திருகோணமலை: கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்!

கிண்ணியா நகர சபை குட்பட்ட சின்னத் தோட்டப் பிரதேச மக்களின் இந்து மயானப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (07) கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் கிண்ணியா நகர சபையினால் சின்னத் தோட்டம் பகுதியில் பயன்படுத்தப்பட்டு வரும் கழிவு முகாமைத்துவத் தளத்தை உடனடியாக அவ்விடத்திலிருந்து அகற்ற வேண்டும் எனவும், குப்பைகளைக் கொட்டுவதற்கு மாற்று இடமொன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக இங்கு கழிவுகள் கொட்டப்படுவதனால், ஆலங்கேணி, சின்னத் தோட்டம், பாரதிபுரம், கடலூர் மற்றும் இடிமன் ஆகிய கிராம மக்கள் பயன்படுத்தும் பிரதான இந்து மயானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

இங்கு கொட்டப்படும் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், குப்பைகள் நாலாபுறமும் விசிறி அடிக்கப்படுகின்றன. மேலும், பறவைகள் இக்கழிவுகளை குடியிருப்புப் பகுதிகளுக்குள் கொண்டு வந்து போடுவதால் சுற்றுப்புறச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, குப்பைகளால் கவரப்படும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இறந்தவர்களின் சடலங்களை நிம்மதியாக அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டிலிருந்து இதற்கான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம், ஆனால் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை” என்றனர்.