“பாதுகாப்பான சத்திர சிகிச்சை வசதிகளை வழங்குவதே என்னுடைய இலட்சியம்”

பாதுகாப்பான சத்திர சிகிச்சை“யுத்தம், தீக்காயம், வாள் வெட்டு , வீதி விபத்து போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, அதிகளவான மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் உலகத் தரம் வாய்ந்த சத்திர சிகிச்சைகளை உரிய முறையிலே வழங்கி, அவர்களை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதே  என் நோக்கம்.” என பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் கதிரவேல் இளஞ்செழிய பல்லவன் தெரிவித்துள்ளார்.
தாயகத்தில் குறைந்தளவிலான தொழில் நுட்ப  மருத்துவ வசதிகள் இருக்கின்ற போதும், மருத்துவர் கதிரவேல் இளஞ்செழிய பல்லவன் ஓர் மருத்துவ சாதனையை நிகழ்த்தி யுள்ளமை குறித்து அறிந்திருப்பீர்கள்.
இந்நிலையில், வரும் யூலை 15ஆம் திகதி ‘உலக இளையோர் திறன் நாள்’ கொண்டாடப்படுவதை முன்னிட்டு ‘இலக்கு’  ஊடகத்தினருக்கு அவர் வழங்கிய சிறப்பு  செவ்வி.
பாதுகாப்பான சத்திர சிகிச்சை வசதிகளை வழங்குவதே என்னுடைய இலட்சியம்

கேள்வி:
உங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தினை வழங்க முடியுமா?

பாதுகாப்பான சத்திர சிகிச்சை 2

பதில்:
கதிரவேல் இளஞ்செழிய பல்லவன். பிளாஸ்டிக் (Plastic) சத்திர சிகிச்சை நிபுணராக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் பணியாற்றி வருகின்றேன்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து மிகவும் வறுமையான பின்னணியில் தான் படித்து வந்திருக்கிறேன். எனது பிரதேசத்து மக்களால் வளர்க்கப்பட்ட ஒருவன். மருத்துவக் கல்வியை  யாழ்ப்பாண  மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்து விட்டு, மேலதிக பட்டப் படிப்பை இந்தியாவில் கங்கா வைத்திய சாலையில் படித்து, என்னுடைய இறுதி பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை  கற்கையை நிறைவு செய்து, இப்பொழுது யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில்  பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணராகக் கடந்த மூன்று வருடங்களாக சேவையாற்றி வருகின் றேன்.

முல்லைத்தீவு மாவட்ட மக்களும் சரி,  யாழ்ப்பாண மாவட்ட மக்களும் சரி அவர்கள் தான் என்னை வளர்த்து எடுத்திருக்கிறார்கள். நான் அவர் களுக்குச் செய்யக் கூடிய உதவி, உலகத் தரம் வாய்ந்த, பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை வசதிகளை அவர்களுக்கு பயன் பெறக் கூடிய விதத்திலே செய்வது. அதை தான் இங்கே நான் செய்து கொண்டிருக் கின்றேன். இது மட்டுமல்ல இலங்கையிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக எங்கள் மாவட்டங்கள் இருக்கின்றன. இங்கு தான் வறுமை மிகவும் அதிகமாக இருக்கிறது.

கேள்வி:
கை துண்டாடப் பட்ட ஒருவருக்கு எட்டு மணித்தி யாலயங்களில், வெற்றி கரமாக பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை அளிக்கப்பட்ட விடயம், அண்மையில் அனைவராலும் பேசப் பட்டது.   அதில் நீங்கள் எதிர் கொண்ட சவால்கள் என்ன?
பதில்:
இந்த வாள் வெட்டுக்களில்  இருந்து வரும் அவயவங்கள் துண்டிக்கப் படுவது என்பது பொருத்துவதற்கு இலகுவானது. ஏனெனில் அதனை  கிளீன் கட் (Clean cut) என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த கிறைண்டர் (Grinder) அல்லது இயந்திரத் தினால் (Machine) ஏற்படும் வெட்டுகள் சிதைந் திருப்பதால்  அவற்றை மீளப் பொருத்துவது  மிகவும் சவாலானது.

