தாவடியில் விபத்தை ஏற்படுத்திய பஸ் இலக்கதகடு இன்றி எப்படி பயணித்தது? சிறீதரன் கேள்வி

435 Views

தாவடியில் விபத்தை ஏற்படுத்திய பஸ்
தாவடியில் விபத்தை ஏற்படுத்திய பஸ், இலக்கத்தகடு இல்லாத இராணுவத்தின் பஸ்ஸை தம்முடைய பஸ் இல்லையென இராணுவத்தினர் மறுக்கின்றனர். அப்படியானால் ஒரு இலக்கத்தகடு இல்லாத பஸ் யாழ் நகரின் பல பகுதிகளுக்குள்ளும் பயணித்த நிலையில் அதனை பொலிஸார் ஏன் சோதனை சாவடிகளில் மறிக்கவோ சோதனையிடவோ இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ். சிறீதரன் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,தேசிய மரபுரிமைகள் ,அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப ,மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு,மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறுகையில்,

செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி தாவடி சந்தியில் பாடசாலை மாணவியை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிளை இலக்கத்தகடு இல்லாத இராணுவ பஸ் மோதியதில் மாணவி படுகாயமடைந்த நிலையில் அவரின் தந்தையும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தை ஏற்படுத்திய இராணுவ பஸ்ஸில் எந்த சைகை விளக்குகளோ ஒலி எழுப்பியோ இருக்கவில்லை. அத்துடன் பஸ்ஸின் முன்பக்கம் ,பின்பக்கம் என இரு பக்கங்களிலும் இலக்க தகடுகளும் இருக்கவில்லை. இருந்தபோதும் இந்த பஸ் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பதிவின்படி இராணுவ தலைமையக பதிவைக்கொண்டுள்ளது.

விபத்து நடந்த இடத்துக்கு வந்த இராணுவத்தினர் இது தம்முடைய பஸ் அல்லவென தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இந்த பஸ்ஸிலே வற்றாப்பளை கண்ணகை அம்மன் என எழுதப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்த காலத்தில் மக்களின் இந்த பஸ்ஸை தன்னகப்படுத்திய இராணுவத்தினர் இராணுவ தலைமையகத்தின் பெயரிலே வைத்திருந்த நிலையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவியான தரம் 8 இல் கல்வி கற்கும் சரணியா பத்மநாதன் படுகாயமடைந்துள்ளனர். அவரின் தந்தையான 60 வயது பத்மநாதனும் படுகாயமடைந்தார்.

இலக்கத் தகடு இல்லாத இந்த இராணுவத்தின் பஸ் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியிலிருந்து கே.கே.எஸ். வீதியூடாக இணுவில் வரையும் பயணம் செய்துள்ளது. எந்த இடித்திலும் பொலிஸார் இந்த இலக்கத்தகடு இல்லாத பஸ்ஸை மறித்து சோதனையிடவில்லை. இவ்வாறு சென்ற பஸ்தான் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 15 ஆம் திகதி ஊற்றுப்புலம் என்ற மிக வறிய கிராமத்திலிருந்து கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்பதற்காக வந்த 17 வயதான மதுஷாலினி திருவாசகம் என்ற மாணவி மஞ்சள் கடவையைக் கடக்கின்றபோது ஒரு அரச பஸ் தனக்கு முன்னாள் வந்த கன்ரர் வாகனங்களை மோதித் தள்ளி அந்த மஞ்சள் கடவையில் வீதியைக்கடந்த இரு மாணவிகளை மோதியதில் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றயவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேபோல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப பிரிவு பாடசாலையில் தரம் 3 இல் கல்வி கற்ற ஜீவன் அகரன் (8 வயது ) இவரும் போக்குவரத்து பொலிஸார் முன்னிலையில் வைத்தே பாதசாரிகள் கடவையால் இவர் வீதியைக்கடக்க முற்பட்டபோது அதிவேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மோதி தலையில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதேபோன்று பல விபத்துக்கள் அந்த இடத்தில் நடந்துள்ளன.

பள்ளிக்குழந்தைகள் சிறுவர்கள் இவ்வாறு அடிக்கடி கொல்லப்படுவது அல்லது மரணமடைவது மிகவும் மோசமானதொரு செயல் .எனவே இந்த விடயங்களில் சம் பந்தப்பட்ட அமைச்சுக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த நாட்டிலே சுற்றுவட்ட சந்தி கிளிநொச்சியில் மட்டுமே இல்லை டிப்போ சந்தியில் சுற்றுவட்ட சந்தியை அமைத்து சைகை விளக்குகளை பொருந்துமாறு நான் பலதடவைகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், வடக்குமான வீதி அபைவிருத்தி அதிகாரசபைத்தலைவருக்கு கடிதம் எழுதியும் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தயவு செய்து முதலில் அதனை நிறைவேற்றுங்கள் என்றார்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 தாவடியில் விபத்தை ஏற்படுத்திய பஸ் இலக்கதகடு இன்றி எப்படி பயணித்தது? சிறீதரன் கேள்வி

Leave a Reply