இலங்கை விவகாரங்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக, சென்னையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பாரிமைந்தன் தலைமையிலான தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பினருக்கும், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம், ‘தீர்வு’ என்ற பெயரில் ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான சதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், இதனைத் தடுப்பதற்கு தமிழகம் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தமிழ் தேசிய பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய மத்திய அரசின் ஊடாக, இலங்கை அரசு மீது அழுத்தங்களைக் கொடுத்து, ‘ஏக்கிய ராஜ்ய’ அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்கான அவசரத் தேவை குறித்தும் இங்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழர்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக, தமிழர்களின் தேசம், இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டித் தீர்வை அடைவதற்கு ஏற்ற அரசியலமைப்பைக் கொண்டுவர அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுடன், செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட 427 என்புக்கூடுகளை ஆதாரமாகக் கொண்டு, இலங்கை அரசு உண்மைகளைத் திரிபுப்படுத்துவதைத் தடுத்து, உடனடி சர்வதேச விசாரணைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தக் கலந்துரையாடலின்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்திய மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தியாவில் வசிக்கும் ஈழ அகதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் தேசிய பேரவையினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



