நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அதற்குத் தூண்டுகோலாக இருந்த 734 கைதிகள் உடனடியாகப் பாதுகாப்பான முறையில் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட உரை ஆற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த அமைச்சர், கைதிகள் இரும்பு நுழைவாயிலை உடைத்துக் கொண்டு வெளியேற முற்பட்ட வேளையிலேயே நிலைமையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குறிப்பிட்டார்.
உயிரிழந்தவர்களின் மரணத்திற்கான துல்லியமான காரணங்கள் பிரேத பரிசோதனை அறிக்கையின் பின்னரே தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
சிறைச்சாலைகளில் நிலவும் அதிகப்படியான நெரிசலே இவ்வாறான வன்முறைகளுக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், 10,000 பேர் இருக்க வேண்டிய சிறைகளில் தற்போது 29,000 க்கும் அதிகமான கைதிகள் உள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கு 2022ஆம் ஆண்டு போதைப்பொருள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தமே முக்கிய காரணம் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
அந்த திருத்தத்தின் மூலம் பிணை கோரும் அதிகாரம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், ஒரு கைதி பிணை பெறுவதற்கு ஒன்றரை வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
இந்தத் தாமதத்தைத் தவிர்ப்பதற்காக, தூய எடையைக் கணக்கிடாமல் போதைப்பொருளின் மொத்த எடையை அடிப்படையாகக் கொண்டு, பிணை வழங்கும் அதிகாரத்தை மீண்டும் மேல் நீதிமன்றங்களுக்கு வழங்கும் புதிய சட்டத்திருத்தம் இன்னும் ஒன்றரை மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
சிறைச்சாலைத் துறை மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நிலவும் கடுமையான ஆளணிப் பற்றாக்குறை குறித்தும் அமைச்சர் கவலை வெளியிட்டார்.
சிறைச்சாலைகளில் 1,348 வெற்றிடங்கள் நிலவியதாகவும், தற்போது தற்காலிகமாக 401 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், அனுபவம் வாய்ந்த அதிகாரிகளின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக, சிறைச்சாலை மற்றும் சட்ட வரைபுத் திணைக்களங்களின் ஓய்வு பெறும் வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்த நீதி அமைச்சர், எதிர்காலத்தில் இவ்வாறான பேரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று தெரிவித்தார்.



