வெளி நாட்டு கட்சிகள் இலங்கையில் கட்சி அமைக்க முடியாது- மஞ்சுல கஜநாயக்க

இலங்கையில் புதிய அரசியல் கட்சி ஒன்றினை ஸ்தாபிக்க இந்தியாவினால் முடியாது என தேர்தல்கள் வன்முறை கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி இலங்கையில் ஒரு கட்சியை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த தேர்தல்கள் வன்முறை கண்காணிப்பு நிலையத்தின்  தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க, நாடாளுமன்ற தேர்தல் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் பிரகாரம் அவ்வாறு செய்ய எந்த சட்ட கட்டமைப்பும் இல்லை என குறிப்பிட்டார்.

இருப்பினும் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் இத்தாலி, பிரித்தானியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் கட்சிக்கான அலுவலகங்களை நிறுவியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் மத்தியில் தங்கள் அரசியல் கருத்துக்களை பரப்புவதற்கும் கட்சிக்கு ஆதரவாளர்கள் மூலம் நிதிகளைப் பெறுவதுமே இவ்வாறு வெளிநாடுகளில் பதிவு செய்யப்படுவதாகவும் மஞ்சுல கஜநாயக்க தெரிவித்தார்.

இருப்பினும் அத்தகைய கட்சியை பதிவு செய்ய இலங்கையில் எந்தவொரு சட்ட கட்டமைப்பும் இல்லை அல்லது அத்தகைய கட்சியின் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தேர்தல்கள் வன்முறை கண்காணிப்பு நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார்.

அதே நேரம், வேறு நாடு ஒன்றின் கட்சி ஒன்றுக்கு எமது நாட்டில் பதிவு செய்வதற்கோ தேர்தலில் போட்டியிடுவதற்கோ முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.