வேல் தர்மா
புதிய உலக ஒழுங்கில் 2021: உலக ஒழுங்கு என்பது 1. உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு இடையிலான உறவுகளும் 2. அந்த உறவுகளை முடிவு செய்யும் அதிகாரங்களும் 3. உறவுகளையும் அதிகாரங்களையும் கட்டுப்படுத்தும் பன்னாட்டு நியமங்களும் 4 பன்னாட்டு அமைப்புக்களின் செயற்பாடுகளும் சம்பந்தப்பட்டது. சோவியத் ஒன்றியம் 1991இல் வீழ்ச்சியடைந்த பின்னர் உலக நாடுகளிடையே ஒரு புதிய ஒழுங்கு உருவானதாகச் சொல்கின்றனர். சோவியத்தின் வீழ்ச்சியின் பின்னர் அமெரிக்கா தலைமையில் ஒரு துருவ உலக ஆதிக்கம் உருவானது எனவும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. உலக ஒழுங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவற்றில் முக்கியமானவை படை வலிமையும், பொருளாதார வலிமையும் ஆகும்.
விதிகளின் அடிப்படையிலான உலக ஒழுங்கு
உலக ஒழுங்கு என்பது உலக அரங்கில் செயற்படும் நாடுகளுக்கு இடையிலான செயற்பாடுகள், பன்னாட்டு அமைப்புக்களின் விதிகள் மற்றும் நியமங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதாகும். தராண்மைவாத உலக ஒழுங்கு என்பது பொருளாதார சுதந்திரம், மதசார்பின்மை, இனக் குரோதமின்மை இல்லாத விதிகளின் அடிப்படையிலான உலக ஒழுங்காகும். உலக வர்த்தக நிறுவனம் (WTO), பன்னாட்டு நாணய நிதியம் (IMF), உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை வர்த்தகம் தொடர்பான விதிகளையும், உலக நாடுகள் பல கூடிச் செய்த ஜெனீவா மரபொழுங்கு (Geneva Convention) போன்ற பல்வேறு மரபொழுங்குகள் உடன்படிக்கைகள் நாடுகளுக்கு இடையிலேயான முரண்பாடுகளை கையாளும் விதிகளையும், ஜெனீவா மனித உரிமைக் கழகம் போன்ற அமைப்புக்கள் மனித நேயம் மற்றும் உரிமைகளைப் பேணும் விதிகளையும் ஏற்படுத்தியுள்ளன.
உக்ரேன் எல்லையில் இரசியா படைகளை நிறுத்தி தனது நிபந்தனைகளுக்கு நேட்டோ நாடுகள் இணங்க வேண்டும் என விளடிமீர் புட்டீன் 2021இன் இறுதியில் சொல்வது உலக ஒழுங்கில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என மேற்கு நாடுகள் கருதுகின்றன. அதே போல சீனா தைவானை ஆக்கிரமிப்பேன் என்ற நிலைப்பாட்டை 2021இல் தீவிரப்படுத்தி இருப்பதும் உலக ஒழுங்கிற்கு ஆபத்து என மேற்கு நாடுகள் கருதுகின்றன. தைவானின் எதிர்காலத்தை அங்கு செய்யப்படும் கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலமே முடிவு செய்யலாம்.
உலகமயமாதலும் உலக ஒழுங்கும்
உலகமயமாதல் என்பது உலக நாடுகள் தமது சந்தையை மற்ற நாடுகளுக்கு திறந்து விடுதல், அந்நிய முதலீட்டை அனுமதித்தல் போன்றவை மூலம் வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதாகும். ஆனால் இந்தப் போர்வையில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பெரிய நிறுவனங்கள் வளர்ச்சியடையாத நாடுகளைச் சுரண்டுவதாகும்.
சீனா உலகமயமாதலை தனக்கு சாதகமாகப் பயன் படுத்தி தனது நாட்டில் உற்பத்தியை அதிகரித்தது. ஏற்றுமதியை அதிகரித்தது. உலகிலேயே அதிக அளவு வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பைக் கொண்ட நாடாகவும், படைத்துறையில் மற்ற நாடுகளுக்குச் சவாலான நாடாகவும் உருவெடுத்தது. உலகமயமாதலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய சீனா, தனக்கு ஏற்றவகையில் உலக ஒழுங்கு இருக்க வேண்டும் என்ற முயற்சியில் 2021ஆம் ஆண்டு தீவிரமாக இறங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களான உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றில் தனது ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலக மொத்தப் பொருளாதார உற்பத்தியில் அமெரிக்காவின் பங்கு 31%., ஜப்பானின் பங்கு 14%, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பங்கு 26% என இருந்தது. இவை மூன்றும் இணைந்து உலக வர்த்தகத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தின. 2020இல் இவற்றின் பங்கு அமெரிக்கா-15.83%. ஜப்பான்-4.03%, ஐரோப்பிய ஒன்றியம் 14.98% என சுருங்கி விட்டன.
