கிழக்கில் உள்ளூராட்சிமன்றங்களைக் குழப்ப அரசாங்கம் திட்டம்: மௌனம் காக்கும் தமிழ் தேசியவாதிகள் – மட்டு.நகரான்

மௌனம் காக்கும் தமிழ் தேசியவாதிகள்மட்டு.நகரான்

மௌனம் காக்கும் தமிழ் தேசியவாதிகள்: தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல்வேறு கோணங்களில் ஆரம்பித்த காலம் தொடக்கம் அவற்றின் மீது சிங்கள தேசம் எவ்வளவுக்குத் திணிப்புகளையும், அடக்குமுறை களையும் முன்னெடுக்க முடியுமோ அவ்வளவுக்கு முன்னெடுத்து வந்தது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் தேசிய உணர்வுகளையும், தமிழ் தேசிய உணர்வுகளுடன் செயற்படுபவர்களையும் தமிழர்கள் மத்தியில் உள்ள ஒட்டுண்ணிகளைக் கொண்டு பல்வேறு வகையான அடக்குமுறைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கும் நிலைமையினை நாங்கள் காணமுடிகின்றது.

குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தின்பால் முன்னெடுக்கப்படும் எந்தச் செயற்பாடுகளையும் அகற்றி, அங்கு சிங்களத் தேசத்திற்குச் சார்பான செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு முன்னுரிமையளிக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தின் பால் ஈடுபாடு கொண்ட சக்திகளை அடக்கும் வகையில், இலங்கையின் சட்டத்துறையினை மட்டுமின்றி, அரச நிறுவனங்களையும் அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது.

வடகிழக்குத் தவிர்ந்த பகுதிகளில் சிங்களத் தேசியக் கட்சிகளில் அதிகளவான உள்ளூராட்சி மன்றங்களைத் தற்போதைய அரசாங்கமான மொட்டுக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், வடகிழக்கிலும் தமது ஆதிக்கத்தினை நிலை நாட்டுவதற்காகப் பல்வேறு பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றது.

தமிழ் தேசிய சக்திகளிடம் உள்ள ஒற்றுமையீனங்களும், அதிகாரப் போட்டிகளும், மண் சார்ந்த அக்கறையீனமான செயற்பாடுகளும், தமிழ் தேசியம் சார்ந்த உணர்வுகள் அற்ற நிலைமையுமே இன்று சிங்கள தேசத்தின் காய்நகர்த்தல்களுக்குள் பல உள்ளூராட்சி மன்றங்கள் சாய்ந்து செல்வதைக் காணமுடிகின்றது. இதனை நாங்கள் வெறும் உள்ளூராட்சி மன்றங்களாக மட்டும் பார்க்கக்கூடாது. எமது உரிமையின் முதுகெலும்பின் வீழ்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில், தமிழ் தேசியத்தின் எதிர்கால வளர்ச்சிப் போக்குக்கு இந்த உள்ளூராட்சிமன்றங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளபோதிலும், அது தொடர்பில் கிழக்கில் உள்ள தமிழ் தேசியவாதிகள் போதிய அக்கறையற்ற நிலையிலேயே உள்ளனர்.

குறிப்பாக அண்மைக் காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளைக் குழப்பி, அதனைக் கைப்பற்றுவதற்கு பிள்ளையானின் உதவியுடன் அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் தேசியத்தின்பால் பயணிப்போர் மௌனமாகவே கடந்து செல்லும் நிலையினைக் காணமுடிகின்றது.

2017ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெற்றதன் பின்னர் மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ஆட்சியமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக தி.சரவணபவன் நியமிக்கப்பட்டிருந்தார். கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவப் பட்டதாரியான இவர், கடந்த காலங்களில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் வடகிழக்கில் பல்வேறு உயர் பதவிகளை வகித்ததுடன், தமிழ் தேசியத்தின்பால் தொடர்ச்சியான பற்றுறுதியுடன் செயற்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு மக்களினால் தெரிவுசெய்யப்பட்டு, அதேநேரம் மாநகரசபையின் முதல்வராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

மௌனம் காக்கும் தமிழ் தேசியவாதிகள்மாநகரசபையின் முதல்வராக சரவணபவன் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநகரசபையின் சொத்துகளை பாதுகாப்பதிலும், மக்களின் வரிப் பணங்களைச் சரியான முறையில் செலவிடுவதிலும் மிகவும் கவனமாக செயற்பட்டார்.

