இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்தும், நீதி கிடைக்காத இனப்படுகொலை

நீதி கிடைக்காத இனப்படுகொலை
ஜுலை 9 ஆம் நாள் யாழ். நவாலி சென் பீற்றஸ் தேவாலயப் படு கொலையின்  26ஆவது ஆண்டு நினைவாக, எமது 138ஆவது மின்னிதழில் வெளியாகிய சிறப்புக் கட்டுரை.
இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்தும், நீதி கிடைக்காத இனப்படுகொலை
– வேல்ஸ் இல் இருந்து அருஸ்

தமிழ் மக்களுக்கான தீர்வைத் தருவேன் என்று கூறிக் கொண்டு, இலங்கையின் அரச தலைவராகப் பதவியேற்றார் சந்திரிக்கா குமாரணதுங்க. ஆனால் பௌத்த பேரினவாதத்தைக் கடந்து அவராலும் வெளிவர முடியவில்லை. கணவனும், தந்தையும் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகியதால், போரை வெறுக்கிறேன் என்றவர், பின்னர் சமாதானத்திற்கான போரை நடத்துகிறேன் என்ற போர்வையில் முழு அளவிலான இனஅழிப்புப் போரை நிகழ்த்தினார்.

யாழ். குடாநாட்டைக் கைப்பற்றுவதே அவரின் பிரதான நோக்கம், மக்கள் செறிந்து வாழும் குடாநாடு மீதான படை நடவடிக்கை மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொண்டே போரைத் தொடர்ந்தார்.

முன்னோக்கிப் பாய்தல் என்ற படை நடவடிக்கை ஜுலை 9 ஆம் நாள் ஆரம்பமாகியது. மக்கள் குடியிருப்பை நோக்கி சரமாரியான எறிகணை வீச்சுக்களுடன் படையினர் நகர்ந்தனர்.

பொன்னாலை தொடக்கம் சண்டிலிப்பாய் வரையில் பிறை வடிவில் நகர்ந்த படையினருக்கு ஆதரவாக வலிகாமம் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி 81 மி.மீ மற்றும் 120 மி.மீ எறிகணைகள் சரமாரியாக வீசப்பட்டன. பெருமளவான எறிகணைகள் பிரதான வீதிகளை நோக்கி வீசப்பட்டதால், படை நடவடிக்கையால் இடம் பெயர்ந்து வீதிகளால் சென்ற பெருமளவான மக்கள் கொல்லப்பட்டனர்.

இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்தும், நீதி கிடைக்காத இனப்படுகொலை

எமது வீட்டுக்கு முன்னால் வீழ்ந்த எறிகணையிலும் மர நிழலின் கீழ் ஓய்வெடுத்த, இடம் பெயர்ந்த குடும்பம் ஒன்றின் உறுப்பினர்கள் படுகாயமடைந்திருந்தனர். இந்த நிலையில் தான் நவாலிப் பகுதி மக்களும் இடம்பெயர்ந்து செல்ல ஆரம்பித்தோம். வட்டுக்கோட்டை, சங்கரத்தை, சங்கானை, பண்டத்தரிப்பு என பல பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்த பெருமளவான மக்கள், நவாலி சென். பீற்றஸ் ஆலயத்திலும், அதனை அண்டிய முருகமூர்த்தி ஆலயத்திலும் தஞ்சமடைந்திருந்தனர்.

இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவும் பணிகளை அந்தப் பகுதி மக்களும், கிராம அதிகாரிகளும் மேற் கொண்டிருந்தனர். ஆனால் பிரதான வீதிகளைக் குறி வைத்து எறிகணைகளை ஏவிய சிறீலங்கா அரசு, தனது வான்படையின் விமானங்கள் மூலமும் தாக்குதல்களை மேற் கொள்ள ஆரம்பித்திருந்தது.

இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்தும், நீதி கிடைக்காத இனப்படுகொலை
விமானத்தாக்குதலில் அழிக்கப்பட்ட நவாலித் தேவாலயம்

மாலை 5 மணியளவில் திடீரென வானில் தோன்றிய 3 புக்காரா விமானங்கள் மக்கள் செறிந்து தங்கியிருந்த தேவாலயத்தின் மீதும், பிரதான வீதியிலும் சரமாரியாகக் குண்டுகளை வீசின. இந்தக் குண்டு வீச்சுக்களை எதிர் பார்க்காத மக்கள், பாதுகாப்புத் தேடி ஒடுவதற்கு முன்னரே அந்தப் பகுதி புகை மண்டலமாகக் காட்சி அளித்ததுடன், மக்களின் கதறல் சத்தங்களும் அந்தப் பகுதியை அதிர வைத்தது.

குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 140 இற்கும் மேற்பட்டவர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், 400 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருந்தனர். கொல்லப் பட்டவர்களில் 40 இற்கு மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவிகளை வழங்கியவர்கள். எனது நண்பியும் கிராம சேவகருமான கேமலதா மற்றும் அவரின் சகோதரரும் கொல்லப் பட்டிருந்தனர். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அதனை உறுதிப் படுத்திய போதும், அதன் வதிவிடப் பிரதிநிதியை அழைத்து கருத்தை மீளப் பெறுமாறு மிரட்டியிருந்தார் இலங்கையின் அன்றைய வெளி விவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர்.

