இனப்படுகொலைக்கு நீதி வேண்டி உணவு தவிர்ப்பு போராட்டம்

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார் என்பவர் சாகும்வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தனது போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,  “ஐ.நா மனித உரிமை பேரவையில் மீண்டும் சிறீலங்காவுக்கு கால அவகாசத்தை வழங்கி சிறீலங்காவின் நீதியற்ற உள்ளுர் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் நீதியை முழுமையாக நீர்த்துப்போக செய்யும் அதே வேளை, தற்போது தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை சிறீலங்கா பேரினவாத அரசு தொடர்வதற்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் மனித உரிமை பேரவையில் நான் வாழும் பிரித்தானியா நாட்டின் தலைமையில் சிறீலங்கா குறித்து இணைத்தலைமை நாடுகள் இணைந்து தீர்மானத்தை முன்வைக்கவுள்ள செய்தி உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கும் மனித நேயத்தை நேசிக்கும் அனைவருக்கும் தாயகத்தில் போராடி வரும் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் மன வேதனையையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.

இந்நிலையில், எமது தாயகத்தில் வாழும் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் சாகும் வரையிலான உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் உலக தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.