பொருளாதார நெருக்கடிக்கான தீா்வுக்கு வழிகாட்டுகின்றதா ரணிலின் பட்ஜெட்?-பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் செவ்வி

WhatsApp Image 2022 11 18 at 10.47.37 AM பொருளாதார நெருக்கடிக்கான தீா்வுக்கு வழிகாட்டுகின்றதா ரணிலின் பட்ஜெட்?-பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் செவ்வி

பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றை நாடு எதிா்நோக்கியிருக்கும் நிலையில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சா் என்ற முறையல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டம் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்வதற்கான வழியைக் காட்டுவதாக அமைந்திருக்கின்றதா,  தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இதனை எவ்வாறு நோக்க முடியும் போன்ற பல விடயங்கள் தொடா்பில் கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வுக்காக வழங்கிய நோ்காணலின் முக்கிய பகுதிகளை இலக்கு வாசகா்களுக்காக தருகின்றோம்.

கேள்வி – 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமா்ப்பித்திருக்கின்றாா். நாடு எதிா்நோக்கியிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கான தீா்வுக்கான பாதையைக் காட்டுவதாக இது இருக்கின்றதா?

பதில் – உண்மையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றை இலங்கை எதிா்கொண்டுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னா் இந்தளவுக்கு மோசமான நெருக்கடி ஒன்றை இதற்கு முன்னா் எதிா்கொண்டிருக்கவில்லை. பொருளாதாரத்தில் ஒரு தேக்கவீக்கமான நிலை இப்போது உருவாகியிருக்கின்றது. பொருளாதார வளா்ச்சி குறைவாக இருப்பது. பணவீக்கம் மிக அதிகமாக இருப்பது. வேலையின்மை மிக அதிகமாக இருப்பது. இந்த மூன்றும் ஒன்றாக இடம்பெறுமாக இருந்தால் அதனை “தேக்க வீக்கம்” என்று சொல்வாா்கள்.

பணவீக்கம் இப்போது 70 வீதத்தைத் தாண்டிவிட்டது. இது வரலாற்றில் முன்னெப்போதும் இடம்பெறவில்லை. இந்த வருடத்தில் – அதாவது 2022 இல் பொருளாதார வளா்ச்சி மறைப் பெறுமதியைக் காட்டிநிற்கின்றது. அதாவது 8.7 வீதத்தினால் வீழ்ச்சி நிலையைக் காட்டி நிற்கின்றது. இலங்கை வரலாற்றில் இவ்வாறான நிலை முன்னா் ஏற்படவில்லை. முறைசாரத் துறையில் மிகவும் கடுமையான வேலையின்மை நிலவுகின்றது. ஆகவே, இது ஒரு சிக்கலான, மிக மோசமான காலப்பகுதி.

இந்த நெருக்கடி ஒரு வருடத்தில் – இரண்டு வருடத்தில் வந்ததல்ல. நீண்டகாலமாகவே இதற்கான அடித்தளம் இடப்பட்டது. இது இலங்கை தானாகவே உருவாக்கிக்கொண்ட ஒரு நெருக்கடி. அதாவது, மனிதா்களால் உருவாக்கப்பட்ட ஒரு நெருக்கடி. ஆகவே, நீண்டகாலத்தில் உருவாக்கப்பட்ட நெருக்கடியை நீண்டகாலத்தில்தான் தீா்க்க முடியும். ஒரு வருடத்துக்குள் அதனைத் தீா்க்க முடியாது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் பல முன்மொழிவுகள் இருக்கின்றன. இவ்வாறான முன்மொழிவுகளை நாம் முன்னரும் பாா்த்திருக்கின்றோம். கொள்கைகள் மட்டும் எங்களுக்குத் தீா்வைத் தராவது. கொள்கைகள் செயல்வடிவம் பெறவேண்டும். அந்த செயல்வடிவம் பெறுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எவ்வாறு மேற்கொள்ளப்போகின்றது என்பதில்தான் அடுத்த கட்டம் தங்கியுள்ளது. அதாவது, வருமானத்தை எவ்வாறு உயா்த்தப்போகின்றது? செலவுகளை எவ்வாறு கட்டுப்படுத்தப்போகின்றது? தேவையற்ற செலவுகளை எவ்வாறு குறைக்கப்போகின்றது? என்பன முக்கியமான கேள்விகள்.

