ஐக்கிய இராச்சியம் 23.06.2016ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான மக்களாணையைப் பெற்று பத்தாவது ஆண்டு கடந்த வாரம் 23.06. 2026 ம் நாளில் நிறைவு பெற்றது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்னும் இம் முடிவுக்கு கொன்சேர்வேடிவ் கட்சியினரும் அதிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்த நைஜல் பரேக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியாவின் வகிபாகம் குறித்த உண்மை நிலையினைத் தங்கள் அரசியல் இலாபத்திற்காகத் திட்டமிட்ட முறையில் திரித்து மக்களிடை பிரித்தானிய தேசிய உணர்ச்சியை எழவைத்ததின் விளைவு எனவும் இதனால் ஐக்கிய இராச்சியத்தின் அரச உறுதித்தன்மை பலமாகப் பாதிக்கப்படும். எனவும் உலக அரசியல் ஆய்வாளர்களின் அக்கால எதிர்வு கூறலாக இருந்தது. அரசியலில் உணர்ச்சி அடையாளப்படுத்தலுக்கு அவசியம். ஆனால் இதனையே அரசியலாக்கினால் அது சமகால சமுக பொருளாதார அரசியல் மாற்றங்களை அறிந்து அதற்கேற்ப நாளாந்த வாழ்வை வாழ்வதில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதனை இலக்கு இதன்வழியாக ஈழத்தமிழருக்கும் எடுத்துரைக்க விரும்புகிறது.
பிரிக்ஸிட்டால் பிரித்தானியா அரசியல் உறுதித்தன்மையையும் பொருளாதார பலத்தையும் இழந்து மத்திய சக்தியாகவும் மாறி வருகின்றது என்பதை உறுதி செய்யும் வகையில் கொன்சேர்வேடிவ்கட்சியின் பிரதமர்கள் திரேசா மே 2016 முதல் 2019 வரை, பொறிஸ் ஜோண்சன் 2019 முதல் 2022 வரை, எலிசபேத் ருஸ் 2022 இலும், ரிசி சுனக் 2022 முதல் 2024 என ஐவரும் 2024.ல் கொன்சேர்வேடிவ்கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சியை 411 பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிபலத்துடன் முடிவுக்குக் கொண்டு வந்த லேபர் கட்சியின் பிரதமர் கெயர் ஸ்ராமர் 2026 வரையுமென ஆறு ஆற்றலும் அரசியல் அனுபவமும் ராஜதந்திரமும் உள்ள பிரதமர்கள் குறித்த காலம் முடியும் வரை பதவி வகிக்காது விட்டு விலகி இன்று 7 வது பிரதமருக்கான வேட்பு மனுவை லேபர் கட்சியில் வடக்கின் அரசன் என அவரது அரசியலாற்றலுக்காக வர்ணிக்கப்பட்டு வரும் அன்ரி பேனம் தாக்கல் செய்யவுள்ளார்.
