இலங்கையில் தொடரும் சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் 9 சர்வதேச அமைப்புகள் கூட்டாக அழுத்தம்

இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் மற்றும் மனித உரிமைகள் மீறல்களைக் கட்டுப்படுத்த, சர்வதேச நாடுகள் சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் 30-ஆவது உறுப்புரையை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஒன்பது சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கூட்டறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளன.

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஆசிய மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான பேரவை உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

1994-ஆம் ஆண்டு முதல் இலங்கை சித்திரவதைகளுக்கு எதிரான உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்தாலும், 1979-ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் இலக்கு வைக்கப்படுவதாக இந்த அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

குறிப்பாக, பலவந்தமாகக் கைதுசெய்தல், தடுத்துவைத்தல் மற்றும் வலிந்து காணாமலாக்குதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்வதாக அவை சுட்டிக்காட்டுகின்றன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்டமை சித்திரவதைக்குச் சமமான செயல் என ஐ.நா விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

அத்துடன், 2016-ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் 2024-ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை ஆகியன, வடக்கு பகுதிகளில் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் போர்க்காலக் குற்றவாளிகளைப் பாதுகாத்து வருவதால், தண்டனையிலிருந்து விடுபடும் கலாசாரம் வேரூன்றிவிட்டதாக இந்த அமைப்புகள் குறிப்பிடுகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டு ரீதியில் நீதி கிடைப்பதில் பாரிய சிக்கல்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை ‘ரோம் சாசனத்தில்’ கையெழுத்திடாததால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் கொண்டுவருவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிப்படுத்த சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றே சிறந்த தீர்வாக அமையும் என இந்த ஒன்பது சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.