தமிழில் ஜெயந்திரன்
அமெரிக்க ஆதரவுடன் எல்சல்வதோர் அரங்கேற்றிய எல்மொஸோத்தேப் படுகொலை: நாற்பது (40) வருடங்களுக்கு முன்னர், 1981 டிசம்பர் 11ம் திகதி, தற்கால இலத்தீன் அமெரிக்க வரலாற்றின் மிகக் கொடூரமான படுகொலை, எல் மொசோத்தே (El Mozote) என்ற கிராமத்திலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் ஆரம்பமானது.
பெரும்பாலும் பெண்களையும் சிறுவர்களையும் உள்ளடக்கிய 1000 பொதுமக்கள், அமெரிக்காவினால் பயிற்றப்பட்டு, நிதியளிக்கப்பட்டு, உபகரணங்கள் வழங்கி உதவியளிக்கப்பட்ட சல்வதோர் இராணுவத்தின் முன்னணி படையணியாகிய அத்லாகற்றல் (Atlacatl Battalion) படையணியால் பல நாட்களாகக் கொல்லப்பட்டார்கள்.
இந்தப் படுகொலையின் 35வது வருடத்தை நினைவுகூர்ந்த யாக்கோபின் சஞ்சிகை (Jacobin magazine) அந்தப் படுகொலையின் சில கோர நிகழ்வுகளை மீளவும் நினைவுகூர்கிறது.
இராணுவ வீரர்கள் வீட்டுக்குள் நுழைந்து, மாஷெத்தி (machete) என அழைக்கப்படும் கத்திகளைக் கொண்டு சிறுவர்களை வெட்டத் தொடங்கியது மட்டுமன்றி, தமது துப்பாக்கிகளால் அவர்களது மண்டையோடுகளை உடைத்து, அவர்களை மூச்சுத்திணற வைத்துக் கொலை செய்தார்கள்.
மிகவும் வயது குறைந்த சிறுபிள்ளைகள் அனைவரும் ஆலயத்தின் மடத்தினுள் நிற்கவைக்கப்பட்டு, இராணுவ வீரர்களின் துப்பாக்கிகளுக்கு இரையாகி இறந்தார்கள்.
எல்சல்வதோரில் (El Salvador) உள்நாட்டுப் போர் நிகழ்ந்த, ஏறத்தாழ 75,000 பேர் கொல்லப்பட்ட 1980-1992 காலப்பகுதியில் இந்த இரத்தக்களரி நிகழ்ந்தேறியது. துணை இராணுவக்குழுக்களின் உதவியுடனும், மரணக்குழுக்களின் துணையுடனும் வலதுசாரிக் கொள்கையைக் கொண்ட அரசினால் இப்படுகொலைகளில் பெரும்பாலானவை முன்னெடுக்கப்பட்டன.
பனிப்போர் காலத்தில் வடக்கின் வல்லரசாக இருந்த அமெரிக்கா, சல்வதோர் நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில் அந்த அரசுக்கு உடந்தையாக இருந்தது மட்டுமன்றி, உலகில் முதலாளித்துவத்தைப் பேணிப்பாதுகாக்கும் தனது பயணத்தில் எண்ணுக்கடங்கா உயிர்களை உலகம் முழுவதும் கொன்றழித்திருக்கிறது.
1980 – 1982 காலப்பகுதியில் மட்டும் எல்சல்வதோர் அரசுக்கு அமெரிக்கா வழங்கிய இராணுவ உதவி 6 மில்லியன் டொலர்களிலிருந்து 82 மில்லியன் டொலர்களுக்கு உயர்வடைந்தது. பின்னர் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் என்ற கணக்கில் அதன் உதவி பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டது.
அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் றேகனின் (Donald Reagen) அரசில், அதிகாரிகளாகப் பணியாற்றிய வர்கள் எந்தவித வெட்க உணர்வும் இன்றி, எல்மொஸோத்தே படுகொலை உட்பட சல்வதோர் அரசின் பயங்கரவாதம் தொடர்பாகப் பொய்களைச் சொல்லி, இவ்வாறான ஒப்பிட முடியாத இராணுவ உதவிகளைச் சல்வதோர் அரசுக்குத் தொடர்ந்து வழங்கி வந்தார்கள்.