உண்மைகளை மறைத்த இலங்கை அரசு, தகவல்கள் வெளி நாடுகளை அடையாமல் தடுத்ததுடன், விடுதலைப் புலிகளின் எறிகணைகள் தான் அதற்குக் காரணம் எனவும் பொய் உரைத்திருந்தது. பிரான்ஸ் நாட்டில் அரசியலில் டிப்ளோமா பட்டம் பெற்ற ஒரு முற்போக்குவாதி எனக் கூறப்பட்டவர் வழமைபோல சிங்களச் சிப்பாய்களைப் பாதுகாக்க முற்பட்டார்.

யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல்
விமானத்தாக்குதலில் அழிக்கப்பட்ட நவாலித் தேவாலயம்

உலக நாடுகளை இந்தச் செய்தி அடைந்த போதும், யாரும் அதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளவில்லை. பூகோள அரசியல், நாடுகளின் நலன்சார் அரசியல் மற்றும் வர்த்தக நலன்கள் போன்றவற்றை முதன்மைப் படுத்தி, இந்த அவலத்தைக் கடந்து போகவே அவர்கள் முற்பட்டனர்.

தமிழ் மக்கள் மீது போர்க் குற்றங்களையோ, மனித உரிமை மீறல்களையோ அல்லது இனப் படுகொலையையோ மேற் கொண்ட எந்த ஒரு சிப்பாயும் தண்டிக்கப்பட மாட்டார் என்ற இலங்கை அரசின் கொள்கையைச் சந்திரிக்காவும் கடைப் பிடித்தார்.

ஒருவேளை உலக நாடுகளை ஏமாற்ற குண்டுகளை வீசிய விமானத்தின் விமானி மீது விசாரணை மேற்கொள்ளப் பட்டிருந்தாலும், இப்போது மிருசுவில் இனப் படுகொலையாளி ரத்நாயக்கா விடுதலை செய்யப்பட்டது போல அவரையும் இலங்கை அரசு விடுதலை செய்திருக்கும்.

தமிழருக்கான நீதி என்பது அவர்களாகவே தேடிக் கொள்ள வேண்டும் என்ற நிலை ஒன்று ஏற்பட்டபோது தான், நீதியைப் பாதுகாப்பதற்காகத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தினர் என்பதை இலங்கை அரசின் இனப் படுகொலைகள் ஒவ்வொரு தடவையும் உறுதிப்படுத்துவது உண்டு. நவாலி தேவாலய படுகொலையும் அதனைத் தான் எமக்கு எடுத்துக் கூறியிருந்தது.

இந்தப் படுகொலை தொடர்பில் உலகில் உள்ள மனித உரிமை அமைப்புக்களோ, அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான பிரிவோ அல்லது உலகில் தம்மை மிகப்பெரும் ஜனநாயக நாடுகளாகக் கூறிக் கொள்ளும் நாடுகளோ எந்த நடவடிக்கையையும் மேற் கொள்ளவில்லை. இப்போது கூட இந்தப் படுகொலை குறித்த பதிவுகளும் அவர்களிடம் இருக்கின்றதா என்பதே சந்தேகம் தான்.

தண்டனையில் இருந்து தப்பும் போது தான் குற்றங்களும் அதிகமாகும். இலங்கை அரசு நீதி வழங்கும் என்பதை விடுத்து, நாமாகவே குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்ற நிலைதான் மீண்டும் தமிழர் தரப்புக்கு ஏற்பட்டது. இலங்கை அரசின் இந்த இனப் படுகொலை நிகழ்ந்து ஒரு சில தினங்களுக்குள் அதே புக்காரா விமானம் வலிகாமம் பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டது.

குற்றம் இழைத்த விமானிக்கான தண்டனையை சாம்-7 ஏவுகணை வழங்கியது. அதன் பின்னர் புக்காரா விமானம் தாழ்வாகப் பறந்து, மக்களைப் படுகொலை செய்வதற்கு அஞ்சியது. விமானியின் தந்தை இலங்கை அரசிற்கு எதிராகக் கொதித்து எழுந்தார்.

இந்தப் படுகொலை இடம்பெற்று இன்று 26 ஆண்டுகள் கடந்துள்ளன. ஆனால் அதற்கான விசாரணையோ, அதில் பாதிக்கப் பட்டவர்களுக்கான நீதியோ இன்று வரை வழங்கப் படவில்லை.

பாதுகாப்புத் தேடி ஆலயங்களில் தஞ்சமடையுமாறு இலங்கைப் படையினரே அறிவித்ததாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. ஆனால் அந்த ஆலயங்களில் வைத்தே மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தமது உறவுகளின் உயிர் பிரிந்த இடத்தில் ஒவ்வொரு வருடமும் சென்று கண்ணீருடன் அவர்களை நினைவு கூர்ந்து வருகின்றனர் அதில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள். ஆனால் விடுதலைப் புலிகளால் இந்தக் குற்றத்தை இழைத்த விமானி ஒருவருக்குத் தண்டனை வழங்கப் பட்டதே தவிர, அதற்குப் பொறுப்பானவர்கள் யாரும் இதுவரை தண்டனை பெறவில்லை என்பது தான் வரலாறு.

சிதைக்கப்படும் தமிழர் தாயகமும் அச்சுறுத்தப்படும் தமிழ்த்தேசியமும்

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்தும், நீதி கிடைக்காத இனப்படுகொலை