இவ்வாறு கூரிய ஆயுதங்களால்  வெட்டப்பட்டு வரும் போது, அவற்றைப் பொருத்துவது மிகவும் கடினமான விடயம் அல்ல. ஆனால் அவர்கள் அந்த துண்டிக்கப்பட்ட அவயவங்களை எவ்வளவுக்கு மிக விரைவாகக் கொண்டு வர முடியுமோ, அதனைப் பாதுகாப்பான முறையில் அதாவது அதனை நேரடியாக ஐஸ் கட்டியில் தொடுகை யுறாதவாறு வைக்க வேண்டும்.

யுத்தம், தீக்காயம், வாள் வெட்டு , வீதி விபத்து போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, அதிகளவான மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் உலகத் தரம் வாய்ந்த சத்திர சிகிச்சைகளை உரிய முறையிலே வழங்கி, அவர்களை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதே  என் நோக்கம்.

அவ்வாறு ஐஸ் கட்டியில்  தொடுகை யுற்றால்,  கலங்களுக்குள் இருக்கும் நீர் உறைந்து கலங்கள் சிதைந்து விடும். எனவே அவ்வாறு செய்யாமல், துண்டிக்கப் பட்ட அவயவங்களை ஒரு பொலித்தீன் பையினுள் இட்டு, அதிலே நீர் உட் புகாதவாறு கட்டிய பின், அதற்கு மேல் ஐஸ்ஸை போட்டு கொண்டு வந்தால், அது உறையாது.  அவ்வாறு மிக விரைவாக இங்கே கொண்டு வந்தால்,  அவற்றை மீண்டும் பொருத்தி, இயங்கக் கூடிய நிலமைக்குக் கொண்டு வரக் கூடிய வசதிகள் எங்களிடம் இருக்கின்றது.

கேள்வி:
இலங்கையில் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்வதற்கான வசதி கள் உள்ளனவா? அவை எப்படி இருக்கின்றன?
பதில்:
இலங்கையிலே 22 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள்.  இருந்தாலும் அவர்களுக்குச் சத்திர சிகிச்சை செய்வதற்கு கிட்டதட்ட 14  பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை  நிபுணர்கள் தான்  இலங்கையில் இருக்கிறார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு அல்லது கொழும்பை அண்டிய பகுதி களிலேயே இருக்கிறார்கள்.  இந்த வசதிகள் இருப்பது வட மாகாண த்திலும், கிழக்கு மாகாணத்திலும் மட்டுமல்ல, ஒவ்வொரு மாகாண த்திற்கும்  ஒருவர் கூட இல்லை. ஆகவே, அதற்குரிய வசதிகளும் மிகவும் குறைந்த அளவிலேயே வழங்கப் பட்டிருக்கின்றது. எல்லா அரசாங்க வைத்திய சாலைகளிலும் அதற்குரிய வசதிகள் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. அந்தக் குறைந்த வளங்களைக் கொண்டே நாங்கள் இத்தகைய சத்திர சிகிச்சைகளைச் செய்கிறோம். எங்களுக்கு என்று தனியாக சத்திர சிகிச்சைக் கூடங்கள்,  அதற்குரிய ஆளணிகள், விடுதி வசதிகள் இருந்தால்,  இதைவிட சிறந்த சேவையை நாம் வழங்கக் கூடியதாக இருக்கும்.

கேள்வி:
துண்டாடப் பட்ட கையைப் பொருத்தி, சிகிச்சையளித்தது,  இது தான் முதலாவது சிகிச்சையா? 
பதில்:
பல்வேறு நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து  செய்யும் ஒரு முயற்சி தான் இது. பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களின் கூட்டு முயற்சியால் தான் இது வெற்றி கரமாக  நடை பெறும். இத்துடன் முடிந்து விடுவ தில்லை. நாங்கள் தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்கியதன் பின்னர்  அவர்கள் தங்களுடைய அன்றாட கடமைகளுக்கு திரும்பக் கூடியதாக இருக்கும்.

உண்மையிலேயே நாங்கள் இது போன்ற சிகிச்சைகளை  அடிக்கடி செய்து வருகின்றோம். கை பொருத்தியதற்கு  அடுத்த நாளும்  ஒரு  அம்மா கிளிநொச்சி வைத்திய சாலையிலிருந்து யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டிருந்தார். அவர்  கை தும்பு  இயந்திரத்தில் (Machine).  கொடுக் கப்பட்டு   விரல்கள் சிதைந்த நிலையில் கொண்டு வரப்பட்டார். அவருக்கு  இரவு ஒரு மணி வரை சத்திர சிகிச்சை செய்து,  அவருடைய கைகளும் தற்போது காப்பாற்றப் பட்டு இருக்கின்றது. இது பத்திரிகையில் வந்ததால் தான் வெளியே தெரிய வந்தது.  ஆனால் அதற்கு முன்னரும்  நாங்கள் பல பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைகளைச் செய்திருக் கின்றோம்.