இவை அனைத்தையும்விட முக்கியமாக ஊழல்கள் முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது. ஊழல்களை அரசாங்கம் எவ்வாறு கட்டுப்படுத்தப்போகின்றது என்பதும் முக்கியமானது. இது தொடா்பில் எந்தவிதமான தகவல்களையும் அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. இவ்வாறு பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. முன்மொழிவுகள் வந்துள்ளன. இவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படப்போகின்றன என்பதை நாம் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

கேள்வி – இந்த வரவு செலவுத் திட்டத்திலும் பாதுகாப்புக்கு அதிகளவு தொகை ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதனை எவ்வாறு பாா்க்கிறீா்கள்?

பதில் – இலங்கையில் உள்நாட்டு நிா்வாகத்துக்கு அடுத்ததாக மிகப்பெரிய அமைச்சாக இருப்பது பாதுகாப்பு அமைச்சு. யுத்தம் முடிந்த பின்னரும் அந்த நிலைமை தொடா்ந்தது. இப்போது பாதுகாப்பு அமைச்சை பின்தள்ளி நிதி அமைச்சு முன்னுக்கு வந்திருக்கின்றது. கடன்சுமை அதிகளவுக்கு இருப்பதால், உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்களைக் கொடுக்கவேண்டிய தேவை நிதி அமைச்சுக்கு இருக்கின்றது.

பாதுகாப்பு அமைச்சை பின்தள்ளி கல்வி அமைச்சு முன்னுக்கு வந்திருந்தால் நிச்சயமாகச் சொல்லலாம் இந்த நாடு புதிய திசை ஒன்றில் செல்லப்போகின்றது என்று. அவ்வாறான சமிஞ்ஞை ஒன்று தென்படவில்லை. நிதி அமைச்சு இரண்டாவது இடத்துக்கு வந்து பாதுகாப்பு அமைச்சு மூன்றாவது இடத்துக்குச் சென்றிருக்கின்றது.

நிதி அமைச்சராகவும் இருக்கின்ற ஜனாதிபதி, “கப்பல் போக்குவரத்தும் பாதுகாப்புடன் இடம்பெற வேண்டும். அப்படியென்றால்தான் வா்த்தகம் உரிய முறையில் நடைபெறும். அதற்கு பாதுகாப்புச் செலவு அதிகரிக்கப்பட வேண்டும்” என்று இதற்கு விளக்கம் கொடுத்துள்ளாா். இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்த மன நிலையில் மாற்றம் ஏற்படாத வரையில் – கல்விக்கான ஒதுக்கீடுதான் முதலாவதாக இருக்கும் நிலை வரும்வரையில் இந்த நாடு பொருளாதாரத்துறையில் எழுச்சியைப் பெற்றுக்கொள்ள முடியாது. தேவையான துறைகளுக்கு குறைவாக ஒதுக்கப்படுவதும், முக்கியமற்ற துறைகளுக்கு அதிகமாக ஒதுக்கப்படுவது, தேவையான திட்டங்களை கவனிக்காமல் விடுவது, அரசியல் நோக்கங்களுக்காக பொருளாதாரத்துக்கு இழப்பைத் தரக்கூடிய திட்டங்களைச் செயற்படுத்துவது என்ற பாரம்பரியத்திலிருந்து இலங்கை விடுபட வேண்டும்.

கேள்வி – இந்த பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அவ்வாறான ஒரு நிலைமைதான் காணப்படுகின்றதா?