இவர் பெரும்பாலும் போட்டியின்றி அல்லது யாராவது போட்டியிட்டாலும் இவரை வெல்ல இயலாதென்ற நிலையில் ஐக்கிய இராச்சியத்தின் 7 வது பிரதமராகப் பதவியேற்பார் என்பதால் தற்போதைய பிரதமர் கெயர் ஸ்ராமர் இலகுவான முறையில் அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்கக் கூடிய முறையில் அவரை 10 டவுனிங் ஸ்ரீட்டுக்கே அழைத்து அதிகார கைமாறுதலுக்கான நேரடி வேலைகளையே கடந்த வாரத்தில் முன்னெடுக்கத் தொடங்கிவிட்டார். ஆயினும் உலகின் பாராளுமன்றங்களின் தாய் என் புகழ்பெற்ற வெஸ்ட மினிஸ்ரர் பாராளுமன்ற 300 ஆண்டுகால வரலாற்றை ஆய்வு செய்தவரான அந்தனி செல்டன் (Anthony Seldon) நடைமுறைப்படுத்த இயலாத அலுவலகம் (The Impossible office) என்ற நூலின் ஆசிரியர் குறிப்பிட்ட 17ம் நூற் றாண்டில் 1760 -1770 களிலும் 18ம் நூற்றாண்டில் 1827 – 1837 க்கும் இடையில் இருந்தது போன்ற இயலாத்தன்மை தற்போது ஐக்கிய இராச்சிய பிரதமர் அலுவலகத்துக்கு ஏற்பட்டு விட்டதா? ஏன் ஆறு ஆண்டுகளில் ஏழு பிரதமர் என்ற நிலையேற்பட்டு எதனையும் உறுதியாகத் தொடர இயலாத உறுதியற்ற அரசாகப் பிரித்தானிய அரசு திகழ்கிறது என்பதே இன்றுள்ள கேள்வி. இதற்கான சுருக்கமான பதில்தான் மக்கள் இறைமைக்கு முன்னுரிமை கொடுக்கப்படாத நேரங்களில் எல்லாம் அரசு உறுதியற்றதாகும் என்பதாக உள்ளது. ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் 2009க்குப் பின்னர் கட்நத 17 ஆண்டுகளில் ஈழத்தமிழர்களின் இறைமைக்கு முன்னுரிமை கொடுக்காத அரசியலை முன்னெடுப்பதே இன்றைய ஈழத்தமிழரின் கையாலாகாத அரசியலுக்குக் காரணமாகிறது என்பதை இலக்கு நினைவுறுத்த விரும்புகிறது.
இதே நிலைதான் அமெரிக்காவிலும் கடந்தவாரம் அமெரிக்க செனட் 50க்கு 48 என்ற வாக்களிப்பின் வழி அமெரிக்க அரச அதிபர் டொனால்ட்ட்ரம்ப் அவர்களின் ஈரான் போர் குறித்த முடிவுகளை மட்டுப்படுத்தியுள்ளது.ட்ரம்ப் அவர்களின் கட்சியினர் செனட் வாக்களிப்பு அன்று வராததினால் இந்த நிலை வந்தது என்று அளிக்கப்படும் விளக்கமும் மக்கள் இறைமைக்கு முன்னுரிமை கொடுக்கப்படாத பொழுது இத்தகைய நிலைகளே ஏற்படும் என்பதனை மீள் உறுதி செய்கிறது.
இலங்கைத் தீவில் தான் ஈழத்தமிழரின் மக்கள் இறைமைக்கு முன்னரிமை கொடுக்காது மூத்த குடிக ளும் இலங்கைத் தீவில் வரலாற்றக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழும் ஈழத்தமிழினத்தை இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இன அழிப்பு மூலம் அவர்களின் இறைமையை ஒடுக்கி அவர்களின் நிலத்தைக் கடலை தமதாக்கும் அரசியலை தொடங்கி உலகிற்கு இத்தகைய அரசியல் மாற்றத்திற்கு வழிகாட்டினர் என்பது வரலாறு
கடந்த வாரத்தில் கூட இந்நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சிறீலங்காவில் ஈழத்தமிழர்களின் மக்கள் இறைமைக்கு முன்னுரிமையினை பிரித்தானிய காலனித்துவ ஆட்சி விலகிய காலம் முதலாக இன்று வரை கொடுக்காத சிங்களப் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் 1979 முதல் ஈழத்தமிழர்களை ஒடுக்கத் தாங்களே இயற்றி 47 ஆண்டுகாலப் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் இப்பொழுது அவர்களின் மேலும் விரிவுபெற்றவுடன் அதனைக் கண்டிப்பதுடன் அதனை ரத்து செய்ய வேண்டுமெனக் குரல் எழுப்புவதையும் இந்தப் பின்னணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரதமர் சனாதிபதி ஆகியோரிடம் இருந்தும் இந்த வருடத்துள் ரத்து செய்யப்படும் என்னும் பேச்சுக்கள் எழுவதும் கடந்த வார நிகழ்வுகள். ஆயினும் இது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் அதற்கு எதிரான சனநாயக எதிர்ப்பு போராட்டங்களை கூட ஒடுக்கும் மக்கள் இறைமைக்கு முன்னுரிமை கொடுக்காத பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாக மறு தோற்றம் பெறும் என்பதே ஆய்வாளர்களின் எதிர்வு கூறலாக உள்ளது.