சத்திர சிகிச்சை  மேற் கொள்ளப் பட்டு கை பொருத்தப் பட்ட நபர், தற்போது நலமாகி வீட்டுக்கு  சென்றிருக்கின்றார். அவர் சுகதேகியாக இருக்கிறார்.  பிரச்சினைகள்  எதுவும் இல்லை. ஆனால், அவருக்கு கைகளை இயக்கு வதற்குரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும். அதற்கு ஆறு கிழமைகள் ஆகும். அதன் பின்னர் அவர் மீண்டும் தன்னுடைய  பழைய நிலைக்குத் திரும்ப முடியும்.

கேள்வி:
பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை அழகு படுத்தல் சத்திர சிகிச்சையா? அதுபற்றி சற்று விளக்கம் கூற முடியுமா?
பதில்:
பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சையை அழகு படுத்தல் சத்திர சிகிச்சை என்று தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் அரசாங்க வைத்திய சாலைகளில் தற்போது செய்யும் சத்திர சிகிச்சைகளில் நூற்றுக்கு தொண்ணூற் றொன்பது  வீதமானது, மறு சீரமைக்கும் சத்திர சிகிச்சைகளே. இந்த மறுசீரமைப்பு சத்திர சிகிச்சை செய்வதன் மூலம் – அவர்களுடைய தோற்றங்களை மறுசீரமைப்பதன் மூலம் அவர்கள் தங்களுடைய தொழிற் பாடுகளைச் செய்ய வைப்பது தான் எமது வேலை. உதாரணமாக, உதட்டுப் பிளவு, அண்ணப் பிளவு என வருகின்ற பிள்ளைகளுக்கு, பால் குடிக்க இயலாமல் இருக்கும்.

அவர்களுக்குப் பேச இயலாமல் இருக்கும். அவர்களுக்கு நாங்கள் பிளாஸ்ரிக் (plastic) துண்டுகளை வைத்து அவ்வாறு செய்யப்படுவது plastic சத்திர சிகிச்சை அல்ல, பிளாஸ்ரிக் என்று சொல்வதன் அர்த்தம் பானைகள் வனைதல் போன்று. அதனை மறு சீரமைத்து அந்த இழையங்களை திருப்பியும் சாதாரண நிலைமைக்கு மீட்டமைத்து (restore), அதனை நாங்கள் சீரமைத்து, அவர்களின் உருவத்தை மறுசீரமைப்பதன் மூலம் நாங்கள் அவரைத் தொழிற்பட வைப்பது.

உதாரணமாக விபத்தின் போது கைகளில் இருக்கும் நரம்புகள் அறுந்து விட்டால், (Brachial plexus injury) அந்த நரம்புகளை நாங்கள் மைக்கிறோஸ் கோப் (Microscope) வைத்து மீண்டும் பொருத்தி நரம்பு களுக்குரிய (Connection) தொடர்பினைத் திருப்பிக் கொடுப்பதால், அவர் தன்னுடைய வேலையைச் செய்ய முடியாது. இவர்கள் நீண்ட நாட்கள் (Phychotherapy) பயிற்சி என்று இருக்காமல் மூன்று தொடக்கம் ஆறு மாதத்திற்கு எங்களிடம் வந்தால், பூரணமாக அவர்களின் நரம்புகளை இணைத்து, தங்களுடைய செயற்பாடுகளை செய்வதற்கு உதவியாய் இருக்கும்.

கேள்வி:
பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை யார் யாருக்கு செய்யலாம் ?
பதில்:
பிறக்கின்ற குழந்தையில் இருந்து இறக்கும் வரை. ஆண் பெண் இரு பாலருக்கும் உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் அதாவது கர்ப்பப் பையிலிருந்து வெளியில் வந்த நாளில் இருந்து இறக்கும் வரைக்கும், ஒருவர் இறக்கும் தறுவாயில் படுக்கைப் புண்கள், நாள்பட்ட புண்கள் வந்திருந்தால் அவற்றை எல்லாம் நாங்கள் பிளாஸ்ரிக் (Plastic) சத்திர சிகிச்சை செய்து மறுசீரமைப்பு செய்யலாம்.