பதில் – அவா்களின் போக்கில் மாற்றம் வரவில்லை. பொருளாதார எழுச்சி ஒன்று இங்கு ஏற்படவேண்டுமானால் அதில் மாற்றம் வரவேண்டும். பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீட்டை நிச்சயமாக குறைக்கலாம். சிங்கள மக்கள் மத்தியிலேயே அதற்கு ஆதரவு உள்ளது. யுத்தம் இல்லாத போது பாதுகாப்பு அமைச்சுக்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு எதற்காக என சிங்களவா்கள் பலா்கூட கேள்வி எழுப்புகின்றாா்கள். கல்வி புறந்தள்ளப்படுகின்றது. ஏனைய நாடுகளின் அனுபவத்தை இலங்கை புறந்தள்ளுகின்றது. எல்லா நாடுகளும் கல்விக்கு முன்னிரிமை கொடுத்திருக்கின்றன. அதன் விளைவுகளை அவா்கள் அனுபவிக்கின்றாா்கள். இலங்கை அதனை உணா்வதாகத் தெரியவில்லை.

கேள்வி – வெளிநாட்டு முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லையே…

பதில் – அவா்கள் பொருளாதார வலையங்களை மேல் மாகாணத்தில், வடமாகாணத்தில், திருகோணலையில், ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்போகின்றோம் என்று சொல்லியிருக்கின்றாா்கள். இதற்கு மூன்று முக்கிய நோக்கங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்று ஏற்றுமதிப்பொருளாதாரம். இரண்டாவது – சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் விவசாயத்தையும், கடல்வளத்தையும் பயன்படுத்துவது. மூன்றாவது டிஜிட்டல் பொருளாதாரம்.

கொள்கைகளை நாம் இலகுவாகச் சொல்லிவிடலாம். ஆனால், நான் குறிப்பிட்ட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மிகக்கடுமையாக இலங்கை அரசாங்கம் எடுக்காத போது, இவ்வாறான வெளிநாட்டு முதலீடுகள் வருவது சாத்தியமில்லை. நிறுவனங்களைச் சீா்படுத்த வேண்டும். அரச நிா்வாகத்தில் காணப்படும் தீா்மானம் எடுப்பதில் நிச்சயமற்ற தன்மைகள் என்பன இருக்கக்கூடாது. இந்தக் காரணிகளை வைத்துத்தான் தாய்லாந்து, தென்கொரியா, சிங்கப்புா், மலேசிய இப்போது இந்தியா கூட முன்னேறிக்கொண்டு செல்கின்றது.

நாட்டில் இருக்கக்கூடிய நிா்வாகச் சீா்கேடுகள், ஊழல் போன்றவைகளை வைத்துக்கொண்டு முதலீடுகளைக் கொண்டுவாருங்கள் எனக் கோரமுடியாது. அவா்கள் எந்த நாட்டில் தமது முதலீட்டுக்குப் பாதுகாப்புள்ளது, எங்கு அதிகளவுக்கு உழைக்கலாம் என்றுதான் பாா்ப்பாா்கள். இலங்கையை அவா்கள் விரும்பிவருவாா்கள் என்று வெறுமனே எதிா்பாா்க்க முடியாது. அந்தவகையில், வெளிநாடுகளில் உள்ள நடைமுறைகளை அமுல்செய்யாமல், வெறுமனே முதலீடுகள் வரப்போகிறது என்று எதிா்பாா்ப்பது முறையல்ல.

கேள்வி – இந்த வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்குப் பகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினா்கள் சிலா் கருத்து வெளியிட்டுள்ளனா். இதனை நீங்கள் எவ்வாறு கருதுகின்றீா்களா?

