இலக்கு மின்னிதழ் 162 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 162 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 162 ஆசிரியர் தலையங்கம்

2022 ஈழத்தமிழர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய ஆண்டாக மலர்கிறது

இந்துமா கடல் உலக அரசியலில் பாதுகாப்பு, பொருளாதாரம் என்னும் இரு தளங்களில் முக்கியத்துவம் பெற்ற நிலையில் 2022 மலர்கிறது. இதற்கான இந்திய – சீன நேரடி வலுப்போட்டி ஈழத்தமிழர்களின் இந்துமா கடல் பகுதியிலேயே முனைவாக்கம் பெறும் ஆண்டாக 2022 திகழவும் போகிறது.

இந்நிலையில் ஈழத்தமிழர்கள், இந்தியத் துணைக்கண்டத்தில் தங்கள் வாழ்வாதாரத் தளமாக இந்துமா கடலின் குறிக்கப்பட்ட பகுதியைக் கொண்ட வாழ்வியல் உடையவர்கள். அந்த வகையில், ஈழத்தமிழர்களின் இலங்கையில் உள்ள தொன்மையும், தொடர்ச்சியுமான இறைமை என்பதும் அதன் அடிப்படையிலான தாயக, தேசிய, தன்னாட்சி உரிமைகளின் உறுதிப்பாடு என்பதும் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இந்துமா கடல் சார்புடையதாகவே பரிணாமம் பெற்று வந்தமை வரலாறு என்பதை ஈழத்தமிழர்கள் உலக நாடுகளுக்கும், உலக அமைப்பு களுக்கும், உலக மக்களுக்கும் ஒற்றுமையுடன் மூன்று தளங்களிலும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு மிக்க ஆண்டாக 2022 வருகிறது.

திரைகடலோடித் திரவியம் தேடி, மீண்டு வருபவர் என்னும் கடல்படு பொருளாதாரச் செயற்பாட்டின் அடிப்படையிலேயே திரைமீளர் என்னும் சொல்லாட்சி திரமிளர் எனவும் தமிழர் எனவும் இனஅடையாளச் சொல்லாட்சியாகியது. 15ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரின் காலனித்துவ ஆட்சி ஏற்படும் வரை தமிழர்களே மலக்கா நீரிணைக்கு அப்பால் உள்ள இந்துமா கடலின் கீழைத்தேய நாடுகளின் அனைத்துலக வர்த்தகத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருந்து வந்தனர்.

இந்துமா கடலின் வர்த்தகத்திற்கான உலக மொழியாக அக்காலத்தில் தமிழ் மொழி திகழ்ந்தது. இதனை உறுதி செய்வது போல, போர்த்துக்கேய அரசு கீழைத்தேய வர்த்தகத்திற்கான, ஐரோப்பியர்களுக்கான புதிய கடல்வழிப் பாதையைக் கண்டு பிடிக்க 1498 இல் தன் கடற் படைத் தளபதிகளில் ஒருவரான வாஸ்கொடகாமாவின் தலைமையில் கப்பல் பயணத்தைத் தொடக்கிய பொழுது, ‘மலபார்’ எனப்பட்ட இந்துமா கடலின் தலைமைக் கடலோடிகளே வாஸ்கொடகாமாவை முதலில் இந்தியாவின் கோவாத் துறைமுகத்திற்கும் அதன்வழி கள்ளிக்கோட்டை, கீழைக் கரைத் தென்னிந்தியத் துறைமுகங்களுக்கும் அழைத்து வந்தனர் என்ற வரலாறு அமைகிறது.

அனைத்துலகக் கடல் வழி வர்த்தகத்தில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களின் தோற்ற காலத்துக்கு முன்பிருந்தே உலகத் தலைமைத்துவத்தை வகித்து வந்த தமிழர்களையே அரேபிய வர்த்தகரான ஆல்பரூனி என்பவர் ‘மலபார்’ என அழைக்கும் மரபைத் தொடக்கி வைத்தார்.  தமிழ் போர்த்துக்கேய குருவான புனித பிரான்சிஸ் சேவியரால் ஆசிய மொழிகளில் அச்சுவாகனம் ஏற்றப்பட்ட முதல் மொழியாக்கப்பட்டது.  அகாராதி முறைமைக்குள் ஐரோப்பியக் கத்தோலிக்க குருக்களால் தமிழ் கொண்டு வரப்பட்டு, கீழைத்தேயத்துடனான உலகத் தொடர்பாடலுக்கான மொழியாகப் பயன்படுத்தப்பட்டது.