இதன்போது 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரையில் பிள்ளையானின் ஆதரவுடன் குறித்த மாநகரசபை ஆட்சியதிகாரத்திலிருந்த காலத்தில் மாநகரசபையில் பெருமளவான ஊழல்களும், அதிகார துஸ்பிரயோகங்களும் நடைபெற்றிருந்தன.

மாநகரசபையின் பெரும்பாலான சொத்துகள் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டக்களப்பினைச் சேர்ந்தவர்களுக்கும் நூறு வருடங்கள் என்ற அடிப்படையில் மாநகரசபையின் சபை அனுமதியில்லாமல் வழங்கப்பட்டிருந்ததுடன், நடைபெற்ற வேலைத்திட்டங்களில் பல்வேறு ஊழல்களும் நடைபெற்றிருப்பதைக் கண்டறிந்த மாநகரசபை, அவற்றினை மீளப்பெறுவதற்காக நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை தொடர்ந்து பல சொத்துகள் மீளப்பெறப்பட்டதுடன், சில வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாநகரசபை என்பது கிழக்கு மாகாணத்தின் தமிழர்களின் இதயமாக நோக்கப்படுகின்றது. அந்த இதயமானது சிங்கள பெரும்பான்மையினத்தின் கட்சி அடிவருடிகள் ஆட்சி செய்யவேண்டும் என தொடர்ச்சியான பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையிலேயே பிள்ளையான் கட்சியின் சார்பில் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாநகரசபையில் முன்னெடுக்கப்பட்ட ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மட்டுமன்றி அபிவிருத்தி என்ற போர்வையில் யுத்தம் முடிவுற்ற காலத்தில் கிடைக்கப்பெற்ற பெரும் தொகையான பணம் கொள்ளையிடப்பட்டமை குறித்தும் தற்போதைய மாநகர முதல்வரினால் கண்டறியப்பட்டு வெளிக்கொணரப்பட்ட நிலையில், தற்போது குறித்த மாநகரசபையின் செயற்பாட்டினைக் குழப்பி, அதனை இல்லாமல்செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாநகரசபை அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறந்த நிர்வாக நடைமுறையும், மாநகரசபையின் மக்களின் வரிப்பணத்தினைச் சரியான முறையில் பயன்படுத்திய காரணத்தினாலும் இலங்கையின் முதல்தர மாநகர சபையாக மட்டக்களப்பு மாநகரசபை அடையாளப்படுத்தப்பட்டது.

2019ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஸவின் மொட்டு கட்சியின் ஆட்சியதிகாரத்தில் உள்ள மாத்தறை மாநகரசபையின் முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு வருகைதந்து அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டதுடன், வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் மாநகரசபையின் செயற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து சென்றிருந்தனர்.

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் எந்தவித ஊழலும் அற்ற, அனைவரும் பாராட்டப்பட்ட வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை முதல்வரால் பல்வேறு செயற்றிட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

மாநகரசபைக்கும் தமிழ் மொழிக்கும் முன்னுரிமை, மூன்று பிள்ளைகளைப்பெறும் குடும்பத்திற்கு உதவித்தொகை எனப் பல்வேறு நலத்திட்டங்களும் முன்னெடுக்கப் பட்ட நிலையில், மட்டக்களப்பு மாநகரசபையின் சிறந்த செயற்பாடுகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் தமிழ் தேசியத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்தவர்களையும் மீள இணைக்கும் நிலையினை ஏற்படுத்தியது.

மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் கிழக்கில் தமிழர்களின் தேசிய உணர்வினை ஊக்குவிக்கும் நிலையுருவாகி வருவதுடன், கிழக்கில் தமிழர்களின் கைமேலோங்குவதை உணர்ந்த கோத்தபாய அரசாங்கமும், பிள்ளையானின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் மாநகரசபையின் செயற்பாடுகளைக் குழப்புவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தன.