பதில் – வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு மதிப்பீடுதான். செலவுக்கு ஒது மதிப்பீடு. செலவுக்குத் தேவையான வருமானத்தை எவ்வாறு திரட்டப்போகின்றோம் என்பதற்கான ஒரு மதிப்பீடு. உதாரணமாக ஒரு மாகாணத்துக்கோ அல்லது ஒரு துறைக்கோ 500 மில்லியன் ஒதுக்கப்படுகின்றது என்று சொல்லப்பட்டால், அந்தத் தொகை நிச்சயமாக ஒதுக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. திறைசேரிக்கு வரும் நிதியைப் பொறுத்துத்தான் படிப்படியாக அந்த நிதி விடுவிக்கப்படும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் முன்னுரிமை அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டிய மாகாணங்கள் என்பதில் எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை. ஏனெனில் இன்று வறுமையான மாவட்டங்கள் எவை எனப் பாா்த்தால் அவை தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், நுவரேலியா ஆகியன உள்ளன. தென்பகுதியில் மொரணாகலைதான் வறுமையான பிரதேசமாக உள்ளது. ஏனைய அனைத்தும் முன்னா் போா் இடம்பெற்ற பிரதேசங்களாகவும், தமிழா்கள் செறிந்து வாழும் பிரதேசங்களாகவும்தான் உள்ள.

அதனால் அதனை முன்னிலைப்படுத்தி சில திட்டங்களைச் செய்ய வேண்டும். போா் முடிவடைந்து 13 வருடங்கள் சென்றுவிட்ட பின்னரும் அந்தப் பகுதிகள் வறுமையில் சிக்கித் தவிப்பது என்பது ஏற்புடையதல்ல. இப்பகுதிகளின் அபிவிருத்தியில் அரசாங்கம் விஷேட கவனம் செலுத்த வேண்டும். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினா்கள் ஆதாரத்துடன் சில விஷயங்களை வெளிக்கொண்டுவர வேண்டும்.

கேள்வி – மலையக மக்கள் தொடா்பாக கவனம் செலுத்தப்படவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவா் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியிருக்கின்றாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் – நுவரேலியா மாவட்டம் தொடா்பாக நான் முன்னரும் குறிப்பிட்டேன். அது தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசம். வறுமை அதிகமாகவுள்ள பகுதி. இந்த வரவு செலவுத் திட்டம் நலன்புரித் திட்டங்களை மையப்படுத்திய ஒன்றல்ல என்றொரு வாதம் முன்வைக்கப்படுகின்றது. வரவு செலவுத் திட்டத்தில் அது தெரிகின்றது. ஆனால், நாற்பது ஆண்டுகளாக நலன்புரித் திட்டங்கள் மூலமாகவே வளா்ந்த ஒரு நாட்டை உடனடியாக அவ்வாறு மாற்றுவது சாத்தியமா என்பது எனக்குத் தெரியவில்லை.

மலையக மக்கள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு முதுகெலும்பாக இருந்தவா்கள். 1986 ஆம் ஆண்டு வரைக்கும் தேயிலை, ரபா் ஏற்றுமதிதான் அந்நியச் செலாவணியை அதிகளவுக்கு ஈட்டித்தந்தது. இதந்குப் பின்னால் மலையக மக்கள் இருக்கின்றாா்கள். அதனால், மலையக மக்களின் வாழ்க்கையில் மறுமலா்ச்சி ஏற்பட வேண்டும். எங்கெங்கெல்லாம் வறுமை அதிகமாக இருக்கின்றதோ அந்தப் பகுதிகளை அரசாங்கம் அடையாளம் கண்டு அந்தப் பகுதிகளை அரசாங்கம் அபிவிருத்தி செய்ய வேண்டும். அந்தவகையில் பாராளுமன்ற உறுப்பினா் மனோ கணேசன் சொல்வது உண்மைதான். அதனை மறுதலிக்க முடியாது.

கேள்வி – புலம் பெயா்ந்த தமிழா்கள் சிலா் – குறிப்பாக தொழிலதிபா்கள் கொழும்பு வந்து அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றாா்கள். அவா்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா?

