3 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்ட சவுதி பெண் செயற்பாட்டாளர்கள் விடுதலை

சவுதி அரேபியாவில் பெண்களுடைய உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சமர் படாவி மற்றும் நாசிமா அல் சதா ஆகியோர் மூன்றாண்டுகளுக்கு பின்பு விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில் ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் வெளியே செல்லக்கூடாது, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து சமர் படாவி மற்றும் நாசிமா அல் சதா உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கடந்த 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சவுதி அரேபியாவின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியதாக குற்றம்சுமத்தி சமர் படாவி மற்றும் நாசிமா அல் சதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று இவ்விருவரும் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமைக் குழுவான “ALOST’ என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதேபோல் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை வழங்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட லூஜின் அல் ஹத்லால் மூன்றாண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் விடுதலைச் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விடுதலைச் செய்யப்பட்டுள்ள சமர் படாவிதான் சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு அமெரிக்கா அரசு சார்பில் தைரியமான பெண் என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டது.

சமர் படாவின் கணவரும் மனித உரிமை போராளி ஆவார். அவர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நிலையில் தற்போது சிறையில் உள்ளார். அதேபோல் சமர் படாவின் மைத்துனருக்கும் சவுதி அரசு பொதுமக்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து சமூக வலைத்தளத்தில் எழுதியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவருகிறது. அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் பெண்களுக்கு  வாகனம் ஓட்டும் உரிமை சில கட்டுப்பாடுகளுடன் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் சவுதி அரசின் இந்த நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.