தீக்காயங்களின் போது ஏற்படும் காயங்கள், அவற்றின் போது ஏற்படும் அங்க விகாரங்களை எல்லாம் மறுசீரமைப்பு செய்யும் செயற்பாடுகளை செய்கிறோம். உச்சி முதல், உள்ளங்கால் வரைக்கும் இருக்கும் அனைத்து விதமான பிரச்சினை களிற்குமான நிரந்தரத் தீர்வை வழங்குவதாக பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை காணப் படுகின்றது.

ஆனால் நடிகர்கள், தொழில் அதிபர்கள், அவர்களுக்குத் தானே இது செய்யப் படுகிறது என்று மக்கள் பொதுவாக நினைக்கிறார்கள். ஆனால், உண்மையிலே நாம் இங்கே செய்வது, தீக்காயங்கள், விபத்துக்கள், கை, கால் வெட்டுப் பட்டு வருவது, நாட்பட்ட புண்கள் அவற்றிற்கான சிகிச்சைகளை நூற்றுக்கு தொண்ணூற் றொன்பது வீதம் செய்து வருகின்றோம்.

அவர்கள் மீண்டும் சுகமாகி, தங்களுடைய தொழிலுக்குத் திரும்பிச் சென்று, தங்கள் வாழ்க்கையை சாதாரணமாக – சிறந்த வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கு, பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சையை செய்து வருகின்றோம். இது பெரும்பாலான மக்களுக்கு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை என்றால் இதுதான் என தெரியாமல் இருக்கிறது. ஆனால் இப்படி விளக்கம் இருந்தால் அவர்கள் சத்திர சிகிச்சை மேற் கொள்வார்கள்.

உதாரணமாக மாஞ்சோலை வைத்திய சாலையில் 56 வயதுடைய அம்மா ஒருவர் வந்திருந்தார். அவருக்கு மூன்று வயதாகி இருக்கும் போது குப்பி விளக்கு தட்டுப்பட்டு எரிந்து அவருடைய கை, உடம்போடு ஒட்டி, கழுத்தும் வளைந்த நிலையில் இருந்தது. அவருக்கு சத்திர சிகிச்சை செய்து ஐம்பத்தி மூன்று வருடமாக துன்பப்பட்டு இருந்த வரை ஒரே நாளில் சத்திர சிகிச்சை மூலம் அந்த கையை வழமைக்கு கொண்டு வந்திருந்தோம்.

தான் புதிதாகப் பிறந்த மாதிரி இருக்கிற தெனவும், மூச்சு எடுக்க சுகமாக இருக்கிற தெனவும் கையெல்லாம் தூக்கக் கூடியதாக இருக்கின்றது எனவும் கூறினார். அவ்வாறு துன்பப் படாமல், முதலாவதாக எங்களிடம் வந்து விட்டார்கள் என்றால், அவர்களைக் காப்பாற்ற முடியும்.

உலகத்திலேயே அதிகளவான கால்கள் துண்டிக்கப் படுவதற்கு மிக முக்கியமான காரணம் சலரோகம். ஒவ்வொரு இருபது செக்கனுக்கும் ஒவ்வொரு கால் துண்டிக்கப் பட்டு கொண்டிருக்கின்றது. சலரோகப் புண்களுக்கு சில வைத்தியர்கள் ஐந்து, ஆறு வருடங்களாக மருந்து கட்டிக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் புண் மாறுவதில்லை. அவ்வாறு மாறாமல் இருக்கிறதற்கு காரணம் இருக்கிறது. அந்தக் காரணம் என்ன என்று கண்டுபிடித்து அதற்கு தீர்வளித்தால், அந்த புண்கள் எல்லாம் ஒரு மாதம் இரண்டு மாதங்களில் பூரணமாக சுகமாகி, அவர்கள் சாதாரண வாழ்க்கைக்கு சென்று விடுவார்கள்.