எல்சல்வதோர் நாட்டின் உண்மையான நிலவரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர உழைத்த முன்னைய நியூ யோக் ரைம்ஸ் (New York Times) நாளிதழின் ஆசிரியரும் ‘பலவீனமும் வஞ்சகமும்: அமெரிக்காவும் எல்சல்வதோரின் ஈன இரக்கமற்ற போரும்’ என்ற நூலை எழுதியவருமான றேமன்ட் பொன்னர் (Raymond Bonner) போன்ற ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் அந்த அதிகாரம் கடுமையான பரப்புரைகளை மேற்கொண்டது.
‘எல்சல்வதோரில் நிகழ்த்தப்பட்ட படுகொலை’ என்ற தலைப்பில் ஒரு புதிய ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள பொன்னரும், ஒளிப்படவியலாளர் சூசன் மெய்செலாசும், (Susan Meiselas) எல் மொஸோத்தேயில் நடந்தேறிய இந்த மிக மோசமான நிகழ்வு தொடர்பான தங்களது எண்ணங்களை பதிவுசெய்கிறார்கள். 1982 இல் இவர்கள் இருவரும் ஒன்றாக எல் மொசோத்தே கிராமத்துக்குச் சென்ற போது, சனங்கள் எவரும் இன்றி வெறிச்சோடிப் போயிருந்த ஒரு நகரையும் அந்தக் கொடூர நிகழ்வில் உயிர்தப்பிய ஒரேயொருவராகவும் அத்துடன் கடுமையான உளவியற் பாதிப்புகளுடனும் வாழ்ந்துகொண்டிருந்த ருபீனா அமாயா (Rufina Amaya) என்ற என்ற பெண்ணையும் அவர்கள் அங்கே சந்தித்தனர்.
அமாயாவின் பார்வையற்ற கணவரும் மூன்று பெண்பிள்ளைகளும் (5வயது, 3வயது, 8 மாதங்கள்) அந்தப் படுகொலையின் போது கொல்லப்பட்டிருந்தார்கள். படுகொலை நடந்துகொண்டிருந்த போது அற்லாகற்றல் படையணியைச் சேர்ந்த இரண்டு இராணுவச் சிப்பாய்களுக்கு இடையே நடந்த உரையாடலைப் பின்னர் அமாயா நினைவுகூர்ந்தார். “லெப்டினன்ட், சிறுபிள்ளைகளைத் தான் கொல்ல மாட்டேன் என்று இங்கு ஒருவர் சொல்லுகிறார். அப்போது “யார் அவன். விடுங்கள் அவனை நான் கொல்லுகிறேன்” என்ற பதில் அந்த இராணுவ லெப்டினனிடம் இருந்து வந்தது.
‘எல்சல்வதோரில் படுகொலை’ என்ற ஆவணப்படத்தின் தொடக்கத்தில், முன்னர் ஹொலிவூட் (Hollywood) நடிகராக இருந்து, பின்னர் அமெரிக்க அதிபரான டொனால்ட் றேகனின் ஒரு காணொளி சேர்க்கப் பட்டிருக்கிறது. அந்தக் காணொளியில் றேகன் கூறிய பின்வரும் வார்த்தைகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. “மிக எளிமையாகச் சொல்வதாயின், மாக்சீய-லெனினிய சர்வாதிகார ஆட்சியை எல்சல்வதோர் மக்கள் மீது கெரில்லாக்கள் திணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். றேகனின் மேற்கூறிய வார்த்தைகள் திரைப் படத்துக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் சல்வதோர் மக்கள் சந்தித்த கொடுமைகளுக்கு எந்தவிதத்திலும் பொருத்தமானதல்ல.
1000 அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வது கம்யூனிசத்திலிருந்து எப்படி அவர்களை பாதுகாக்க முடியும்? மிகக் கொடூரமான ஒரு மேல்மட்டச் சமூகத்தின் சர்வாதிகார ஆட்சியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட எல்சல்வதோர் மக்களுக்கு ஓரளவாவது நீதியை வழங்க முயற்சிக்கின்ற கெரில்லாக்களின் ஆபத்தான முயற்சியிலிருந்து கூட எப்படி அவர்களைப் பாதுகாக்க முடியும்.
