இலங்கைக்கும் அமெரிக்காவும் இடையில் முட்டி மோதல்கள் நீளுகின்ற விடயத்தினை கடந்தவாரம் வழங்கியிருந்த நிலையில் கடந்த நாட்களில் அமெரிக்கா ஏறக்குறைய இலங்கையை தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மிகத் தீவிரப்படுத்தியுள் ளமை வெளிப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடம், கடந்த ஜூன் 16ஆம் திகதி மீண்டும் பழையபடி ‘பசுபிக் கட்டளைப் பீடம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட அடுத்த சில தினங்களிலேயே, அதன் வான்படைகளின் தளபதி ஜெனரல் கெவின் சினைடர் மற்றும் தெற்கு, மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் போல் கபூர் ஆகிய இரு முக்கிய உயர் அதிகாரிகள் ஒரே நேரத்தில் இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயமானது தெற்காசியப் பிராந்திய அரசியல் பரப்பில் மிக ஆழமான புவிசார் விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.
1947ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ருமனால் உருவாக்கப்பட்ட இக்கட்டளைப்பீடம், உலக வான் மற்றும் கடல் பரப்பின் பெரும் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், கிட்டத்தட்ட 3 இலட்சத்து 75 ஆயிரம் படையினரையும் 36 நாடுகளையும் உள்ளடக்கிய பிரம்மாண்டமான இராணுவக் கட்டமைப்பாகும்.
2018ஆம் ஆண்டு அப்போதைய பாதுகாப்புச் செய லாளர் ஜிம் மாட்டிஸினால் ‘இந்தோ-பசுபிக்’ என்று மாற்றப் பட்ட இப்பீடத்தை, தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெட்செத் மீண்டும் ‘பசுபிக் கட்டளைப் பீடம்’ என்று மாற்றியுள்ளார்.
இலங்கையின் மேற்குப் பகுதியில் இருந்து ஹவாய் வரையிலான இந்தியப் பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் பிரதேசங்களை உள்ளடக்கிய இந்த இராணுவக் கட்டமைப்பின் வான்படைத் தளபதி ஜெனரல் கெவின் சினைடர் மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் ஆகிய இரு முக்கிய தூண்களின் ஏகநேர வருகையானது தற்செயலானது அல்ல, மாறாக இது இலங்கையைத் தங்களின் பாதுகாப்பு மூலோபாயத்திற்குள் முழுமையாகப் பிணைத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மிக நுட்பமாகக் கையாண்டு வருமொரு ‘மேலிருந்து கீழ் நோக்கிய’ பாதுகாப்பு அணுகுமுறையின் வெளிப்பாடாகும்.
அமெரிக்காவைப் பொறுத்தமட்டில், இலங்கையை வெறும் வர்த்தக அல்லது இராஜதந்திர நட்புறவு மையமாகப் பார்ப்பதை விட, பாதுகாப்பு ரீதியான ஒரு முக்கியமான இராணுவக் கேந்திரமாகவே கையாண்டு வருகிறது.
1980களில் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஆட்சிக்காலத் தில், திருகோணமலையில் அமெரிக்கா தனது படைத் தளத்தை அமைக்கக்கூடும் என்ற ஊகங்களின் அடிப் படையிலேயே இந்தியா இலங்கைக்குள் நேரடியாகத் தலை யிட்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தது.
ஆனால், அப்போது அமெரிக்காவிற்கு அத்தகைய எண்ணம் இருக்கவில்லை என்பது பின்னரே உறுதியானது. எனினும், தற்போது சர்வதேசச் சூழல் முற்றிலும் மாறியுள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய மூலோபாயப் பங்காளிகளாக மாறியுள்ள தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், இந்தியப் பெருங்கடலின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சீனாவின் அசுர வளர்ச்சியை முறியடிப்பதற்கும் இலங்கையைத் தன்வசப்படுத்துவதில் அமெரிக்கா தீவிரமாக இயங்கி வருகிறது.
கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தில் அமெரிக் காவால் வழங்கப்பட்ட 10 மில்லியன் டொலர்கள் பெறுமதி யான ‘சமுத்திரவிஜய’ கப்பல் இலங்கை கடற்படையில் இணைக்கப்பட்டபோது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டும் அவர் வரவில்லை.
இது இரு நாட்டு உறவுகளுக்குள் ஏதோ ஒரு நெருடல் நிலவுகிறதோ என்ற ஊகங்களை சர்வதேச மட்டத்தில் தோற்றுவித்த நிலையில், அந்த ஊகங்களை முற்றிலும் உடைத்தெறியும் நோக்குடனேயே, இராணுவத் தரப்பிலிருந்து ஜெனரல் கெவின் சினைடரும், இராஜதந்திரத் தரப்பிலிருந்து போல் கபூரும் ஒரே நேரத்தில் இலங்கையில் தரையிறங்கித் தங்களின் பலத்தைக் காட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் இந்த அணுகுமுறையானது ஒரே நாளில் நிகழ்ந்ததொன்றல்ல, மாறாக இது மிக நிதானமாகத் திட்டமிடப்பட்டு, ஒரு வலுவான பாதுகாப்பு வலையமைப்பாகத் திரைமறைவில் உருவாக்கப்பட்டு வருகிறது.
2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், பசுபிக் கட்டளைப் பீடத்தின் அன்றைய தளபதி அட்மிரல் ஹரி ஹாரிஸின் இலங்கை விஜயத்துடன் இதற்கான உத்தியோகபூர்வ அடித்தளம் இடப்பட்டது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், சர்வதேச அரங்கிலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கை படையினருக்கு எதிராகப் போர்க்குற்றச்சாட்டுகளும் மனித உரிமை மீறல் விவாதங்களும் தீவிரமாக எழுந்தபோது, அமெரிக்கா இலங்கையுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பைக் குறைத்துக்கொண்டது.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் மாற்றங்களால், அமெரிக்கா தனது கொள்கைகளைத் தளர்த்தி, இலங்கை முப்படைகளுடனும் உயர்ந்தபட்ச நெருக் கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிப்படையான உயர்மட்ட இராஜதந்திரப் பயணங்களைத் தாண்டி, கட்டளையிடும் அதிகாரமற்ற கீழ்நிலை அதிகாரிகள் மட்டத்திலும் தொடர்புகள் பேணப்பட்டு, கூட்டுப் பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் ஒரு வலுவான பாதுகாப்பு வலையமைப்பு திரைமறைவில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு அங்கமாகவே, ரத்மலானை விமானப்படைத் தளத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலை யில், அமெரிக்க அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரி.எச்-57 ‘சீ ரேஞ்சர்’ ரக 10 பல்பயன்பாட்டு ஹெலிகொப்டர்களை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வு கூட்டுப் பிரகடனமாக அரங்கேறியது.
இலங்கையைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவருவதற்கு அமெரிக்கா கையாளும் முதன்மையான தந்திரோபாயம் ‘மூலோபாயக் கொடைகள்’ என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பயன்படுத்தப்பட்டு, பின்னர் கழித்து ஒதுக்கப்பட்ட பழைய கப்பல்களையும் விமானங்களையும் புதுப்பித்து, இலங்கைக் குக் கொடையாக வழங்குவதன் மூலம் இலங்கைத் தரப்பைத் தன் கட்டுப்பாட்டில் அமெரிக்கா வைத்திருக்கிறது.
முன்னர் பெல்-206, பெல்-212, பெல்-414 ஹெலிகொப்டர்கள், சி-130 ரக விமானங்கள் மற்றும் போரின் போது பீச் கிங் விமானம் போன்றவற்றை இலங்கைக்கு விற்பனை செய்த அமெரிக்கா, தற்போது கண்காணிப்பு விமானங்களையும் 10 ஹெலிகொப்டர்களையும் இலவசக் கொடைகளாக அள்ளி வழங்குகிறது.
