மேனன்
விடியலைத் தேடும் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், யுத்த காலத்திற்கு முன்பான, யுத்த காலத்திற்கு பின்பான காலப்பகுதியென இரு பகுதிகளாக பிரிக்கமுடியும். யுத்த காலப்பகுதியில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த மக்கள், யுத்ததிற்கு பின்னரான காலப்பகுதியில் மற்றவரில் தங்கிவாழும் நிலையினை அதிகளவில் காணமுடிகின்றது.
இந்தப் பிரச்சினையானது, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் காணப்பட்டாலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் காணப்படுவதாக அண்மைக்கால தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதியானது, இயற்கை வளங்கள் நிறைந்த பிரதேசமாகக் காணப்படுகின்றது. இப்பகுதியை இலக்கு வைத்து இன்று தென்னிலங்கையில் உள்ளவர்களும் படையெடுக்கும் நிலைமை காணப்படுகின்றது. ஆனால் இந்த வீதியில் உள்ள மக்கள் மத்தியில் அதிகளவான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
அதிலும் வறுமை காரணமாக எழும் பிரச்சினைகள் என்பது ஒரு சமூகத்தின் இருப்பினையே கேள்விக்குறி யாக்குவதுடன், அவர்களின் எதிர்காலம் நோக்கிய செயற்பாடுகளும் மிகவும் பாதிக்கப்படும் நிலைமைகள் உருவாகியுள்ளதாக அங்குள்ளவர்களின் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
குறிப்பாக செங்கலடி – பதுளை வீதியை எடுத்துக் கொண்டால், சுமார் 25இற்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. படுவான்கரையாக கணிக்கப்படும் இப்பகுதியானது, செங்கலடி-தொடக்கம் புல்லுமலை வரையான மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக கணிக்கப்படுகின்றது. இப்பகுதியில் சுமார் 10ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி, விவசாயம், சேனைப் பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு ஆகியவை பிரதானமாக கொள்ளப்படுகின்றன.
இப்பகுதியில் உறுகாமம், கித்துள் போன்ற பிரதான குளங்களும், பல பாய்ச்சல் குளங்களும் காணப்படுவதன் காரணமாக இப்பகுதியானது என்றும் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாக காணப்படுகின்றது.
ஆனால் இப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் என்பது மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. குறிப்பாக வறுமை காரணமாக இங்குள்ள இளைஞர்கள் தவறான பாதைகளுக்கு வழிநடத்தப்படுவதுடன், இளவயதுத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாடசாலைகளில் இடைவிலகல் நிலை அதிகரித்து வருவதாகவும் அங்குள்ள பொது அமைப்புகளினால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக யுத்ததிற்கு பின்னரான காலப்பகுதியில் செங்கலடி – பதுளை வீதியில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகள் காரணமாக, இந்த நிலைமை தொடர்ச்சியாக ஏற்படுவதாகவும், சமூகச் சீர்கேடுகள் அதிகரித்துவருவதுடன் போதைப்பொருள் பாவனையும் இளம் சமூகம் மத்தியில் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
செங்கலடி – பதுளை வீதியில் மண் அகழ்வு என்பது சட்டத்திற்கு உட்பட்ட வகையிலும், சட்டத்திற்குப் புறம்பான வகையிலும், சட்டத்திற்கு உட்பட்டு அதனை சட்டத்திற்கு புறம்பான வகையிலுமாக இந்த மண் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இப்பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான கியூப் மணல்கள் அகழப்பட்டு, இலங்கையின் பல பாகங்களுக்கும் அனுப்பப்படுவதுடன், சில வேளைகளில் வெளிநாடுகளுக்கும் கடத்தப் படுகின்றது. இந்த மண் அகழ்வு காரணமாக இப்பகுதியில் உள்ள ஒரு பகுதியினர் வேலைவாய்ப்பினைப் பெற்றாலும், அதன் ஊடாகவே சமூகச் சீர்கேடுகளும் அதிகரித்து வருவதாகவும், இந்த மண் அகழ்வு காரணமாக இப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு எந்தவிதமான நன்மையுமில்லை யெனவும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மண் அகழ்வு நடவடிக்கைகளில் கூடுதலாக வயது குறைந்த இளைஞர்களே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றனர். ஆறுகளில் இறங்கி மண் அள்ளிக்கொண்டு வந்து வெளியில் குவிக்கவேண்டியது இவர்களின் வேலையாக இருக்கின்றது. அதிகளவான மண் குவிப்பவர்களுக்கு அதிகளவான சம்பளம் வழங்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா தொடக்கம் ஐந்தாயிரம் ரூபா வரையில் இந்த மண் அகழ்வினால் ஒரு இளைஞர் வருமானம் பெறும் நிலை காணப்படுகின்றது.
இந்தப் பகுதியைப் பொறுத்த வரையில், அதிகளவான வறுமையில் உள்ளவர்களும், கல்வியறிவு குறைந்தவர்களும் அதிகளவு உள்ள பகுதி என்ற காரணத்தினால், சிறுவர்கள் கல்வி ரீதியாக ஊக்கப்படுத்தல் என்பது கிராம மட்டத்தில் குறைந்தளவில் காணப்படுவதன் காரணமாக இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் மண் மாபியாக்கள் இவ்வாறான சிறுவர்களைப் பயன்படுத்தி இந்த மண் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கின்றனர்.
இந்த மண் அகழ்வு வேலையானது, மிகவும் சிரமம்மிக்க வேலையென்ற காரணத்தினால், இந்த மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் அதிகளவில் போதைப்பொருள் பாவனைக்கும் அடிமையாகும் சம்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. போதைப்பொருள் பாவித்துவிட்டு மண் அகழ்வு முன்னெடுக்கும்போது, அதிளவில் மண்அகழ முடிவதன் காரணமாக இளையோர் போதைப் பழக்கதிற்கு மண்மாபியாக்களினால் தூண்டப்படும் நிலையும் காணப்படுகின்றது.
இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில் அதிகளவான பணப்புழக்கம் காணப்படுவதால், ஏனைய சிறுவர்களும் தொழில் துறைக்குள் நுழைவதன் காரணமாக பாடசாலை இடை விலகல் நிலை அதிகரித்து வருவதாக அப்பகுதியில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
“செங்கலடிச் சந்தியிலிருந்து கித்துள் சந்தி வரையான சுமார் 16 கிலோமீற்றர் தூரத்தினைக் கொண்ட பிரதான வீதியில் சின்னவன்துறை, உகந்தனாறு, கொக்குறுந்திமடு, கல்வாடித்துறை ஆகிய பகுதிகளில் பிரதான வீதியிலிருந்து உட்பக்கமாக எட்டுக் கிலோ மீற்றருக்கு அப்பால் மண் அகழ்வுகள் நடைபெறுகின்றன.
இப்பகுதியில் சட்ட ரீதியானதும், சட்ட ரீதியற்றதுமான மண் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் அதிளவான பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்படுவதுடன், அவர்கள் போதைக்கும் அடிமையாகும் நிலை காணப்படுகின்றது. அத்துடன் மண் அகழ்வில் ஈடுபடும் இளைஞர்கள் பாடசாலை மாணவிகளைக் காதல் வலையில் வீழ்த்தி இளவயதுத் திருமணமும் அதிகரிக்கின்றது. அதிகளவான மாணவர்கள் பாடசாலைக் கல்வியினை இடைநிறுத்தி, மண் அகழ்வில் ஈடுபடுவதன் காரணமாக மாணவர்கள் இடைவிலகலும் அதிகரித்துள்ளதாக” இப்பகுதியில் செயற்பட்டு வரும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் கிராமிய இணைப்பாளர் சாரதா தெரிவித்தார்.
“மண் அகழ்வில் ஈடுபடும் இளைஞர்கள் தொழில் இல்லாத காலத்தில் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், இதன் காரணமாக அன்றாட வருமானத்திற்காக வளர்க்கப்படும் கோழிகள், கால்நடைகள் களவாடப்படும் சம்பவங்களும் இப்பகுதியில் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. கித்துள், சர்வோதய நகர் ஆகிய பகுதிகளில் ஒரு மாதத்தில் மட்டும் 28மாடுகள் களவாடப்பட்டுள்ளது”எனவும் அவர் தெரிவித்தார். “30வருட யுத்த காலத்தினை நாங்கள் அனுபவித்துள்ளோம்.
அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான உதவிகளும் கிடைக்காத நிலையில் “நாங்கள் யாரிடமும் கையேந்தவில்லை.சூழ்நிலைக்கு ஏற்ப எமது வளத்தினைப் பயன்படுத்தி எமது தேவையினை பூர்த்திசெய்தோம். அக்காலத்தில் எமது பகுதிகளில் எந்தவித பிரச்சினைகளும் ஏற்படவில்லை.
அந்த அனுபவத்தினைக் கொண்ட நாங்கள், இன்றைய சூழ்நிலையினை எதிர்கொண்டு வாழவேண்டும். மண் அகழ்வினைப் பொறுத்தவரைக்கும் மட்டக்களப்பில் உள்ள அரச பிரதிநிதிகளே மண் அனுமதிப் பத்திரங்களை அதிகளவில் வைத்துள்ளனர்.
கொழும்பு, பொலநறுவை உட்பட பல பகுதிகளிலும் இருந்து அரசியல்வாதிகள் இங்கு வருகின்றார்கள். மண் அனுமதியை வைத்துள்ளவர்கள் அதிகளவான மண்ணை அகழவேண்டும் என்பதற்காக இளைஞர்களை போதைவஸ்த்துக்கு அடிமையாக்கி தன்னைமறந்து கூடுதலான மண்ணை அள்ளச்செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான ஒரு செயற்பாடின் போது மண் குழிக்குள் அகப்பட்டு சிறுவன் ஒருவர் கித்துள் பகுதியில் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றது.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு பின்னால் செல்லவேண்டாம் என நாங்கள் பிரதேசசபை ஊடக தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றோம். ஆனால் இன்றுள்ள ஆட்சியாளர்கள் அவ்வாறான நிலையினை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுகின்றனர். இதனை மாற்ற வேண்டிய தேவையுள்ளது என ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.சர்வானந்தன் தெரிவித்தார்.
“சட்ட விரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து கரடியனாறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தமிழர்கள் யுத்த காலத்தில் ஒரு வாழ்க்கை வழக்கமுறையினை வாழ்ந்தார்கள். அந்த முறையினை நாங்கள் பின்பற்றினால் மாத்திரம் தான் நாங்கள் இந்த நாட்டில் வாழமுடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து வளங்களும் கொண்ட இப்பகுதியில் இதுவரையில் ஒரு தொழிற்சாலை கூட இல்லாத நிலையிலும் வாழ்வாதாரத்திற்கான நிலையான செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலையிலும் இவ்வாறான செயற்பாடுகளை தடுப்பது என்பது மிகவும் கஸ்டமான விடயமாகவேயிருக்கும். எதிர்காலத்திலாவது புலம்பெயர்ந்த மக்கள் இங்குள்ள வளங்களைக் கொண்டு தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சிறந்த உற்பத்திகளை பெறமுடிவதுடன், தற்போதுள்ள சூழ்நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் அமையும் என்பது அனைவரது எதிர்பார்ப்புமாகும்.