ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை கண்டனத்துக்குரியது வேலிக் கட்டைக்கு ஓணான் சாட்சியா? ரெலோ கேள்வி

101 Views

suren telo e1626616169936 ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை கண்டனத்துக்குரியது வேலிக் கட்டைக்கு ஓணான் சாட்சியா? ரெலோ கேள்வி

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்க தேவையில்லை. சில சரத்துக்களை மாத்திரம் மாற்றம் செய்வதன் மூலம் சட்டத்தை திருத்தி தொடர்ந்தும் நடைமுறைப் படுத்தும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் பரிந்துரையை நாம் நிராகரிக்கிறோம் என ரெலோ கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவிக்கையில்,

“சட்ட வல்லுனர்கள், ஜனநாயக வாதிகள், மனித உரிமை செயற் பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் ஏன் சர்வதேச நாடுகள் உட்பட பல தரப்புடக்கள் இந்த சட்டத்தினால் ஏற்பட்ட கடும் மக்கள் விரோத போக்கினை கண்டித்து இதை நீக்குமாறு வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

ஏற்கனவே வீழ்ந்து செல்லும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி யெழுப்புவோம் என புதிய நிதி அமைச்சர் நாட்டுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். இந்த சட்டத்தை நீக்காது விட்டால் ஐரோப்பிய ஒன்றிய வரிச்சலுகை நீக்கப் பட மாட்டாது. எமது ஏற்றுமதியும் அந்நிய செலாவணியும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். அப்படியான அபாய நிலைக்கு நாட்டை இட்டுச் செல்லும் பரிந்துரையை ஜனாதிபதி ஆணைக் குழு வழங்குவது எதற்காக?

ஜனாதிபதியினால் ஏற்படுத்தப் பட்ட ஆணைக்குழு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கத் தேவையில்லை என்று ஜனாதிபதிக்கு பரிந்துரை வழங்குவது வேலிக் கட்டைக்கு ஓணான் சாட்சியாக அமைவது போல் இருக்கிறது. இது எதிர் பார்க்கப்பட்ட விடயம் தான். இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தினால் எமது தமிழினம் சொல்லொணாத கஷ்டங்களை அனுபவித்து வந்திருக்கிறது. இன்றும் பல தசாப்தங்களாக விசாரணையோ, வழக்குகளோ, பிணையோ இன்றி பலர் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர். பலம்மிக்க இளைய சமுதாயம் இந்த நாட்டை விட்டு குடி பெயர்வதற்கும் இன குடிப் பரம்பலில் சிதைவை ஏற்படுத்துவதற்கும் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

சட்ட விரோதமான கைதுகள், கால வரையறை அற்ற தடுப்பு, பிணை வழங்காமை, குற்றம் சாட்டப் பட்டவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலை என்று அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவே அமைந்திருக்கிறது. நியாயமான எமது போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து எமது இளம் சமுதாயத்தை வகை தொகையின்றி கைது செய்ததோடு சித்திரவதைக்கும் உள்ளாக்குவதற்கே இந்த சட்டம் பயன்படுத்தப் பட்டது. மாறாக எம்முடைய போராட்டத்தை தடுக்கவோ நிறுத்தவோ முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்று தமது தோல்விகளை மறைப்பதற்கும் தமக்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தை நடத்த முற்படுபவர்களை கைது செய்வதற்கும் அரசியல் பழி வாங்கல்களை அரங்கேற்றுவதற்குமே இந்த சட்டம் பயன்பட்டு வருவதை அனைவரும் அறிவார்கள்.

ஜனநாயக விழுமியங்களை மதிக்கப்படாத போற்றப்படாத இந்த அரசாங்கத்தில், இந்த சட்டத்தில் சிறிய மாற்றங்களின் மூலம் ஜனநாயகத்தை பேணி விடலாம் என்று ஜனாதிபதி ஆணைக்குழு சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அப்பாவி மக்களை படுகொலை செய்து நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப் படுகிறார்கள். அதே வேளை தம்முடைய இனத்திற்காகவும் மக்களுக்காகவும் நியாயமாக குரல் கொடுப்பவர்கள் கைது செய்யப் படுகிறார்கள். அதற்கு வழி வகுக்கும் அரசாங்கத்திற்கு பயங்கர வாத தடுப்பு சட்டத்துக்கு பரிந்துரைக்கும் மாற்றங்கள் எந்த விதத்தில் மக்களுக்கு நியாயத்தை பெற்றுத் தரும் ?

இதே அரசாங்கத்தில் பதவி வகித்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் கடந்த காலங்களில் அதே சட்டத்தின் கீழ் ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டதை அல்லது தடுத்து வைக்கப்பட்டு வருவதை இந்த நாடு நன்கு அறியும்.

தமிழ் மக்களுக்கு மட்டு மல்லாமல் முழு நாட்டிலும் அராஜகத் தைத்தையும் சர்வாதிகாரத்தையும் நிலை நிறுத்த பயன்படும் இந்த சட்டத்தில், எந்த மாற்றங்களும் இதன் அடிப்படை நோக்கத்தை சீர்செய்து விடப் போவதில்லை. ஆகவே முற்றாக இந்த சட்ட மூலம் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு.

அனைத்து தரப்பினரும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ஒழிப்பதற்கு ஒருமித்து செயலாற்ற கோருகிறோம். அதிகாரங்களுக்கும் அற்ப சலுகை களுக்காகவும் இந்த சட்டத்திற்கு நொடர்ந்தும் ஆதரவு வழங்குபவர்கள் அறிந்தோ அறியாமலோ உங்களுக்கும் உங்கள் எதிர்கால சந்ததிக்கும் சிதை மூட்டுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply