நிறைவேறாத எதிர்பார்ப்புகள்: 2021 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியை நெருங்கிவிட்டோம். இன்னும் சில தினங்களில் இந்த ஆண்டு முடிந்துவிடப் போகின்றது. மலையக மக்களைப் பொறுத்தவரையில், ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வைத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுத்த ஆண்டு என்ற ரீதியில் முக்கியத்துவம் மிக்க ஒரு ஆண்டாக இவ்வாண்டு விளங்குகின்றது.
எனினும் ஏனைய பல துறைகளினதும் அபிவிருத்தி கருதி ஆண்டின் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறியதாக இல்லை. இதேவேளை ஆயிரம் ரூபா சம்பள வழங்கலின் பின்னரான நிலைமைகளும் தோட்டங்களில் திருப்திகரமாக இல்லை என்பதோடு, கம்பெனிகள் தனது கெடுபிடிகளை முடுக்கி விடுவதற்கும் இது உந்துசக்தியாகி இருந்திருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பிக்கின்றபோது, மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகளும் ஏற்படுவது இயல்பாகும். ஒளிமயமான வாழ்க்கையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். துன்ப துயரங்கள் நீங்கி இன்பம் பொங்க வேண்டும். நாட்டு மக்கள் சாந்தியுடனும் சமாதானத்துடனும் வாழும் சூழல் உருவாக வேண்டும். நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் பொதுவான எதிர்பார்ப்புகள் காணப்படுவது இயல்பாகும். இதைப்போன்றே மலையக மக்களின் எதிர்பார்ப்பும் இந்த வருட ஆரம்பத்தில் பலவாறாக அமைந்திருந்தது. பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புப் பிரச்சினை துன்பத் தொடர் கதையாகி இருக்கின்றது. சுமார் ஒரு இலட்சத்து 85 ஆயிரம் தனிவீடுகள் மலையகத்திற்கு தேவையாக உள்ள நிலையில், இன்னும் பல மலையக மக்கள் லயத்து வாழ்க்கையில் சிறைபட்டுக் கொண்டிருக்கின்றனர். தற்காலிக குடில்களும் இதில் உள்ளடங்குகின்றன. எனவே லயத்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனிவீட்டுக் கலாசாரம் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும். மலையக மக்களின் குடியிருப்புப் பிரச்சினைக்கு இவ்வருடம் உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது இம்மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது.
மேலும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காத நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடி நிலைக்கு உள்ளாகி இருந்தார்கள். இந்நிலையில் ஆயிரம் ரூபாவை நாட்சம்பளமாகப் பெற்றுக் கொடுக்கும் கோரிக்கை கடந்த சில வருடங்களுக்கு முன்னதாகவே அரசியல்வாதிகளால் முன்வைக்கப் பட்டிருந்தது. எனவே இந்த ஆண்டிலேனும் ஆயிரம் ரூபா கோரிக்கை சாத்தியப்பட வேண்டும் என்று மலையக மக்கள் இறைவனை வேண்டிக் கொண்டார்கள். அத்தோடு தொழில் அபிவிருத்தி, இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு மேம்பாடு, சுகாதார, மருத்துவ சேவைகள் எனப் பலவும் இந்த வருடத்தில் மேலோங்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இவற்றுள் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு மட்டுமே சாத்தியமான நிலையில், ஏனைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் பகற்கனவாகவே மாறியுள்ளன. வீடமைப்பு வாக்குறுதிகள் அரசின் வரவு செலவு திட்டத்தில் முன்மொழிவாக இடம்பெறுகின்ற நிலையில், இதன் சாதக விளைவுகள் குறைவாகவே காணப்படுகின்றன.
ஆயிரம் ரூபாவும் பிரச்சினைகளும்
இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர் களின் ஆயிரம் ரூபா நாட்சம்பளக் கனவு சாத்தியமான போதும், இதன் பின்னரான நிறுவனங்களின் கெடுபிடிகள் பலவும் அதிகரித்திருக்கின்றன. ஆயிரம் ரூபா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தோட்டங்களில் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைவடைந்துள்ளன. நிறுவனத்தினர் திட்டமிட்டு வேலை நாட்களை குறைத்து வழங்குவதாக தொழிலாளர்களும், மலையக அரசியல்வாதிகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஏற்கனவே 20,000 ரூபாவுக்கும் அதிகமான மாதாந்த வருமானத்தை பெற்றுக் கொண்ட தொழிலாளர்கள், ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பின் பின்னர் மாதாந்தம் 12,000 ரூபாவையே பெற்றுக் கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு பறிக்கும் தேயிலைக் கொழுந்தின் அளவினை நிறுவனங்கள் தன்னிச்சையாக அதிகரித்து வருவதாகவும், சம்பள அதிகரிப்பின் பின்னர் தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்கிவந்த நலனோம்பு சேவைகள் பலவும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விசனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதேவேளை ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்காத சில தோட்டங்களும் மலையகத்தில் காணப்படுகின்றன. இந்நிலையில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை முறையாக வழங்காத தோட்ட நிர்வாகங்கள் தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணை நடாத்துமாறு தொழில் ஆணையாளரை தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அண்மையில் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்க நீதிமன்றத்தால் தடையுத்தரவு வழங்கப்பட வில்லை. அதனால் அந்த உத்தரவை செயற்படுத்த முதலாளிமார் சம்மேளனம் கட்டுப்பட்டுள்ளது. ஆனால் சில தோட்டங்களில் பல்வேறு பிரச்சனைகளை தொழிலாளர்கள் சந்தித்து வருவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. இது தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து இலாபம் தேடுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் நிறுவனங்கள் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் பழுதடைந்த லயன் அறைகளைக் கூட உரியவாறு திருத்திக் கொடுக்க தயக்கம் காட்டி வருவதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். நிர்வாகங்களின் கெடுபிடிகளுக்கு எதிராகவும், தமது தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அக்கரப்பத்தனை பிளாண்டேஷனுக்கு உட்பட்ட தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அண்மையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இது போன்று இன்னும் பல தோட்டங்களிலும் தொழிலாளர்கள் நிறுவனங்களின் கெடுபிடிகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
இதேவேளை ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இப்போது இணைந்து செயற்படுகின்றது. இந்நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி எதிர்கட்சியில் அங்கம் வகிக்கின்றது. தமிழ் முற்போக்குக் கூட்டணியில் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் இணைந்து செயற்படுகின்றமையும் தெரிந்த விடயமாகும். அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலமாக மலையக மக்களுக்கு அதிக நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நோக்கில் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.
