சாவகச்சேரி நகர சபையின் உபதவிசாளரை சபையின் உறுப்புரிமையிலிருந்து நீக்கி, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் ஞானப்பிரகாசம் கிஷோர் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை ஆராய்ந்த வடக்கு மாகாண மேல்நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு இடைக்காலத் தடை உத்தரவை வழங்க மறுத்துள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் 06ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக ஆளுநர் தன்னை பதவி நீக்கம் செய்திருந்தமைக்கு எதிராக உபதவிசாளர் கிஷோர், வடக்கு மாகாண மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்
தனிநபர் விசாரணை அதிகாரி க.அரியநாயகத்தின் அறிக்கை, சாவகச்சேரி நகர சபை முழுவதையும் கலைக்குமாறு பரிந்துரைத்திருந்த போதிலும், அதனை மீறித் தன்னை மட்டும் ஆளுநர் பதவி நீக்கியது ஏன்? என்ற கேள்வியையும், சபை நடுவே வணிகர்களின் நலனுக்காகத் தான் பேசிய கருத்துரிமை மீறப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி, இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த மனு இடைக்காலத் தடை உத்தரவுக்காக நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முறைப்பாட்டாளர் சார்பில் மிக நீண்ட நேரம் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.
கிஷோருக்கு எதிராக எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை என்பதும், 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் போர்க்காலத்தில் கட்டப்பட்டு இணக்கச் சான்றிதழ் பெறப்படாத கட்டடங்களைக் கொண்ட பெரும்பாலான வர்த்தகர்கள் சாவகச்சேரியில் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தினாலேயே, இணக்கச் சான்றிதழைக் கட்டாயப்படுத்தக் கூடாது என நகர சபை கூட்டத்தில் அவர் உரையாற்றியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
நகர சபை கட்டளைச் சட்டத்திற்கு உட்பட்டு ஆற்றப்பட்ட இந்த உரையின் காரணமாக அவரை நீக்கியது சனநாயகப் படுகொலை என்றும், நகர சபை அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
மனுதாரர் தரப்பின் நீண்ட வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி, எதிர்மனுதாரர்களான ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர், தனிநபர் விசாரணை அதிகாரி உள்ளிட்டோருக்கு அறிவித்தல் அனுப்ப இணங்கினார்.
எனினும் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு, இடைக்காலத் தடை உத்தரவை வழங்க மறுத்து விட்டார்.



