உக்ரைனில் இதுவரை 18,000 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் இதுவரை 18,000 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுமார் 80 இலட்சம் பேர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இருதரப்பிலும் தலா ஒரு இலட்சம் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சூழலில் 10 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் போரை நிறுத்த உதவுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அண்மையில் வேண்டுகோள் விடுத்தார்.

இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் நேரிலும் தொலைபேசியிலும் பிரதமர் மோடி பலமுறை பேசியுள்ளார். இப்போதைய நிலையில் உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா தலைமையில் ஓரணியும் ரஷ்யா தலைமையில் எதிரணியும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

நடுநிலைமையுடன் இரு அணிகளுடனும் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் இந்தியாவால் மட்டுமே உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று உலக நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. அண்மையில் ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றது. இதையொட்டி இந்தியாவில் அடுத்தடுத்து பல்வேறு மாநாடுகள் நடைபெற உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரஷ்யா, உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ராஜ்ஜியரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.