அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரம் – வங்கதேச எழுத்தாளர் சிறையில் மரணம்

சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்ததற்காக, கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டாக சிறையில் இருந்த வங்கதேச எழுத்தாளர் சிறையில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின் போது, தவறான நிர்வாகம் மற்றும் ஊழலில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி ஈடுபட்டதாக  காட்டூன் மற்றும் கருத்து பகிர்ந்த குற்றச்சாட்டில் முஸ்டாக் அகமது உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

“ஒற்றுமை, நிதி நடவடிக்கைகள், பாதுகாப்பு, மத விழுமியங்கள் அல்லது நாட்டின் பொது ஒழுக்கம்” ஆகியவற்றை மீறியதற்காக கடந்த 2018ஆம் அண்டு கொண்டு வரப்பட்ட டிஜிட்டல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முஸ்டாக் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே அவர் சிறையில் தனது 54ஆவது வயதில் மரணம் அடைந்துள்ளார். அவரது மரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கடந்த ஓராண்டில் மட்டும் வங்கதேச அரசாங்கத்தை விமர்சித்ததற்காக பத்திரிகையாளர்கள், மாணவர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட 138 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஆசிய மனித உரிமை ஆணையம்  குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.