சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகைகள், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் மூவரில் ஒவ்வொருவரையும் தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு தனிநபர் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்தோடு பிரதிவாதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து வெளிநாட்டுப் பயணத்தடையையும் நீதிபதி விதித்துள்ளார்.

மேலும், பிரதிவாதிகளின் கைரேகைகளைப் பெற்று அது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு, மேலதிக விசாரணைகளுக்காக ஓகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதிவாதிகள் தங்களது அதிகாரப்பூர்வ செல்வாக்கைப் பயன்படுத்தி இழப்பீட்டுப் பணியகத்தின் சில அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து 8.85 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டதாகவும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.