சட்டவாக்கம் சட்ட அமுலாக்கத்தில் மட்டுமல்ல நிர்வாகத்திலும் இன்றும் ஈழத்தமிழரின் மக்கள் இறைமை ஒடுக்கம் தொடர்கிறது. கடந்த வாரத்தில் உள்ளுராட்சி சபைகளுக்குச் சிறிலங்கா அரசியலமைப்பு சட்ட 9வது அட்டவணையில் நிரல் 1இல் மாகாணசபைகளுக்கென ஒதுக்கப்பட்டுப் பகிரப்பட்ட உள்ளூராட்சி அதிகாரங்கள் தொடர்பான விடயங்களளை மத்திய அதிகாரசபையிடமே மீளவும் கொண்டு செல்லும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின். புதிய சுற்றுச் சூழல் சட்டம் அமைந்துள்ளது. இதனை உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் கடந்த வாரத்தில் நல்லூர் பிரதேச சபையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் எவ்வாறு வழக்குகளை மத்திய அதிகாரசபை உள்ளூராட்சி மன்றங்கள் மேல் திணித்து அவற்றை நீதிமன்றங்களில் நிறுத்தி அவற்றின் செயல்பாட்டை உருக்குலைக்கலாம் என்பதனை விளக்கி தேசிய மக்கள் சக்தியின் இந்த மத்தியை நோக்கி அதிகாரத்தை மீளவும் குவிக்கும் செயற்பாட்டை அனுமதிக்கக் கூடாது என்பதனைச் சிறப்பான முறையில் விளக்கியுள்ளார்.
மக்கள் இறைமைக்கு முன்னுரிமை கொடுக்கப்படாமை அரசியலில் மட்டுமல்ல இன்றைய உலகின் காலநிலை சீர்கேடுகளுக்கும் மூலகாரணமாகிறது. இலண்டன் கிளைமட் அக்சன் வீக்கின் நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் காலநிலை மாற்றம் மற்றும் சக்தி வளப் பாதுகாப்பின்மை ஒன்றோடொன்று தொடர்புடையன என அதனை எதிர்கொள்வதற்கான அழைப்பையும் அவசர அழைப்பாக விடுத்துள்ளார். இதே நேரம் எல் நினோ தாக்கத்தில் இருந்து தப்பிக்கப் பாரம்பரிய விவசாயத்துக்குப் பதிலாக புதிய முறைக்கு மாற வேண்டுமென சிறிலங்காவின் விவசாயப் பணிப்பாளர் நாயகம் முனைவர் துஷரா விக்ரம ஆராய்ச்சியும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புலம்பெயர் ஈழத்தமிழர்கள் 22.05. 1972 முதல் அரசற்ற தேச மக்களாகவுள்ள தங்களின் தாயகமக்களின் உலகக் குரலாக மட்டுமல்ல அவர்களுக்கான சமுக பொருளாதார அரசியல் பாதுகாப்புக்களை உலக மக்களைக் கொண்டு அவர்களின் அரசாங்கங்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டிய வரலாற்றுப் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை மீள் நினைவுபடுத்தும் இலக்கு இவற்றுக்கான எதிர்வினைகளை சனநாயக முறையில் திட்டமிடல் செயலணிகளை உருவாக்குதல் அவற்றுக்கான மதி நிதி வளங்களுக்கு அனைத்துலகிலும் உள்ள ஈழத்தமிழர்களையும் அவர்கள் வாழும் நாடுகளின் வளவாளர்களையும் முதலீட்டாளர்களையும் இணைத்தல் என்கிற செயற்திட்டங்களைச் செய்வதற்கான வலிமை பெற்றாலே ஈழத்தமிழர் தாயக மக்களின் சிறிலங்கா அரசாங்கத்தில் தங்கி வாழும் வாழ்வியல் தன்மைகள் மாறும் என்பதே நடைமுறை உண்மையாகவுள்ளது என்பதை இலக்கு இவ்வாரத்தில் வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
ஆசிரியர்




