கிழக்கில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள் | மட்டு.நகரான்

ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள்மட்டு.நகரான்

கிழக்கில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள்

நாட்டுப்பற்றாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் கிழக்கில் செயற்பட்ட ஒட்டுக் குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டு 18வருடங்கள் கடந்துள்ளன. இந்த வேளையில் தமிழ் தேசியத்திற்காக வித்தாகிய அனைத்து ஊடகவியலாளர்களையும் நினைவு கூருவதுடன் தமிழ் தேசிய பரப்பில் கிழக்கில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால் என்பது மிகப்பெரிதாக இருந்தது.

தமிழ் தேசம் விடுதலைபெற்று தமது தேசத்தில் தமிழர்கள் சுதந்திரக்காற்றை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இந்த மண்ணில் ஆகுதியாகியவர்களை நினைவுகூருதல் என்பதற்கு அப்பால், அவர்கள் விட்டுச்சென்ற பணியை முன்கொண்டு செல்லவேண்டும் என்பதே இன்றைய காலத்தில் அவர்களுக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

வடகிழக்கு தமிழர்களின் தாயகம். தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் தங்களை தாங்களே ஆளும் நிலைமையினை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த நாட்டில் நடைபெற்ற அகிம்சை போராட்டமானாலும் ஆயுதப்போராட்டமானாலும் இராஜதந்திரப் போராட்டமானாலும் அனைத்துப் போராட்டங்களுக்கும் முதுகெலும்பாகயிருந்தது தமிழ் தேசிய பரப்பில் செயற்பட்ட ஊடகவியலாளர்களும் ஊடகங்களுமாகும்.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டப் பரப்பில் என்றும் பிரிக்கமுடியாத வகையில் ஊடகவியலாளர்களும் அவர்கள் சார்ந்த ஊடகங்களும் இருந்தன. இதன் காரணமாகவே தமிழ் தேசிய பரப்பில் செயற்பட்ட ஊடகவியலாளர்களை சிங்கள அரசுகள் இலக்குவைக்க தொடங்கிய நிலையேற்பட்டது.

ஊடகவியலாளர்கள் சுதந்திரமானவர்கள். ஒரு ஜனநாயக நாட்டில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் என்பது மிக முக்கிய தூணாக கருதப்படுகின்றது. ஒரு பாதிக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ஊடகவியலாளர்கள் என்றும் செயற்படுவார்கள் என்பது அனைவருக்கும் அறிந்த விடயமாகும். இதன் காரணமாக இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் நடைபெறும்போது ஊடகவியலாளர்கள் தமது கடமையினை சரியான முறையில் முன்னெடுக்கும்போது பாரியளவிலான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார்கள்.

யுத்த காலத்தில் தமிழ் தேசியத்தின்பால் செயற்பட்ட ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகினார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள், கடத்தப் பட்டார்கள், தாக்கப்பட்டார்கள், ஊடகங்கள் தாக்கப்பட்டன. எரிக்கப்பட்டன. குறிப்பாக வடகிழக்கில் தமிழ் தேசிய பரப்பில் செயப்பட்ட ஊடகவியலாளர்கள் ஒட்டுக் குழுக்களினால் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கும் நிலைமையேற்பட்டது.

வடகிழக்கில் யுத்தம் நடைபெறுபோதும் தமிழர்களின் அகிம்சை ரீதியான போராட்டங்கள் நடைபெறும்போதும் அவற்றினை சிங்கள தேசம் திரிபுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்த போதேல்லாம் உண்மையினை வெளிக் கொணருவதற்கு தமிழ் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.

பாதிக்கப்படும் சமூகத்தின் சார்பாக செயற்படுவோரே உண்மையான ஊடகவியலாளர்களாக பார்க்கமுடியும். அவ்வாறு செயற்பட்ட பல ஊடகவியலாளர்களை இன்று தமிழர் தேசம் இழந்து நிற்கின்றது. சிங்கள தேசம் பல்வேறு சலுகைகளை காட்டியபோதிலும் அவற்றினையெல்லாம் புறந்தள்ளி தமிழர்களின் உண்மை நிலையினை இலங்கை மட்டுமன்றி சர்வதேசம் வரையில் கொண்டுசென்ற ஊடகவியலாளர்கள் என்றும் தமிழ் தேசிய பரப்பில் மறக்க முடியாதவர்களாகவே இருந்துவருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், தமிழ்தேசியத்தின் கொள்கையினை, தமிழ் தேசியத்தின் அவசியத்தினை கிழக்கு மக்கள் தொடர்ச்சியாக பற்றிவருவதற்கு தமிழ் தேசிய அரசியல் பரப்பில் செயற்பட்ட மற்றும் செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்கள் மிக முக்கிய காரணமாகவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் காலத்திற்கு காலம் சிங்கள அரசுகள் இனங்களிடையே மேற்கொண்டுவந்த திட்டமிட்ட இனமோதல்கள் மற்றும் தமிழினப் படுகொலைகள் தொடர்பில் கிழக்கில் செயற்பட்டுவந்த ஊடகவியலாளர்கள் துல்லியமான விடயங்களை வெளிக்கொணர்ந்தனர். இதன் காரணமாக பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கிழக்கு மாகாணத்திலேயே தமிழ்தேசிய போராட்டத்தில் முதல் ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்ட பதிவும் உள்ளது. அவ்வாறு தொடர்ச்சியாக கிழக்கில் தமது இன அழிப்புகளை மேற்கொள்வதற்கு தடையாகயிருந்த ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு வந்தனர்.