கால்கள் வெட்டுப் படாமல் காப்பாற்ற எங்களால் உதவி செய்யக் கூடியதாக இருக்கின்றது. தற்போது நாங்கள் ஒவ்வொரு நாளும் சத்திர சிகிச்சைகளைச் செய்து வருகிறோம். ஆனால் clinic யாழ். போதனா வைத்திய சாலைகளில் செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இரண்டு மணிக்கு சத்திர சிகிச்சை நடை பெறுகிறது. முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்திய சாலையில் ஒவ்வொரு மூன்றாவது வியாழக் கிழமையும், காலை எட்டு மணிக்கு எங்களுடைய கிளினிக் (Clinic) நடை பெறுகிறது. அவர்கள் நேரடியாக வந்து வெற்றி காண சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இது மட்டும் இல்லை. அழகு படுத்தும் சத்திர சிகிச்சைகளை, நாங்கள் செய்கின்றோம் என்று சொன்னால், நாங்கள் தலை மயிர் உதிர்தல், தலை மயிர்களை நடுவதற்குரிய வசதிகள், மூக்கு சொத்தியாக இருத்தல், வயது போன முகங்களில் இருக்கும் சுருக்கங்களை அகற்றுதல் மற்றும் மார்பகங்கள், வயிறு, கொழுப்பை உறிஞ்சி எடுத்தல், மாற்று பாலின சத்திர சிகிச்சை (ஆண்களை பெண்கள் ஆக்குதல். பெண்களை ஆண்கள் ஆக்குதல்) போன்ற வசதிகளை தனியார் வைத்திய சேவை யாகவும் (Private sector) செய்து வருகிறோம்.

கேள்வி:
வைத்தியத் துறையில் சேவையாற்றி வரும் உங்களின் எதிர்கால இலட்சியம் என்ன?
பதில்:
நான் இந்தியாவிலே கோயம்புத்தூர் கங்கா மற்றும் அரவிந் கண் வைத்திய சாலையில் என்னுடைய பயிற்சியை மேற் கொள்ளும் போது, அங்கு நான் கவனித்தது என்னவென்றால் அவர்கள் அதிகளவான மக்களுக்கு சத்திர சிகிச்சைகளை வழங்கி அவர்களை மீண்டும் தங்களுடைய தொழிலை செய்ய வைப்பதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டி யெழுப்புகிறார்கள். அதே போல எங்களுடைய பகுதியிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தீக்காயங்களால், வாள் வெட்டு களால், வீதி விபத்துக்களால் பாதிக்கப்பட்டு அதிகளவான மக்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நாங்கள் உலகத்தரம் வாய்ந்த சத்திர சிகிச்சைகளை உரிய முறையில் குறைந்த செலவில் வழங்கி அவர்களை மீண்டும் சமுதாயத்தில் தங்களுடைய தொழிலை செய்ய வைப்பதன் மூலம் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பார்த்து நாட்டினுடைய பொருளா தாரத்தையும் கட்டி எழுப்புவதே எங்களுடைய நோக்கம்.

சிகிச்சை வழங்குவதற்கு வேறு எங்கும் இருந்தும் யாரும் வரப்போவ தில்லை. நாங்கள் தான் அதைச் செய்ய வேண்டும். இந்தத் திட்டம் வன்னிப் பகுதிக்கு மிகவும் சிறந்தது. இதனைச் செய்வது தான் என்னுடைய இலட்சியம். இது தான் என்னுடைய கனவு இவ்வாறு செய்தால் உலகமே எங்களைத் தேடி வரும்.

ஏனென்றால், பிளாஸ்ரிக் அறுவைச் சிகிச்சை என்பது, வெளி நாடுகளில் வசதிகள் இருந்தும் சிறப்பானதாக இல்லை. ஆனால் இங்கு தரம் வாய்ந்த பாதுகாப்பான சத்திர சிகிச்சை வசதிகளை நாங்கள் சிறந்த முறையில் கொடுக்கக் கூடியதாக இருக்கும். அதே நேரம் எங்கள் உறவுகளுக்கு வேலை வாய்ப்புக் களையும் கொடுக்கக் கூடியதாக இருக்கும். இதுதான் என்னுடைய இலட்சியம் இதனை நோக்கி தான் நாம் சென்று கொண்டிருக் கின்றோம். நிச்சயமாக இதனை செய்வோம் என்றார்.

சிதைக்கப்படும் தமிழர் தாயகமும் அச்சுறுத்தப்படும் தமிழ்த்தேசியமும்
இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்தும், நீதி கிடைக்காத இனப்படுகொலை