இதன் மூலம் அவர் சாதக விளைவுகள் பலவற்றையும் மலையக மக்களுக்காக பெற்றுக் கொடுத்தார் என்பதையும் மறுப்பதற்கில்லை. மலையக இளைஞர் யுவதிகளுக்கான அரச தொழில் வாய்ப்புகள், கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி எனப் பலவும் இதில் உள்ளடங்கும். 1948 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி இந்திய வம்சாவளி மக்களின் பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பவற்றைப் பறித்தெடுத்தது. 1947 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளி மக்களின் எழுச்சி ஐ.தே.க.வின் கண்களை உறுத்தியதால் இந்தக் கொடுமையை இக்கட்சி மேற்கொண்டது. இந்நிலையில் ஐ.தே.க. பறித்தெடுத்த பிரசாவுரிமையையும், வாக்குரிமையையும் அக்கட்சியைக் கொண்டே மீளவும் இந்திய வம்சாவளி மக்களுக்கு பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவராக சௌமியமூர்த்தி தொண்டமான் விளங்குகின்றார். இது அவரின் அரசியல் சாணக்கியத்தை புலப்படுத்துகின்றது.
பகற்கனவு
இதனிடையே தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் அரசாங்கத்துடன் கை கோர்த்து இராஜாங்க அமைச்சர் பதவியையும் ஜீவன் தொண்டமான் பெற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் இ.தொ.கா. அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனால் தமக்கு அதிகளவு நன்மைகள் கிடைக்கப் போகின்றது என்று மலையக மக்கள் இவ்வருடத்தில் எதிர்பார்த்திருந்தனர்.
எனினும் இது சாத்தியப்படாத நிலையில், பகற்கனவாகி விட்டது என்பதையும் குறிப்பிட்டாதல் வேண்டும். மலையக பெருந்தோட்ட இளைஞர்கள் பலர் இப்போது தொழிலின்றி அல்லல்படுகின்றார்கள். கொரோனா இவர்களின் தொழிலின்மையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் தொழில் புரிந்த இளைஞர்கள் இப்போது தொழிலின்றி வீட்டிலுள்ளார்கள். இவர்கள் தமது பெற்றோரில் தங்கி வாழ்பவர்களாக காணப்படுகின்றனர். இதனால் பெற்றோரின் பொருளாதார சுமை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மலையக மக்கள் இவ்வாண்டின் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைப் போன்று இளைஞர்களின் தொழிற்றுறை வாய்ப்புகள் விஸ்தரிக்கப்படுதல் வேண்டும். பெருந்தோட்டப் பகுதிகளில் 35,000 ஹெக்டேயருக்கும் அதிகமான தரிசு நிலங்கள் காணப்படுவதாக தகவல்கள் வலியுறுத்துகின்றன. இத்தரிசு நிலங்களை இளைஞர்களின் விவசாய முயற்சிகளுக்காக தோட்ட நிர்வாகம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாகவே இடம்பெற்று வருகின்றன. எனினும் இன்று வரை இது சாத்தியப்படாத நிலையில் கொரோனா கால தொழிலின்மை தழும்புகளை கருத்தில் கொண்டு இனியேனும் தரிசு நிலங்களை இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுக்க நிர்வாகங்கள் முன்வர வேண்டும்.
தொழிலாளர்களின் சுகாதார மற்றும் மருத்துவ அபிவிருத்தி எதிர்பார்ப்புகளும் மழுங்கடிக்கப்பட்டிருக்கின்றன. தொழில் அபிவிருத்தி நிலைமைகள் குறித்த எதிர்பார்ப்புகளும் சாத்தியப்படவில்லை. இது மோசமான ஒரு நிலையாகும். பெருந்தோட்ட மக்களின் பல்துறைசார் அபிவிருத்தி இலக்குகள் இன்னும் உரியவாறு எட்டப்படாத நிலையில் பிறக்கும் புத்தாண்டிலாவது இம்மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும். மலையக அரசியல்வாதிகளின் மக்கள் சார்பான பங்களிப்பும், அர்ப்பணிப்பான சேவையும் புத்தாண்டில் அதிகரித்து மலையக மக்களின் ஒளிமயமான வாழ்விற்கு வித்திடப்படுதல் வேண்டும்.