ஹெலிகெப்டர் விபத்து – 6 கனடிய படை வீரர்கள் பலி

கிறிஸ் மற்றும் இத்தாலி நாடுகளுக்கிடையில் இடம் பெற்ற ஹெலிகெப்டர் விபத்து ஒன்றில் சிக்கிய ஆறு கனடிய படை வீரர்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் கனேடிய ஆயுதப் படையினர் எப்போதும் ஆபத்தான பணிகளுக்குச் செல்வதால் தான், எஞ்சிய நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றோம்  என தெரிவித்துள்ளார்கள்.

நேற்று ஒட்டாவா மாநகரில் கனடிய ஊடகங்கவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் மேலும் தெரிவிக்கையில்

“மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பாதுகாப்பையும் உறுதித்தன்மையையும் மேம்படுத்தும் Operation Reassurance நடவடிக்கையில் கனடா அதன் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்குகிறது. ஐரோப்பாவில் நேட்டோவின் கூட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்தும் Operation Reassurance இல் கனேடியப் படையினர் 915 பேர் வரை ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டமாக இருந்தாலும், கனடாவின் பங்காளிகளுக்கும் நேச நாடுகளுக்கும் ஆதரவளிப்பதாக இருந்தாலும், உலகம் முழுவதிலும் சமாதான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதாக இருந்தாலும், கனேடிய ஆயுதப் படையினர் அவர்கள் எப்போதும் செய்வதைப் போன்று ஆபத்தை நோக்கிச் செல்வதால் எஞ்சிய நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகப் பிரதம மந்திரி கனேடியர்களுக்கு நினைவுபடுத்தினார்.

உள்நாட்டில் கோவிட்-19 நெருக்கடிக்கு எதிரான நடவடிக்கையாகக் கனேடிய ஆயுதப் படைகளின் 500 க்கும் அதிகமான உறுப்பினர்கள் குபெக்கின் மொன்றியோலிலும், சுற்றுப் பகுதிகளிலும் உள்ள 13 நீண்டகால பராமரிப்பு நிலையங்களுக்கு விரைவில் அனுப்பப்படுவார்கள். கனேடிய ஆயுதப் படைகளின் அணிகள் இந்த வாரத்தின் முற்பகுதியில் ஒன்றாரியோவில் உள்ள ஐந்து நீண்டகால பராமரிப்பு நிலையங்களில் உதவி புரிவதற்கு அனுப்பப்பட்டன.

உள்நாடாக இருந்தாலும், வெளிநாடாக இருந்தாலும் கனேடிய ஆயுதப் படைகளில் உள்ள பெண்களும் ஆண்களும் கனேடியர்களின் விழுமியங்களையும், வீரத்தையும் உறுதியாக வெளிப்படுத்திக் கனடாவின் நோக்கங்களைச் செயற்படுத்துகிறார்கள். கனேடியர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதுடன், இழந்துவிட்ட தோழர்களைக் குடும்பத்தினருக்கும், நாட்டிற்குமாக மீட்கலாமென்ற அவர்களது நம்பிக்கையையும் பகிர்ந்து கொள்கிறார்கள்” என்றார்