மேய்ச்சல் தரை அபகரிப்பால் உணவின்றி உயிரிழக்கும் மாடுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இருவரை அப்பகுதியில் அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபட்டவர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் அவர்கள் நீதிமன்றில்  முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் மகா ஓயா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, 14நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் காடுகளுக்குள் கால்நடை பண்ணையாளர்கள் தங்களது மாடுகளை மேய்த்துவரும் வேளையில், ஒரு சில மாடுகள் அத்துமீறிய பயிர்ச் செய்கையாளர்களின் பயிர்களுக்குள் செல்லும்போது அந்த மாடுகளை அவர்கள் பிடித்து கட்டிவைத்துள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் விகாரையொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விகாரைக்கு அருகில் உள்ள காணியில் தமது மாடுகளை கட்டிவைத்துள்ளதாகவும்  அவற்றினை வழங்க மறுத்து வருவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரையில் 85இற்கும் மேற்பட்ட மாடுகள் இவ்வாறு பிடிக்கப்பட்டு கட்டிவைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கரடினயாறு காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ள போதிலும், இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேய்ச்சல் தரைகள் இல்லாத காரணத்தினால் தொடர்ந்தும் மாடுகளை காடுகளுக்குள் மேய்ச்சலுக்கு விடுவதன் காரணமாக மாடுகளின் இறப்பு அதிகரித்துவருவதாகவும், மேலும் உணவு இல்லாத காரணத்தினால் இறப்புகள் அதிகமாக உள்ளதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.