தமிழகம், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்களிப்பு – பரப்புரைகள் முடிவுக்கு வந்தது

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்.19) நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் திரிபுரா மாநிலம் ராம்நகர் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் நாளை நடக்க உள்ளது.

தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் உட்பட 102 தொகுதிகளிலும் மொத்தம் 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் திமுக, அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நான்குமுனை போட்டி நிலவுகிறது.

கடந்த மார்ச் 31-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். கடந்த 17 நாட்களாக தமிழகத்தில் அனல்பறக்க நடந்த பிரச்சாரம், நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று மாலை தங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி, தொகுதி வாக்காளர்கள் அல்லாத அனைவரும் அங்கிருந்துவெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.

நேற்று மாலை முதல் அனைத்து வகையான பிரச்சாரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் உள்ள 68,320 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.