1577 இல் அம்பலக்காட்டில் அச்சிடப்பட்ட தொன்மையான தமிழ் நூல் ‘மலபார்’ நூல் என்றே குறிக்கப்பட்டது. இலங்கையில் கிறிஸ்தவத்தை அறிமுகம் செய்த கத்தோலிக்கக் குருக்களின் 1612 ஆம் ஆண்டு குறிப்புக்களில் இலங்கையின் கரையோர மாகாணங்களில் ‘மலபார்’ எனப்படும் தமிழர்கள் வாழ்வதாகக் குறித்தனர். இலங்கையை ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவந்த கிளொக்கோன், இலங்கையின் பிரித்தானிய காலனித்துவ ஆளுநர்கள் சேர். றெபேர்ட் பிரவுணிங், சேர் எமேசன் ரெனென்ற் ஆகியோரும் யாழ்ப்பாணம் முதல் புத்தளம் அடங்கலாக வாழ்ந்த தமிழர்களை ‘மலபார்’கள் என்றே பதிவு செய்துள்ளமை வரலாறு.

மேலும் போர்த்துக்கேய காலனித்துவ ஆட்சிக்காலம் முதலாக 600 ஆண்டுகளாக ஈழத்தமிழர்களின் இந்துமா கடல் வளங்கள், போர்த்துக்கேய, டச்சுப், பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களின் உலக வர்த்தகத்திற்கு உதவின. பிரித்தானிய ஆட்சியாளர்களால் முன்னையவர்களைவிட படுமோசமான முறையில் மன்னார் முத்துச்சிப்பி விளை கடலில் ஒரு சிறு முத்துச் சிப்பி கூட விடப்படாது, உயிரியியல் இனஅழிப்பு செய்யப்படும் அளவுக்கும், திருகோணமலையில் தங்களின் தெற்காசிய முதன்மைக் கடற்படைத்தளத்தை அமைத்து, உலக அரசியல் சிக்கலுக்குள் ஈழத்தமிழர்களை இழுத்து வரும்  வகையிலும் பயன்படுத்தப்பட்டது.

இதனால் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை என்பது பிரித்தானிய காலனித்துவம் உருவாக்கிய அனைத்துலகப் பிரச்சினையாகக் கருதப்பட்டு, அனைத்துலக நாடுகளின் மன்றத்தால் தீர்வு காணப்பட வேண்டிய ஒன்றாக இன்று வரை தொடர்கிறது. ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரமாக உள்ள இந்துமா கடலைப் பேரப்பொருளாக வைத்தே சிறிலங்கா அரசாங்கம் தனது ஈழத்தமிழின அழிப்புக்கு உதவிய – உதவும் நாடுகளுக்கே இந்துமா கடலில் மேலாண்மை செலுத்த அனுமதிக்கிறது. இது உலக நாடுகளின் மன்றத்துக்கு ஈழத்தமிழர்களுக்கான அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அதன் பொறுப்பைக் கூடச் செய்ய இயலாத நிலையாகத் தொடர்கிறது.

இவற்றை ஏன் இன்று மீள்நினைவுபடுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது என்றால், இந்த ஈழத்தமிழர்களின் கடல்வளத்தை ஈழத்தமிழர்கள் தமது வாழ்வுக்கான வாழ்வாதாரமாகவும், அனைத்துலக இந்துமா கடலின் அமைதியைப் பேணும் வகையிலான அனைத்துலகப் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டிய பொறுப்பு ள்ளவர்களாகவும் இயற்கையாகவே உள்ளனர். ஈழத்தமிழ் மக்கள் இந்துமா கடல் அனைத்துலகப் பேச்சுக்களில், தொடர்பாடல்களில் ஒரு பகுதியினராக நாடுகளாலும், அமைப்புகளாலும் அனுமதிக்கப்படும் நிலையை உலகத் தமிழர்கள் உருவாக்க வேண்டும்.

இந்த உண்மை 2022இல் அனைத்துலகிலும் உலகத்தமிழினமாக எழுச்சி பெற்றுள்ள ஈழத்தமிழர்களால் இந்துமா கடலில் தங்கள் சந்தை மற்றும் இராணுவ நலன்களைப் பேண வேண்டிய நிலையில் உள்ள அத்தனை நாடுகளுக்கும் தெளிவாகவும், சான்றாதாரங்களுடனும் எவ்வளவுக்கு எடுத்துரைக்கப்பட்டு, அந்நாடுகளுடன் தங்கள் தாயகத்தை வளப்படுத்துவதற்கும், அவர்களின் நலன்களைப் பேணுவதற்கும் இடையில் ஒரு உடன்பாட்டை புலம்பதிந்த தமிழர்கள் உருவாக்குகின்றார்களோ, அந்த அளவுக்குத்தான் ஈழத்தமிழர்களின் தாயக, தேசிய, தன்னாட்சி உரிமைகளுக்கான வெளியகத் தன்னாட்சி உரிமை உலக நாடுகளாலும், உலக அமைப்புகளாலும் ஏற்கப்படும் என்பதை ஒவ்வொரு புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களும் குறிப்பாக நிதிவளமுடைய தமிழர்களும் மனதிருத்தல் முக்கியம்.