மாற்று வழிகளை உள்ளடக்கிய புதிய தீர்மானம் ஒன்று வருமா? அகிலன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், மாற்று வழிகள் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாகவும், இலங்கை அரசாங்கத்தை எச்சரிப்பது போலவும் இருக்கலாம். ஆனால், நடைமுறையில், இவ்வாறு மாற்று வழிகள் சாத்தியமானதா என்ற கேள்வி ஒன்றும் உள்ளது.

பிரித்தானியா தலைமையிலான இணைத் தலைமை நாடுகளால் ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டிருக்கும் ‘பூச்சிய வரைபு’ எனப்படும் பிரேரணையில் மாற்று வழிகள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த வருடங்களில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை ஒத்ததாகவே இந்தப் பிரேரணையும் உள்ளது. தமிழர் தரப்பும், மனித உரிமை அமைப்புக்களும் பிரேரணையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என தற்போது வலியுறுத்திவருவதற்கு அதுதான் காரணம்.

போர் முடிவுக்கு வந்து 12 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நீதி வழங்கப்படவில்லை. இலங்கை அரசாங்கம் அதனைத் தரப்போவதில்லை என்ற நிலையில்தான் பிரச்சினை மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றது. 12 வருடகாலமாக பேரவையால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்ட நிலையில் – தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்ட பின்னணியில்தான் மாற்று வழிகள் குறித்து இப்போது அதிகளவுக்குப் பேசப்படுகின்றது.

ஆணையாளர் அழைப்பு

மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட்  இலங்கை குறித்து கடந்த புதன்கிழமை நிகழ்த்திய உரையிலும் இந்த மாற்று வழிகள் குறித்து பேசியிருக்கின்றார். அவர் தனது உரையில், “கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறலை முன்னெடுக்க மறுத்ததன் மூலமும் ஜெனீவா தீர்மானத்திற்கான ஆதரவை விலக்கிக்கொண்டதன் மூலமும் ஏனைய நடவடிக்கைகள்  மூலமும் தேசிய நடைமுறைகள் மூலம் தண்டனையின் பிடியிலிருந்து விலக்கப்படுதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான  நேர்மையான முன்னேற்றத்திற்கான கதவுகளை அரசாங்கம் அடைத்து விட்டது. இந்த காரணத்திற்காக நான் சர்வதேச அளவில் பல்வேறுவகைப்பட்ட பொறுப்புக்கூறலை முன்னோக்கி நகர்த்துவதற்கான புதியவழிவகைகள் குறித்து ஆராயுமாறு மனித உரிமை பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு அழைப்பு விடுத்திருக்கும் ஆணையாளர், “எதிர்கால பொறுப்புக்கூறலிற்கான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை சேகரித்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளிற்கு ஆதரவை அளிக்குமாறும் உறுப்புநாடுகளில் பொருத்தமான நீதி நடைமுறைகளிற்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்” எனவும் தெரிவித்திருக்கின்றார். ஆணையாளர் எவ்வாறான கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினாலும், அவரது பரிந்துரைகள் ஜெனிவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தில் உள்ளடக்கப்படுமா?

மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளர் வெளியிட்டிருக்கும் இரு அறிக்கைகள் இவ்விடயத்தில் முக்கியமானவை. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் உரையாற்றிய போதுதான் இந்த அறிவித்தலை அவர் வெளியிட்டார். அவரது முதலாவது அறிவித்தலில், பிரேரணையை இலங்கை அரசாங்கம் ஏற்க மறுத்தாலும், பேரவை அதனை நடைமுறைப்படுத்தும் எனத் தெரிவித்திருந்தார். இரண்டாவது அறிவித்தலில் பிரேரணையில் திருத்தங்களைச் செய்வதற்கு 3 வார கால அவகாசம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

மாற்று வழி உள்ளதா?

பிரித்தானியா தலைமையிலான  முதன்மை நாடுகளின் குழுவினால் தயாரிக்கப்பட்டு தற்போது வெளியாகியிருக்கும் பிரேணையின் முதலாவது நகல் தமிழ்த் தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை எந்தவகையிலும் உள்ளடக்கவில்லை. கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை ஒத்ததாகவே இந்த நகலும் இருப்பது தமிழ்த் தரப்பினருக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கின்றது. தமது அதிருப்தியை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

பேரவையின் ஆணையாளர் தெரிவித்திருப்பதைப்போல, மாற்றுவழிகள் குறித்து உத்தேச பிரேரணையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்தும் பேரவைக்குள் பிரச்சினையை வைத்திருப்பதை இலக்காகக் கொண்டதாகவே அந்தப் பிரேரணை உள்ளது. அதனைவிட, மீண்டும் 18 மாத காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கின்றது. காலக்கெடு விதிப்பதென்பது இலங்கை அரசாங்கமானது சிங்கள மயமாக்கல் போன்ற தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கே வழிவகுக்கும். இதனால்தான் பிரச்சினையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்த் தரப்பினர் வற்புறுத்திவருகின்றார்கள்.

இந்த நிலையில் பிரச்சினையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் அம்பிகை செல்வகுமார் என்ற பெண்ணி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். 500 அமைப்புக்களின் சார்பில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு பிரித்தானிய அரசாங்கம் பதிலளிக்காதததையடுத்தே இந்தப் போராட்டத்தை அவர் ஆரம்பித்திருக்கின்றார். இதுவும் பிரித்தானிய அரசாங்கத்துக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுப்பதாக அமையும்.