இந்தக் கொடைகள் வெறும் மனிதாபிமான அடிப் படையிலானவை அல்ல, மாறாக அமெரிக்காவின் பசுபிக் மூலோபாயப் பாதுகாப்பை இலங்கையின் செலவில் உறுதிப்படுத்துவதற்கான உத்திகளாகும்.
கொழும்பு துறைமுகத்தில் கஜபாகு போர்க்கப்ப லைப் பார்வையிட்ட போல் கபூர், இலங்கை கடற்படைக் கப்பல்களுக்கும் தரைத் தளங்களுக்கும் இடையில் தடையற்ற தொடர்பாடலைப் பேணக்கூடிய 4 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ‘ஃப்ளீற் ப்ரோட்பான்ட்’ (Fleet Broadband) அகலப்பட்டை செய்மதி தொடர்பு கருவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
ஏற்கனவே அமெரிக்காவின் உதவியுடன் ராடார் கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ள நிலையில், தற்போதைய செய்மதித் தொடர்பாடல் கட்டமைப்பானது, இலங்கையின் முழுக் கடல் எல்லையையும் அமெரிக்காவின் வான்படை மற்றும் கடற்படை வலையமைப்புடன் பிணைக்கும் ஒரு மூலோபாயப் பொறியாகும்.
அமெரிக்காவின் இந்த அதீத அக்கறைக்கு முக்கிய காரணம், உலகின் பரபரப்பான சர்வதேச வர்த்தகக் கப்பல் பாதைகளின் மையத்தில் இலங்கை அமைந்திருப்பதேயாகும். இலங்கையின் கடல் பரப்பு பாதுகாப்பாக இருக்கும்போதுதான் சர்வதேச வர்த்தகம் தடையின்றி நடக்கும் என்றும், அது அமெரிக்காவிற்கு நேரடியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் போல் கபூர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மூலோபாய நலன்களுக்காகவே கொழும்பு துறைமுகத்தின் மீது அமெரிக்காவின் பார்வை தீவிரமாகப் பதிந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் சீனாவும் இந்தியா வும் தத்தமது முனையங்களைக் கொண்டுள்ள நிலையில், அமெரிக்காவும் அங்கு தனது செல்வாக்கை நிலைநாட்டத் தளமொன்றை எதிர்பார்க்கிறது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தைத் தனியார்மயமாக்க தற்போதைய அரசாங்கம் முற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் பின்னணியில், அமெரிக்க அதிகாரிகளின் தொடர்ச்சியான துறைமுகக் களவிஜயங்கள் பெரும் சந்தேகங்களை எழுப்புகின்றன. தற்போதைய இடதுசாரிப் பின்னணியைக் கொண்ட அரசாங்கத்தைப் பயன்படுத்தி, தங்களின் நீண்ட காலப் பொருளாதார மற்றும் பாதுகாப்பு இலக்குகளை அடைவது இலகுவானதென அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது.
இலங்கையைப் பெரிய நாடான அமெரிக்காவுடன் வர்த்தகச் சமநிலையில் ஒப்பிட முடியாதென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டிய நிலையிலும், அமெரிக்கா கொழும்பு துறைமுகத்தை ஒரு வர்த்தகக் கேந்திரமாக மாற்றித் தனது சொந்தப் பாதுகாப்பை உறுதிப் படுத்தவே முனைகிறது.
எவ்வாறாயினும், அமெரிக்காவின் இத்தகைய இறுக்கமான பாதுகாப்புப் பிணைப்புக்குள்ளும், இராணுவக் கொடைகளுக்குள்ளும் இலங்கை சிக்கிக்கொள்வது, நாட்டின் நீண்டகால நடுநிலையான வெளியுறவுக் கொள் கைக்கும் அணிசேராக் கொள்கைக்கும் கடுமையான சவா லாக உருவெடுத்துள்ளது.
