அரச பணியாளர்களுக்குத் தவணைக்கட்டண அடிப்படையில் அரிசியை வழங்கப்போவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அண்மையில் தெரிவித்த கருத்து, நாடு தழுவிய ரீதியில் பெரும் சர்ச்சையையும் கடுமையான கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர், அரச பணியாளர்களுக்குச் சலுகை விலையில் 20 கிலோ அரிசியை தவணை கட்டண முறையினூடாக சதொச அல்லது கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பானது அரச பணியாளர்களின் கௌரவத்தைச் சிறுமைப்படுத்தும் செயல் என விவசாய அமைப்பு உள்ளிட்ட பல தரப்பினர் கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசாங்க மாற்றத்துக்காகப் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்த அரச பணியாளர்களை, இன்று அரிசியைக் கூட தவணை முறையில் வாங்கும் வறுமை நிலைக்குத் தள்ளியிருப்பது வேதனையளிப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையின் வரலாற்றில் அரிசி போன்ற அத்தியாவசிய உணவு தானியத்தைப் ‘லீசிங்’ அல்லது தவணை முறையில் வழங்க முன்வந்த முதல் வர்த்தக அமைச்சர் என்ற கறையை வசந்த சமரசிங்க தேடிக்கொண்டுள்ளார் என விமர்சகர்கள் சாடியுள்ளனர்.
இத்தகைய செயலின் மூலம் அரச சேவையாளர்களின் கண்ணியம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அமைச்சர் பொறுப்பேற்று உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அழுத்தமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.