உலக மொத்தப் பொருளாதார உற்பத்தியில் சீனாவின் பங்கு 2011ஆம் ஆண்டு 13.68% ஆக இருந்து 2020இல் 18.93மூ ஆக அதிகரித்துள்ளது. உலகிலேயே அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்த ஜேர்மனியை சீனா இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டது. சீனாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகளால் 3.2மில்லியன் அமெரிக்கர்களும் ஜப்பானில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகளால் 896,000இற்கும் அதிக அமெரிக்கர்கள் வேலையிழந்ததாகவும் அமெரிக்கர்கள் ஆதங்கப்படும் நிலையில், தற்போதுள்ள உலக வர்த்தக ஒழுங்கு நின்று பிடிப்பது கடினம் என்ற நிலையை 2021ஆம் ஆண்டு ஏற்படுத்தியுள்ளது.
சீனப் படை வலிமை
சீனா அதிக அளவு தொலை தூர ஏவுகணைகளையும் மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. உலகின் எப்பாகத்திலும் அணுக்குண்டு வீசக் கூடிய சீனா, தனது அணுக்குண்டுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு சீனா ஏவூர்தித் தொழில்நுட்பம், மீயுயர்-ஒலிவேக ஏவுகணைத் தொழில்நுட்பம், வழிகாட்டல் ஏவுகணைத் தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து ஓர் ஏவுகணைப் பரிசோதனையை செய்துள்ளமை உலக அரங்கில் சீனாவின் படை வலிமையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாறும் உலக ஒழுங்கில் தமிழ் ஈழம்
மேற்கு நாடுகள், இந்தியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகியவற்றிடையேயான நட்பு ஈழத் தமிழர்களுக்கு ஒரு பாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர் தொடர்பான இந்த நாடுகளின் நிலைப்பாடு இந்தியாவின் நிலைப்பாட்டைத் தாண்டிச் செல்ல முடியாத ஒரு நிலை உருவாகி வருகின்றது. தம்மை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களும், தமிழ் நாடாளுமன்ற அரசியல்வாதிகளும், அரசியல் ஆய்வாளர்கள் என தம்மை நினைத்துக் கொள்பவர்களும் ஈழத் தமிழர்கள் மீதான இந்திய ஆதிக்கத்திற்கு விட்டுக் கொடுத்து தான் நாம் தப்பிப் பிழைக்க முடியும் என்கின்றனர். 2019ஆம் ஆண்டு ட்ரம்பின் ஆட்சியில் சிங்களவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு இந்தியா மூலமாகத்தான் அமெரிக்காவை அணுக வேண்டும் என அமெரிக்கா விடுத்த நிர்ப்பந்தத்தை சிங்களவர்கள் தமது இறைமைக்கு அது பேரிடர் எனச் சொல்லி கடுமையாக எதிர்த்தபடியால், அமெரிக்கா அந்த நிலைப்பாட்டைக் கைவிட்டது. மேற்கு நாடுகளுடன் தொடர்பில் இருக்கும் தமிழர்கள் அந்த மாதிரியான எதிர்ப்பைக் காட்டவில்லை.
இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திலும் பார்க்க அதிகமான அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கையில் செய்யக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கின்றது. இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கம் இலங்கைக்கு பொருத்தமற்றது என்றும் இந்தியா எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கும் என்றும் உலக அரங்கில் பகிரங்கமாக எடுத்துக் காட்டும் துணிவு யாருக்கும் இல்லை.
இதை ஈழத் தமித்தரப்பினர் சரியாகச் செய்யாத வரை இந்தியா ஈழத்தமிழர்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை. இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றச் சொல்லும்படி ஈழத்தமிழர் தரப்பினர் மேற்கு நாடுகளுக்கும் ஜப்பான், ஒஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கும் உறுதியாக வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
2022இல் தற்போதுள்ள உலக ஒழுங்கிற்கு கடும் சவால் விடக்கூடிய படை நகர்வுகளை இரசியாவும், சீனாவும் செய்யும்.