ஜெனிவா கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; இலங்கை குறித்த நிலைப்பாட்டை ஆணையாளர் அறிவிப்பார்

இலங்கை குறித்த நிலைப்பாட்டை ஆணையாளர் அறிவிப்பார்ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை குறித்த நிலைப்பாட்டை ஆணையாளர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தனது ஆரம்ப உரையில் இலங்கை நிலை குறித்து குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. முக்கியமாக சாட்சியங்களைச் சேகரிப்பதற்கான அலுவலகத்தை அமைப்பது குறித்த பேரவையின் நிலைப்பாட்டை அவர் அறிவிப்பார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

46/1 தீர்மானத்தின் கடப்பாடுகளில் இலங்கை அரசாங்கம் நடைமுறைப் படுத்தவில்லை என கருதுகின்ற விடயங்கள் தொடர்பில் அவர் தனது அறிக்கையில் அவர் குறிப்படவிருக்கின்றார். இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் பல கடப்பாடுகள் அடங்கிய தீர்மானம் பெப்ரவரியில் மனித உரிமை பேரவை நிறைவேற்றியது.

இந்த தீர்மானங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டவை எவை நடைமுறைப் படுத்தப்படாதவை எவை என்பதை ஆணையாளர் பட்டியலிடுவார் என எதிர்பார்க்கப் படுகின்றது. முக்கியமாக ஆதாரங்களையும், சாட்சியங்களையும் பேணிப் பாதுகாப்பதற்கான அலுவலகத்தை அமைப்பது குறித்த நிலைப்பாட்டை அவர் வெளியிடலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. கடந்த 46 ஆவது கூட்டத் தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான நிதியும் கிடைத்திருக்கும் நிலையில், அவ்விடயத்தில் அடுத்த கட்ட செயற்பாடுகளை ஆணையாளர் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் விரிவான அறிக்கை ஒன்று ஜெனிவாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள போதிலும் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை கடுமையானதாக காணப்படும் என ஜெனீவாவில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்கம் அனைத்து நாடுகளிற்கும் 14 அம்சங்களை கொண்ட அறிக்கையொன்றை வழங்கியது. இந்த அறிக்கை மனித உரிமை விவகாரங்களில் அரசாங்கத்தின் சாதனைகளை தெரிவிப்பதாக காணப்படுகின்றது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இரண்டு நோக்கங்களை அடிப்படையாக கொண்டது ஒன்று கடுமையான விமர்சனங்களை தவிர்ப்பது. இரண்டாவது சர்வதேச சமூகம் கருதுவதற்கு மாறாக கடந்த தீர்மானம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிப்பது.

கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்ற உள்ளன. இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் குறித்து இந்த நாடுகள் கேள்விகளை எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட சர்வதேச பொறிமுறைக்கான அழுத்தங்களும் காணப்படும் என்றும் கணிக்கப்படுகின்றது.

இதேவேளை வெளிவிவகார அமைச்சர் பேரசிரியர் ஜீ.எல். பீரிஸ் இணைய வழியாக கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார். இலங்கையில் இடம்பெற்றுள்ள முன்னேற்றங்களை பார்வையிடுவதற்காக மார்ச் மாதத்திற்கு முன்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என அரசாங்கம் அழைப்பை விடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மனித உரிமை ஆணையாளர் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தான் அடையாளம் கண்டுள்ள விடயங்களை அரசாங்கம் முதலில் நடைமுறைப்படுத்தவேண்டும் என எதிர்பார்க்கின்றது என குறிப்பிட்டுள்ளன.

தமிழ்க் கட்சிகளும் ஜெனிவா கூட்டத் தொடரை முன்னிட்டு தனித்தனியாகவும், கூட்டாகவும் நான்கு கடிதங்களை ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ளன.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021