எனினும் அனைத்து விடயங்களும் சிறந்த முறையில் கையாளப்பட்ட நிலையில், குழப்ப நிலையினை ஏற்படுத்தமுடியாத நிலையில் மட்டக்களப்பில் பிரச்சினைக்குரிய அதிகாரியாக கருதப்படும் மா.தயாபரன் என்னும் ஆணையாளரை மட்டக்களப்பு மாநகரசபைக்கு கொண்டுவந்ததன் மூலம் சிங்கள தேசமும், இங்குள்ள சிங்களவர்களின் அடிவருடிகளும் தமது இயலாமையினை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக மட்டக்களப்பு மாநகரசபையின் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டு, மக்களுக்கான வேலைத்திட்டங்கள் எதுவும் நடைபெறாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போக்கினை தமிழ்தேசியத்தின் பால் உள்ள அரசியல் கட்சிகள் வெறுமனே ஒரு மாநகரசபையாக மட்டும் பார்ப்பார்க்கும் நிலையே உள்ளது. இது கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் பிரச்சினையாகப் பார்க்கவேண்டிய சூழல் தேவையாக உள்ளது.

குறித்த ஆணையாளரின் ஊழல் செயற்பாடுகள், அதிகார துஸ்பிரயோகம் உட்பட நூற்றுக்காணக்கான குற்றங்கள் குறித்து ஜனாதிபதி தொடக்கம் அனைத்துத் தரப்பினருக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டு, அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் அந்தச் செயற்பாடுகளுக்கான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மௌனம் காக்கும் தமிழ் தேசியவாதிகள்கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதனால், கிழக்கு மாகாண ஆளுநரினால் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையாளராக பொறியியலாளர் சிவலிங்கம் நியமிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே புதிய ஆணையாளரின் நியமனம் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் பழைய ஆணையாளர் நியமிக்கப் பட்டிருந்தார். பிள்ளையான் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஊடாக வழங்கிய அழுத்தம் காரணமாகவே இந்த நியமனம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அவ்வாறானால் அரச கொள்கைகள், சட்டங்கள், நியமன விதிகளை மீறி ஒரு அதிகாரியின் இடமாற்றச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அளவுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் முக்கியத்துவம் இந்த அரசாங்கத்திற்கும், பிள்ளையானுக்கும் எதற்கு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

மக்களின் செல்வாக்கினைக் கொண்டு மட்டக்களப்பு மாநகரசபையின் அதிகாரத்தினை பிடிக்க முடியாது என நம்பும் அரசாங்கமும், பிள்ளையானும் முன்னெடுக்கும் செயற்பாடுகளைத் தமிழ் தேசிய அரசியலில் உள்ளவர்கள் வேடிக்கை பார்க்கும் நிலைமையே உள்ளதைக் காண முடிகின்றது.

இவ்வற்றையெல்லாம் கேட்முடியாத போலித் தேசிய அரசியல் தமிழ் மக்களுக்குத் தேவையா என்ற கேள்வியும் இன்று தமிழ் மக்களிடம் தொக்கி நிற்கின்றது.

இன்று மட்டக்களப்பு மாநகரசபைக்கு ஏற்பட்ட நிலைமைகள் நாளை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஏற்படலாம். இதன்போது தமிழ் தேசியவாதிகள் ஆட்சி செய்வதற்கு அருகதையற்றவர்கள் என்ற நிலையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, தமிழ் தேசியத்தின் பால் கொண்டுள்ள பற்றுறுதியை இல்லாமல்செய்யும் வேலைத்திட்டங்களுக்கு தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ளவர்களின் மௌனம் என்பது வலுச்சேர்க்கும். இதனை எதிர் காலத்திலாவது குறைந்தது இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகக் குரல்கொடுத்து, மக்கள் மத்தியில் உண்மை நிலையினை கொண்டுசெல்ல தமிழ் தேசிய சக்திகள் முன்வர வேண்டும்.

உள்ளூராட்சிமன்றங்கள் தமிழர்களுக்கு அதிகாரத்தினை வழங்காவிட்டாலும், இன்று எமக்குள்ள அதிகாரம் அதுமட்டுமே என்பதை உணர்ந்தவகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tamil News