பேணுவதாக இல்லை. இதனால் மலையக சமூகம் பல துறைகளிலும் தொடர்ந்தும் பின்தள்ளப்படும் நிலை உருவாகி வருகின்றது” என்று முன்னாள் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் எம்.ராம் தெரிவித்தார்.

 இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் மோசமடைந்துள்ளன. நாட்டிற்கு அந்நியச் செலாவணியை தேடித்தருகின்ற மலையக சமூகம் இன்று நலிவுற்ற சமூகமாக உருவெடுத்துள்ளது. இச்சமூகத்தின் கோரிக்கைகள் பலவும் புறந்தள்ளப் பட்டுள்ள நிலையில், தேசிய நீரோட்டக் கனவும் வெகுதூரம் போய்க் கொண்டிருக்கின்றது.

பெரும்பான்மை கட்சிகள் ஆட்சிபீடம் ஏறும் வரை மலையக மக்களை இரத்தத்தின் இரத்தங்களாக காட்டிக் கொள்கின்றன. ஆட்சிபீடமேறியதும் எல்லாம் மாறிவிடுகின்றது. ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி. ஆற்றைக் கடந்தபின் நீயாரோ, நான் யாரோ என்ற ஒரு போக்கே இக்கட்சிகளிடம் காணப்படுகின்றது.

கல்வி, சுகாதாரம், மருத்துவம், தொழில்வாய்ப்பு போன்ற இன்னோரன்ன துறைகளிலும் மலையக சமூகத்தை கை தூக்கிவிட வேண்டிய தேவை மேலெழுந்துள்ளது. எனினும் இவற்றின் சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளன.

பெரும்பான்மை கட்சிகள் தோட்டத் தொழிலாளர்களை புறந்தள்ளி செயற்படுகின்றமை குறித்து பெரும்பான்மை அரசியல்வாதிகளே தமது அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளனர். பெரும்பான்மைக் கட்சிகள் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குவதற்கு முற்படுகின்றனவே தவிர அவர்களின் நலன்களைப் பேணுவதாக இல்லை.

மலையக மக்களின் பொருளாதார நிலைமைகள் மிகவும் நெருக்கீடுகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களுக்கான பொருளாதார அபிவிருத்தி கருதிய செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அரசாங்க ஊழியர்கள் இந்நாட்டின் கட்டமைப்பில் ஒரு பகுதியினராவர். இவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவதனை நாம் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் இந்நாட்டிற்கு கொரோனா காலத்திலும் கூட அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுத்த தொழிலாளர்களை அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நோக்குவது தவறானது ஆகும்.

இதைப்போன்றே மலையக மக்களின் வாழ்க்கை அபிவிருத்தி தொடர்பில் மலையக அரசியல்வாதிகளிடமும் எந்த ஒரு திட்டமும் இல்லாமையும் வருந்தத்தக்கதாகும். எனவே அரசாங்கத்துடன் அரசியல்வாதிகளும் மலையக மக்களின் மேம்பாடு கருதி கரிசனையுடன் செயற்பட வேண்டும். நமக்கு நாமே குழிதோண்டிக் கொள்ளும் பாணியில் யாரும் செயற்படுதல் கூடாது” என்றார்.

Tamil News

Leave a Reply