இலங்கையில் கன மழை – 12, 326 பேர் பாதிப்பு

இலங்கையின் 8 மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால், பல்வேறு இயற்கை சீற்றங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றத்தினால் 2, 672 குடும்பங்களைச் சேர்ந்த 12, 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

மேலும், 5 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 57 முகாம்களில் 236 பேர் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி, கண்டி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மண்சரிவு, வெள்ளப் பெருக்கு, மற்றும் கடும் காற்று உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் மட்டும் 2448 குடும்பங்களைச் சேர்ந்த 11477 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு திறைசேரி ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் இதன்போது தெரிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்களின் ஊடாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு திறைசேரிக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

Tamil News