பிரான்ஸ்: அதிபர் மக்ரோங் கட்சி பெரும்பான்யை இழந்தது

பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள், அந்நாட்டு அதிபர் மக்ரோனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் அதிபருக்கான தேர்தலில், கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 58.5% வாக்குகளைப் பெற்று மக்ரோன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், முந்தைய தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுகையில் மக்ரோனுக்கு வாக்கு சதவீதம் குறைந்திருந்தது. மேலும், தீவிர வலதுசாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில், பெரும்பான்மையை நிர்ணயிக்கும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் மக்ரோனுக்கு இப்போது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் 577 இடங்களில் மக்ரோனின் மத்திய – வலசாரிக் கட்சியினருக்கு 245 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை அமைப்பதற்கு 289 இடங்கள் தேவையாகும்.

பாராளுமன்ற தேர்தலில் புதிதாய் உருவான NUPES கட்சிக்கு 131 இடங்களும், வலசாரி தேசியப் பேரணிக் கட்சிக்கு 89 இடங்களும் கிடைத்தன.

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் எலிசபெத் போர்ன் கூறும்போது, ”நிலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில் இருக்கிறது. இந்த நிலைமை நம் நாட்டிற்கு ஆபத்தைத்தான் பிரதிபலிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரோன் மீண்டும் வெற்றிபெற்றபோது, ”ஐரோப்பிய ஒன்றியத்தில் மையவாத அரசியல் போக்கில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். பிரான்ஸில் கடந்த இருபது ஆண்டுகளில் மீண்டும் அதிபராக வெற்றிபெற்றவர் என்ற பெருமையையும் அவருக்கும் கிடைத்திருக்கிறது” என்று அரசியல் வல்லுனர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், இந்தப் பின்னடைவை மக்ரோன் சந்திருக்கிறார்.

Tamil News