அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிப்பு

168 Views

வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகள்

அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகள் உள்வாங்கப்படாததை சுட்டிக்காட்டி, வெருகல், கதிரவன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர், திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோரளவுக்கு வெருகல்  பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி ஊடாக மனு ஒன்றை  வழங்கியுள்ளனர்.

குறித்த மனுவில், “மாற்றுத்திறனாளின் உரிமையான பொதுத் துறையில் வெற்றிடங்களை நிரப்பும் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத வேலை வாய்ப்பு வழங்குதல்(1998 பொது நிர்வாக சுற்றரிக்கை எண் 27/88 ஓகஸ்ட் 18 – 1988) என்ற அடிப்படையில், வெருகல் பிரதேசத்தில் வழங்கப்பட்ட இரண்டாம் கட்ட வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகள்  எவரும் உள்வாங்கப்படவில்லை.

எமது சங்கத்தின் அங்கத்தவர்கள் 13 பேர் விண்ணப்பித்து நேர்முகத் தேர்வுக்கு தோற்றிய போதிலும் அதில் ஒருவர் கூட தொழில் வாய்ப்புக்காக தெரிவு செய்யப்படாததையிட்டு, நாம் மிகவும் கவலையடைகின்றோம்.

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட  எமது பிரதேசத்தில் அதிகமான மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்து வருவதோடு, அவர்களில் 90 சதவீதமானவர்கள் நிரந்தர வருமானம் இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர்.

எனவே, இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளை உள்வாங்கி, அவர்களது தொழில் உரிமையை உறுதி செய்யுமாறு கோருகின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மகஜரின் பிரதிகள், ஜனாதிபதி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரல மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிப்பு

Leave a Reply