பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு- 90 நாட்களுக்குள் தேர்தல்

147 Views

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்ற அதிபர் ஆரீப் அல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதையடுத்து 90 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டு இராணுவத்துக்கும் ஒதுக்கீடு குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது  எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது வரும், 28-ம் திகதி வாக்கெடுப்பு நடக்கிறது. இம்ரான் கானுக்கு தற்போது சொந்த கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் மொத்தமுள்ள 342 பாராளுமன்ற உறுப்பினர்களில் , 172 பேரின் ஆதரவு தேவை. ஆனால் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு பிற கட்சிகளைச் சேர்ந்த 23  பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதில் 24 பேர் அரசு மீது அதிருப்தியடைந்துள்ளனர். இவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அரசு கவிழ்ந்துவிடும் ஆபத்து உள்ளது.

இந்நிலையில்,புதிதாக தேர்தல் நடைபெறும் என பிரதமர்  இம்ரான் கான் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நாட்டு மக்களுக்கு   அவர் உரையாற்றுகையில் ‘‘பாராளுமன்றத்தை   கலைக்குமாறு அதிபருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலுக்கு தயாராகுமாறு பாகிஸ்தான் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக வெளிநாடுகள் செய்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.

பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்ற அதிபர் ஆரீப் அல்வி, பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து, 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை நிராகரித்த துணை சபாநாயகரின் முடிவை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக  எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

Leave a Reply