இலங்கையில் சுமார் 56,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு

UNICEF இன் சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கையில் சுமார் 56,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உடனடி நிவாரணம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கையில் 22 இலட்சம் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக 2022 ஆம் ஆண்டில் எந்தவொரு வெளிநாட்டு வேலைக்காகவும் நாட்டை விட்டு வெளியேறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 286 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் 4.8 மில்லியன் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என யுனிசெஃப் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு ஒக்டோபர் முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி வரை உணவுப் பாதுகாப்பின்மை தவிர்க்க முடியாமல் மோசமடையும் என்று அவர்கள் ஊகிக்கின்றனர்.

மேலும் 66,000 பேர் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவர் இலங்கையில் உள்ள ஒவ்வொரு 5 குடும்பங்களிலும் 2 குடும்பங்கள் தமது மாதாந்த சம்பளத்தில் 75 வீதத்தை தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்யச் செலவிடுவதால், அந்தக் குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக மிகக் குறைந்த மூலதனத்தை ஒதுக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பணவீக்கம் காரணமாக பெரும்பாலான குடும்பங்கள் தங்களது சேமிப்பில் பெரும்பகுதியை உணவுக்காக செலவிட்டுள்ளதாகவும், அந்த குடும்பங்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கடும் சிக்கலை எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.