இதன் கட்டமாகவே யுத்தத்திற்கு ஓய்வு வழங்கப்பட்டு சமாதான காலம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தபோது சமாதான பேச்சுவார்த்தை என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள் பிரதேசவாதத்தினை ஒரு கருவியாக பயன்படுத்தி கருணா போன்றவர்களை பிரித்தபோது கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தின் பால் செயற்பட்டவர்கள் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளுக்குள் தள்ளப்பட்டனர்.

ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள்உண்மை நிலையும் பிரிவினை, பிரதேசவாதம் போன்ற விடயங்களில் தமிழ் மக்களுக்கு இருந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யமுடியாமல் சிலநேரம் பிரதேசவாதம் தொடர்பில் பிரசாரத்திற்குள் மூழ்கும் நிலையும் கிழக்கில் இருந்த தமிழ் மக்கள் தள்ளப்படும் நிலைமை காணப்பட்டது. இவ்வாறான நிலையிலேயே மாமனிதர் சிவராம் மற்றும் நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன் போன்றோர் கருணாவினால் விதைக்கப்பட்ட பிரதேசவாதம் என்பது கருணாவின் மோசடியை மறைப்பதற்கான ஆயுமாக பயன்படுத்துகின்றனர் என்பதை ஆதார பூர்வமாக எழுதிவந்தனர். இதன் காரணமாகவே மாமனிதர் சிவராம் படுகொலை செய்யப்பட்டார்.

ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள்இவரை தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் எந்த அச்சுறுத்தலுக்கும் அடி பணியாமல் கிழக்கில் ஒட்டுக்குழுக்கள் இராணுவத்தினருடன் இணைந்து முன்னெடுத்த படுகொலைகள் மற்றும் ஒட்டுக் குழுக்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பிரதேசவாத பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் பல செய்திகளை எழுதியதுடன் அது தொடர்பில் பல கட்டுரைகளையும் எழுதினார்.

மட்டக்களப்பினை மையப்படுத்தியதாக கருணா, பிள்ளையான் போன்றவர்கள் 2004ஆம்ஆண்டு தொடக்கம் பல படுகொலைகளை மேற்கொண்டனர். பலரை கடத்தி படுகொலை செய்தனர். கல்விமான்கள் பலர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். அத்துடன் வர்த்தகர்கள் பலர் கடத்தப்பட்டு கப்பம்பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் தமக்கு கப்பம் வழங்காதவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் சம்பவங்களை ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்தபோது பல தடவைகள் நாட்டுப்பற்றாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் அச்சுறுத்தப்பட்டுள்ளார். தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமது கடமையினை முன்னெடுத்துவந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் தேசிய பத்திரிகைகளை விநியோகம் செய்யும் நடவடிக்கைகளை ஒட்டுக்குழு தடுத்ததுடன் பத்திரிகைகளை வீதியில் தீயிட்டும் கொளுத்தும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர்.

இவ்வாற கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக ஆயுதக்குழுக்களினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளையும் அதற்கு பாதுகாப்பு தரப்பினர் அரணாக நின்று பாதுகாப்பு வழங்குவதையும் தொடச்சியாக வெளிக்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது எல்லை வீதியில் உள்ள இவரது அலுவலகத்திற்கு அருகில் வைத்து இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும்.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார். நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர்.

இவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை, அவரது ஊடகப் பணிக்கு கிடைத்த சான்றுகளாகும். இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர்கூட தனது தலைசிறந்த ஊடகப்பணிக்காக மதிப்பளிக்கப்பட்டவர்.

இலங்கையில் தமிழ் தேசிய போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரையில் 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 பெரும்பான்மையின ஊடகவியலாளர்களும் 03 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.

1985ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் 2010ஆம் ஆண்டுவரை தொடர்ந்தவண்ணமே இருந்தது. அத்துடன், இலங்கையில் இன்றுவரை சுட்டுக்கொல்லப்பட்ட, காணாமல் போன சிறுபான்மையின ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.

தமிழ் தேசிய ஊடகப்பரப்பில் தமிழ் தேசிய விடுதலைக்காக தங்களை வித்தாக்கிய ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக நினைவுகூரப்பட வேண்டும். அவர்களின் தமிழ் தேசியத்திற்கான சேவையினை கௌரவிக்கும் வகையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரினால் மாமனிதர், நாட்டுப்பற்றாளர் போன்ற அதியுயர் கௌரவமளிக்கப்பட்டது.

ஆனால் இன்று தமிழ் தேசியத்திற்காக அர்ப்பணிப்பு செய்த ஊடகவியலாளர்கள் நினைவு கூரப்படுவதில் பலர் பின்னடிப்பதை காணமுடிகின்றது.

இன்று வடகிழக்கில் உள்ள தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் ஊடக அமைப்புகள் மட்டுமே இவர்களை நினைவுகூரும் பணிகளை முன்னெடுக்கின்றன. ஆனால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்தேசிய பற்றாளர்கள் இவர்களை மறந்துவிட்ட நிலை காணப்படுவதாகவே தெரிகின்றது.

ஊடகவியலாளர்களின் படுகொலையினை வைத்து புலம்பெயர் தேசங்களில் தஞ்சமடைந்த ஊடகவியலாளர்கள் கூட இவர்களை நினைவுகூர தயங்குகின்றனர். எனினும் தமிழர் தாயகத்தில் உள்ள ஊடக அமைப்புகள் தொடர்ச்சியாக அவர்களின் பணிகளை நினைவுகூர்ந்து வருகின்றன. எதிர்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பணிகள் இளந்தலைமுறையினர் மத்தியில் பேசப்படுவதற்கான நிலைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

Tamil News