மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் புதிய சட்டத்தின் கீழ் நடத்தப்படும்; அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

298 Views

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள்
புதிய சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,தேசிய மரபுரிமைகள் ,அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப, மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தின் போது, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

அந்த விவாதத்தில் உரையாற்றிய ரஞ்சித் மத்துமபண்டார கூறுகையில், மாகாணசபை தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் அஞ்சுகிறது. மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துவதாக தெரிவித்தே ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 2 வருடமாகியும் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் எம்மை குறைகூறி வருகின்றது. மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு சபைக்கு சமர்ப்பித்தால் அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். அத்துடன் அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலையும் 2வருடங்களுக்கு பிற்போட நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் உண்மை நிலை என்ன என்பதை அரசாங்கம் அறிவிக்கவேண்டும் என்றார்.

இதன்போது பதிலளித்த சபை முதல்வர் தினேஸ் குணவர்தன கூறுகையில், நடைமுறை சட்டத்திற்கிணங்க மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மாகாணசபை தேர்தலை நடத்த புதிய சட்டம் இயற்றுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எமது முன்னாள் ஜனாதிபதியும் அது தொடர்பில் நீதிமன்றம் சென்றிருந்தார். அந்த வகையில் புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு நாங்கள் இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளோம். இதன்படி புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி மாகாணசபை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம். உங்களது காலத்தில் நீங்கள் செய்த தவறை நாங்கள் நிவர்த்தி செய்வோம் என்றார்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் புதிய சட்டத்தின் கீழ் நடத்தப்படும்; அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

Leave a Reply