அண்மைய அமெரிக்க-ஈரான் பதற்றங்களின் போது இலங்கை இதனை அனுபவரீதியாக உணர்ந்திருந்தது. காலி துறைமுகத்திற்கு அப்பால் ஈரானின் ‘ஐ.ஆர்.ஐ.எஸ் டேனா’ போர்க்கப்பல் விபத்துக்குள்ளானபோது, அதன் மாலுமிகளை மீட்ட இலங்கை அரசாங்கம், சர்வதேசச் சட்டங்களின்படி நடுநிலையாகச் செயற்படுவதாகக் கூறினா லும், முற்றுமுழுதாக அமெரிக்காவின் வழிகாட்டலின்படியே அவர்களைத் தடுத்து வைத்து ஈரானுக்குத் திருப்பி அனுப்பியது.
இது இலங்கையின் பாரம்பரிய நட்பு நாடான ஈரானுக்குக் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்கா மீண்டும் போரைத் தொடங்கினால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மாத்திரமின்றி, இந்தியப் பெருங்கடல், செங்கடல், அரபிக்கடல் என்று அனைத்துப் பகுதிகளுக்கும் அமெரிக்காவுக்கு எதிரான போரை விரிவுபடுத்துவோமென ஈரானிய உயர் தலைவர் எச்சரித்துள்ள சூழலில், அமெரிக்கா இலங்கையைத் தனது முன்களக் கண்காணிப்புத் தளமாக மாற்ற முயல்கிறது.
ஈரானுடன் போர் மூண்ட காலத்தில் அமெரிக்கப் போர் விமானங்கள் மத்தலவில் தரையிறங்க அனுமதி கோரியதை ஜனாதிபதி அநுரகுமார பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தியிருந்த நிலையில், தற்போதைய அமெரிக்க அதிகாரிகளின் கூட்டு வருகையானது, இலங்கையைத் தங்களின் தற்காப்புக் கேடயமாகத் தொடர்ந்து தக்கவைப் பதற்கான அழுத்தமாகவே பார்க்க முடிகிறது.
பாதுகாப்புப் பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுடன் இடம்பெற்ற சந்திப்புகளில் இணை யப் பாதுகாப்பு, கடல்சார் மற்றும் வான்வழி ஒத்துழைப்புகள் குறித்துப் பேசப்பட்ட அதேவேளை, காலியில் அமெரிக் காவின் மொன்டானா தேசிய காவற்படையின் பங்க ளிப்புடன் இலங்கை முப்படையினருக்கும் சிவில் அதிகாரி களுக்கும் அனர்த்த முகாமைத்துவப் பயிற்சிகளும் வழங்கப் பட்டுள்ளன.
இவ்வாறாக, ஒரேயடியாகப் படைத்தளங்களை அமைக்காமலோ அல்லது உத்தியோகபூர்வ பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளாமலோ, கப்பல்கள், விமானங்கள், தொடர்பாடல் தொழில்நுட்பங்கள், கூட்டுப் பயிற்சிகள் மற்றும் இராஜதந்திரப் பயணங்கள் ஊடாக அமெரிக்கா இலங்கையைத் தனது முழுமையான கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருகிறது.
நவீன போர்முறைமைகள் எல்லைகளுடன் நின்று விடுவதில்லை எனவும், மாறிவரும் நவீன போர்முறைக ளின் தன்மை இந்தோ பசுபிக் பிராந்தியத்தின் பாது காப்பை மறுவடிவமைக்கும் சமச்சீரற்ற சவால்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்தும் ஜெனரல் சினை டர் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாதுகாப்புத்துறை தலைவர்களுடனும் மூலோபாய சிந்தனையாளர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்கா தனது சொந்தத் தற்காப்பிற்காக இலங் கையை ஒரு கேடயமாகப் பயன்படுத்த முற்படும் இச்சூழலில், இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளுடன் சம நிலையான உறவைப் பேண வேண்டிய இலங்கை, அமெரிக்காவின் இந்த ‘மூலோபாயப் பொறிக்குள்’ இருந்து எவ்வாறு வெளியில் வரப்போகின்றது என்பது மில்லியன் டொலர் கேள்வி தான்.