நாடுகளின் உபாயம்?

என்னதான் அழுத்தங்களைக் கொடுத்தாலும், மனித உரிமைகள் பேரவை என்பது அரசுகளின் சபை. உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மனித உரிமை மீறல்கள் குறித்த பிரச்சினையை எதிர்கொள்கின்றன. இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படக்கூடிய கடுமையான பிரேரணை ஒன்று – எதிர்காலத்தில் தமக்கு எதிராகவும் பயன்படுத்துவதற்கான முன்னுதாரணமாகி விடலாம் என்ற அச்சம் அந்த நாடுகளுக்குள்ளது. அத்துடன், மனித உரிமைகள் என்ற விடயத்தைவிட, இலங்கையுடனான உறவு அவர்களுக்கு முக்கியம்.

இலங்கையைத் தமது பிடிக்குள் வைத்திருப்பதற்கான ஒரு துரும்புச் சீட்டாகத்தான் இந்த விவகாரத்தை அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள்  பயன்படுத்திக்கொள்கின்றன. பேரவையிலிருந்து பிரச்சினையை வெளியே எடுத்து – ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றால், இலங்கை தமது பிடியிலிருந்து வெளியே செல்லும் என்பது -அவர்களுக்குத் தெரியும். அதனால், மாற்று வழிகள் குறித்து பேரவையின் ஆணையாளரும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவரும் என்னதான் சொல்லிக்கொண்டாலும், அதற்கான சாத்தியம் எந்தளவுக்கு இருக்கும் என்பது கேள்விக்குறிதான் என்கின்றார்கள் ஒரு தரப்பினர்.

ஆணையாளரின் அறிக்கை கடுமையாக இருப்பதற்கும், இணைத் தலைமை நாடுகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் ‘பூச்சிய வரைபு’ மென்மையானதாக இருப்பதற்கும் இதுதான் காரணம். உண்மையில், மனிதஉரிமைகள் பேர வையின் ஆணையாளரைப் பொறுத்தவரையில், அவருக்கு முன்னால் மனித உரிமை சார்ந்த கரிசனை மட்டுமே இருக்கின்றது. ஏனெனில், அவர் மனிதஉரிமைகள் பேரவையின் ஆணையாளர் மட்டுமே. எனவே, அவர் எப்போதும் ‘முதலில் மனித உரிமைகள்’ என்னும் கொள்கையின் அடிப்படையில்தான் செயற்படுவார். அவரது அறிக்கையும் கருத்துக்களும் அதனைத்தான் பிரதிபலிக்கும்.

பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு மனித உரிமைகள் முதன்மையான விடயமல்ல. அவர்களுக்கு அவர்களது சொந்த நலன்களே முதன்மையானவை. பேரவையில் முன்வைக்கப்படும் பிரேரணையை, அவர்களது சொந்த நலன்களிலிருந்துதான் அணுகுவார்கள். தங்களின் சொந்த நலன்களும் பிரேரணையும் சந்திக்கமுடியாமல் போகும்போது, அவர்கள் பிரேரணைக்கு எதிராகவே செயற்படுவார்கள். ஜெனிவாவில் நடைபெறுவது இதுதான்.

மாற்றம் வருமா?

இந்த அரசியலைக் கவனத்திற்கொண்டுதான் தமது பிரேரணையை இணைத் தலைமை நாடுகள் வெளியிடுகின்றன. தற்போதும் வெளியிட்டுள்ளன. இன்று விவாதத்துக்குள்ளாகியிருக்கும் ‘பூச்சிய வரைபு’ எனப்படும் முதலாவது வரைபு கூட இவ்வாறு முன்வைக்கப்பட்ட ஒன்றுதான். வழமையாக இவ்வாறான வரைபு ஒன்றை முன்வைத்துவிட்டு அதன் பின்னர் வரக்கூடிய அழுத்தங்கள் – நாடுகளின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு அதில் மாற்றங்களைச் செய்வதுதான் வழமையாக இடம்பெற்றிருக்கின்றது.

கடந்த காலங்களில் மைத்திரி – ரணில் தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசு பிரேரணைக்கு தாமும் இணை அனுசரணையை வழங்குவதாகக் கூறி, பிரேரணையை நீர்த்துப்போகச் செய்வதில் வெற்றிபெற்றிருந்தது. பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்வதில்லை. பேரவையும் அதனைக் கண்டுகொள்வதில்லை. ஆனால், தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை ஒன்றுக்கு முன்வரப்போவதில்லை. ஆனால், வேறு நாடுகளின் மூலமாக பிரேரணையின் காரத்தைக் குறைக்கச் செய்வததற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம்.

பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில் மாற்றங்கள் வரலாம். ஆனால், அந்த மாற்றங்கள் மனித உரிமைகளைப் பேண வேண்டும் என்பதையோ அல்லது, ஈழத் தமிழர்களுக்கு நீதியைக் கொடுக்க வேண்டும் என்பதையோ இலக்காகக் கொண்டதாக இருக்கப்போவதில்லை. அது நாடுகளின் நலன்களை இலக்காகக் கொண்டதாகத்தான் இருக்கும்! !