உண்மையைச் சொல்லப்போனால், எல்சல்வதோரின் இந்த மிகக் கொடூரமான வலதுசாரிச் சர்வாதிகாரத்தை அமெரிக்கா ஒருபோதுமே தட்டிக்கேட்கவில்லை. அதற்கான காரணம் என்றவென்றால் அமெரிக்கா அங்கிருந்து ஏராளமான இலாபத்தை ஈட்டிக்கொண்டிருந்தது.
இப்போது, எல் மொஸோத்தே படுகொலை நிகழ்ந்து ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும், உள்நாட்டுப் போர் நிறைவுபெற்று முப்பது ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னணியில், சல்வதோரின் அதிபரும் ருவிற்றர் நட்சத்திரமாக விளங்குகின்ற தற்போதைய சர்வாதிகாரியான நாயிப் புக்கேலே (Nayib Bukele) காலத்தில் எல்சல்வதோர் மக்கள் நீதியைப் பெற்றுக்கொள்வது எட்டாக்கனியாகவே இருக்கிறது.
எல்சல்வதோரை தோல்வியடைந்த ஒரு பிற்கொயின் கனவுலகாக மாற்றுவதற்கு அப்பால், உச்ச நீதிமன்றத்தின் 5 நீதியாளர்களையும் சட்டமா அதிபரையும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பதவி நீக்கம் செய்து தனது சர்வாதிகார ஆட்சியை புக்கேலே தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இன்னும் குறிப்பாக 2016ம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிந்த பொழுது வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு மீளப்பெறப்பட்ட பின்னர், 2016ம் ஆண்டிலிருந்து எல்மொஸோத்தே படுகொலையை விசாரித்து வந்த நீதியாளர் ஹோர்கே குஸ்மானையும் (Jorge Guzman) அவர் பதவிநீக்கம் செய்திருக்கிறார். பொதுமன்னிப்பு மீளப்பெற்றப்பட்டதன் காரணமாக படுகொலையைப் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்தும் வாய்ப்பு ஏற்பட்டதுடன் தனது குடும்பத்தவர்கள் 24 பேரை படுகொலையில் பறிகொடுத்த மறியா றோசாறியோ (Maria Rosario) போன்றவர்கள் படுகொலைகளின் உணர்வுப் பாதிப்புகளிலிருந்து வெளியே வந்து தங்களது வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்தும் வாய்ப்பும் ஏற்பட்டிருந்தது.
எல்மொஸோத்தே கிராமத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மக்களை மாஷெத்திகளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த தனிநபர்களோடு மட்டும் இந்தப் படுகொலைக்கான பொறுப்பு தங்கவில்லை. இவர்களை விட இன்னும் பலர் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
எல்சல்வதோர் அரசு மேற்கொண்ட இந்தப் படுகொலைக்கும் உலகின் ஏனைய பல பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட பல படுகொலைகளுக்கும் நேரடியான பொறுப்பைச் சுமக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா இருக்கிறது.
ஏகாதிபத்திய சலுகைகளுக்கு அப்பால் வரலாறும் பொறுப்புக்கூறலும் சமகாலத்தில் மறைந்துவிடுகின்றன. செப்டெம்பர் 11 இல் நடைபெற்ற தாக்குதல் இதற்கு விதிவிலக்கானதாகும். ஏனென்றால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இவற்றை நினைவுகூர உலகம் நிர்ப்பந்திக்கப்படுகிறது.
றேகனது அரசில் மனித உரிமைகளுக்கும் மனிதாயச் செயற்பாடுகளுக்கும் பொறுப்பான உதவிச் செயலராக நியமிக்கப்பட்ட எலியட் ஏப்ராம்ஸ் தனது அரசுக்கு விசுவாசமான வகையில் ‘எல்மொஸோத்தேப் படுகொலை ஒரு போதுமே நடைபெறவில்லை’ என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தார். பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் எல்சல்வதோரில் றேகனின் நிர்வாகம் பல சாதனைகளைச் செய்தது என்று பிதற்றினார்.
ஆனால் 40 வருடங்களாக இந்தப் படுகொலையின் குற்றவாளிகள் நீதியின் பிடியிலிருந்து தப்பிக் கொண்டே வருகிறார்கள்.
நன்றி: அல்ஜசீரா