பதில் – அரசாங்கம் எல்லாரிடமிருந்தும் முதலீடுகளை எதிா்பாா்க்கின்றது. ஏனெனில் அந்நியச் செலவணி பற்றாக்குறை பெருமளவுக்குக் காணப்படுகின்றது. அந்த நிலைமை இன்னும் மாற்றமடையவில்லை. வெளிநாடுகளிடம் கடன்டிபற முடியாத நிலை இலங்கைக்கு ஏற்பட்டிருக்கின்றது. பெற்ற கடன்களை மீளச் செலுத்த முடியாது என அறிவித்திருக்கும் நிலையில் புதிய கடன்களைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டு உதவிகள் இலங்கைக்குத் தேவைப்படுகின்றது என்பது உண்மை. ஆனால், முலீடுகளைச் செய்வதற்கான சூழ்நிலை பொருளாதார அடிப்படையில் உருவாக வேண்டும். அதாவது இன, மத ரீதியான விவகாரங்கள் செல்வாக்குச் செலுத்த முடியாத அளவுக்கு இலங்கை நகர வேண்டும். அவ்வாறான ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் அனைவரும் இங்கு வந்து முதலீடு செய்யக்கூடிய ஒரு சூழ்நிலை இங்கு உருவாகும். அவ்வாறு வந்தால் அது தமிழ் மக்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. அவ்வாறான ஒரு சூழ்நிலையை அரசாங்கம் விரைவாக ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

கேள்வி – சா்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடா்ந்தும் மா்மமாகவே இருந்துவருகின்றது. இது தொடா்பான தகவல்களை வெளிப்படுத்த அரசாங்கம் தயங்குவதற்கு காரணம் என்ன?

பதில் – இவ்வளவு காலமும் இலங்கை அரசாங்கத்தின் தந்திரோபாயம் எவ்வாறிருந்தது என்றால், வலிக்கு உரிய மருந்தை எடுக்காமல், வலி நிவாரணிகளை மட்டும்தான் கொடுத்துக்கொண்டிருந்தது. இப்போது ஐ.எப்.எம். கசப்பான சில குளிசைகளைக் கொடுப்பதற்கு முற்படுகின்றது. வருமானத்தை கடுமையாக அதிகரியுங்கள். செலவைக் குறையுங்கள், நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை குறையுங்கள் என்பன அவா்களின் முக்கிய நிபந்தனைகள். இதனைவிட மத்திய வங்கிக்கு சுயாதீன தன்மையைக் கொடுக்கச் சொல்கின்றது. நாணய மாற்று வீதத்தை செயற்கையாக அல்லாமல் சுயாதீனமாக கணிக்கச் சொல்கின்றது.

இதனைவிட கடன் மீளமைப்பு செய்யச் சொல்கின்றது. அதாவது சீனாவுடன், ஜப்பானுடன் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் பேசி தமது கடனில் ஒரு தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாதிருப்பதால் அதனை ரத்துச் செய்வதற்கான கோரிக்கையை முன்வைக்குமாறும் ஐ.எப்.எம். கோருகின்றது. இதற்கு எல்லா நாடுகளும் உடன்பட வேண்டும். அதேவேளை உள்நாட்டுக் கடன்களையும் மறுசீரமைக்கச் சொல்லி ஐ.எப்.எம். வலியுறுத்துகின்றது. இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் பல வங்கிகளிடம் கடன்பெற்றிருக்கின்றது. இந்த நிலையில் இவற்றை மறுசீரமைக்க முற்பட்டால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். அதனால், இவற்றை வெளியில் சொல்ல அரசாங்கத்தினால் முடியாது. இந்த நிபந்தனைகளை நிறைவேற்றவும் முடியாது.

இதனால், ஐ.எப்.எம். உதவிகள் கிடைப்பது தாமதமாகலாம். ஆனால், வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னதாகவே சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. இது போன்ற சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. இதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.